மருந்துக்குக் கூட சவால் இல்லை; கோலி 10வது டக் அடித்த நாளில் இந்தியா 407 ரன்கள் குவிப்பு

By இரா.முத்துக்குமார்

இந்தூர் டெஸ்ட் போட்டி பாசாங்காகக் கூட எந்த வித சவாலையும் இந்திய அணிக்கு அளிக்காத டெஸ்ட் போட்டியாக உள்ளது, இதில் இனியும் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. வங்கதேச சம்பிரதாயங்கள் எப்போது முடித்து வைக்கப்படும் என்ற காலம் பற்றிய கேள்வியே எஞ்சியுள்ளது.

வங்கதேச அணியில் இந்தப் பிட்சில் மனமும் கை கால்களும் உடையாமல் அருமையாக வீசினார் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் அபு ஜயீத், இவர் 108 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்த பிட்சில் அளப்பரிய ஒரு பந்து வீச்சாகும் இதனை பாராட்ட எந்த வர்ணனையாளரும் அங்கு இல்லை. மாறாக சொத்தைப் பந்துகளை இந்திய பேட்ஸ்மென்கள் விரட்டும் பவுண்டரிகளை விதந்தோதி ஏதோ ஆகப்பெரிய ஷாட்கள் போல் வர்ணனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரேநாளில் 407 ரன்களை விளாசிய இந்திய அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 493 ரன்களை எடுத்துள்ளது. 76 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 60 ரன்கள் எடுத்து ஜடேஜாவும் 3 பெரிய சிக்சர்களுடன் 10 பந்துகளில் 25 எடுத்து உமேஷ் யாதவ்வும் களத்தில் நிற்கின்றனர். நாளை டிக்ளேர் செய்வதுதான் நல்லது, இதற்கு மேலும் இந்திய பேட்டிங்கைப் பார்ப்பது திகட்டவே செய்யும், ஆனால் அவரவர்கள் ரெக்கார்டை ஏற்றிக் கொள்ள இதுவே சரியான தொடர், எனவே ஜடேஜா ‘நான் ஒரு செஞ்சுரி போட்டுக்கறேனே’ என்று விராட் கோலியிடம் கண்ஜாடை அனுமதியை இந்நேரம் வாங்கியிருப்பார்.

அதற்கு இன்னும் 40 ரன்கள் தேவை ஜடேஜாவுக்கு, இவர் 40 ரன்கள் எடுப்பதற்குள் உமேஷ் யாதவ் இன்று போல் ஆடினால் அவரும் 50-60 ரன்களுக்கு வந்து விட்டால் ஒய் நாட் அவரும் ஒரு சதம் பார்த்துக் கொண்டால் அதில் என்ன தவறிருக்க முடியும்?

ஒரேநாளில் 400 ரன்களுக்கும் மேல் இந்திய அணி 3வது முறையாகக் குவித்துள்ளது. 343 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்பின்னர்கள் தைஜுல் இஸ்லாம், மெஹதி ஹசன் மிராஸ் இருவருமே மயங்க் அகர்வால் கையில் வசமாகச் சிக்கினர். இருவரும் மொத்தமாக 33 பவுண்டரிகளைக் கொடுத்தனர், இதில் அகர்வால் மட்டும் 19 பவுண்டரிகளை விளாசினார்.

வினோத் காம்ப்ளி 5 இன்னிங்ஸ்களில் 2 இரட்டைச் சதங்களை எடுக்க, 12 இன்னிங்ஸ்களில் மயங்க் 2வது இரட்டைச் சதம் எடுத்துள்ளார். டான் பிராட்மேன் 13 இன்னிங்ஸ்களில் 2வது இரட்டைச் சதம் எடுத்தார்.

அபுஜயீத் இன்று காலை நல்ல லெந்தில் வீசினார், களவியூகம் கச்சிதமாக அமைய புஜாரா 54 ரன்களில் வைடு பந்தை ஸ்லாஷ் செய்து 4வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். 4வது ஸ்லிப்பா, அப்ப வேகப்பந்துக்கு சாதகமாக இருந்தது என்று தப்புக் கணக்குப் போட வேண்டாம், முதல் ஸ்லிப்புக்கு அடுத்தது 4வது ஸ்லிப். விராட் கோலி தன் டெஸ்ட் வாழ்க்கையில் 10வது டக்கை அடித்து வெளியேறினார், அருமையான அபுஜயேத் இன்ஸ்விங்கரில் அவர் பின் கால்காப்பில் வாங்கி வெளியேறினார், அதுவும் ரிவியூவில்தான்.

ரஹானே கோபமாக எந்த ஒரு ஷாட்டையும் ஆட வேண்டிய நிலையே ஏற்படவில்லை, சவால் இருந்தால்தானே? பூமேடை பிட்சில், அர்ச்சனைப்பூக்கள் பந்து வீச்சில் அனாயசமாக ஆட வேண்டியதுதானே? அதைத்தான் செய்தார் ரஹானே 86 ரன்கள் எடுத்து ‘வெல் டிசர்வ்டு ஹண்ட்ரட்’ என்று வழக்கமாகக் கூறப்படும் சதம் எடுப்பதற்கு முன்பாக அவர் அபு ஜயீத் பந்தை கட் ஆடி டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அகர்வால், ஜடேஜா ஜோடி 123 ரன்களை 5வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். அகர்வால் 330 பந்துகளில் 28 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 243 ரன்கள் எடுத்து டீப்பில் ஆட்டமிழந்தார். ஆட்ட முடிவில் இந்திய அணி 493/6. ஜடேஜா 60 நாட் அவுட், உமேஷ் யாதவ் 25 நாட் அவுட். இந்திய அணி 343 ரன்கள் முன்னிலை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்