ஆசிய, உலக தடகளப் போட்டிகளுக்கு ஒடிசா வீராங்கனை தூத்தி சந்த் தகுதி

By செய்திப்பிரிவு

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய ஜூனியர் தடகளப் போட்டியின் மகளிர் 100 மீ. ஓட்டத்தில் ஒடிசா வீராங்கனை தூத்தி சந்த் தேசிய சாதனை படைத்ததோடு, ஆசிய மற்றும் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளார்.

12-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய ஜூனியர் தடகளப் போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதில் மகளிர் 100 மீ. ஓட்டத்தில் ஒடிசா வீராங்கனை தூத்தி சந்த், 11.63 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் 100 மீ. ஓட்டத்தில் இருந்த 18 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்துள்ளார் தூத்தி சந்த்.

முன்னதாக சரஸ்வதி தேய் 1996-ல் 11.75 விநாடிகளில் இலக்கை எட்டியதே தேசிய சாதனையாக இருந்தது.இதுதவிர தைவானில் நடைபெறவுள்ள ஆசிய ஜூனியர் தடகளப் போட்டி மற்றும் அமெரிக்காவின் யூஜினில் நடைபெறவுள்ள உலக ஜூனியர் தடகளப் போட்டி ஆகிய இரண்டிலும் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் தூத்தி சந்த். இதேபிரிவில் 2-வது இடத்தைப் பிடித்து (12.4 விநாடிகள்) வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை அர்ச்சனா ஆசிய தடகளப் போட்டிக்கான தகுதிச்சுற்று நேரத்தை எட்டினாலும் அவர் 20 வயதை எட்டிவிட்டதால் ஆசிய ஜூனியர் தடகளப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார். மேற்கு வங்க வீராங்கனை ஹிமாஸ்ரீ ராய் (12.20 விநாடிகள்) வெண்கலப் பதக்கம்வென்றார்.

நவ்தேஜ்தீப் தகுதி

ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் பஞ்சாப் வீரர் நவ்தேஜ் தீப் சிங் 18.56 மீ. தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றதோடு ஆசிய மற்றும் உலக தடகளப் போட்டிகளில் பங்கேற்பதை உறுதி செய்தார். காமன்வெல்த் யூத் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான நவ்தேஜ்தீப், உலக தடகளப்போட்டியில் பங்கேற்க தகுதிபெற்ற 2-வது இந்தியர் ஆவார்.

இதேபிரிவில் டெல்லி வீரர் சக்தி சோலங்கி 17.93 மீ தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றதோடு, ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். ஆனாலும் உலக தடகளப் போட்டிக்கான தகுதிச்சுற்று தூரத்தைவிட 0.33 மீ தூரம் குறைவாக வீசியதால் உலக தடகளப் போட்டிக்கு தகுதிபெற முடியவில்லை. இவர் உலக யூத் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் வீரர் மல்கீத் சிங் 17.38 மீ. தூரம் குண்டு எறிந்து வெண்கலம் வென்றார்.

பிங்கி கலக்கல்

மகளிர் 1500 மீ. ஓட்டத்தில் ஹரியாணா வீராங்கனை பிங்கி , கேரளத்தின் முன்னணி வீராங்கனையான சித்ராவை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்தார். அவர் 4 நிமிடம், 27.26 விநாடிகளில் இலக்கை எட்டினார். இதன்மூலம் 15 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த பிங்கி, உலக தடகளப்போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்தார். ஆனால் ஆசிய தடகளப் போட்டிக்கான தகுதி நேரத்தை அவர் எட்டாததால் அதில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.

சித்ரா (4:30.19) 2-வது இடத்தையும், டெல்லி வீராங்கனை பிரீத்தி லம்பா (4:35.70) 3-வது இடத்தையும் பிடித்து முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை தட்டிச் சென்றனர். ஆடவர் 1,500 மீ ஓட்டத்தில் கேரளத்தின் முகமது அப்சல் 3 நிமிடம், 52.44 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். அசாமின் அஜய் குமார் சரோஜ் (3:52.60), மேற்கு வங்கத்தின் சசி பூஷண் (3:52.65)ஆகியோர் முறையே வெள்லி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

மகளிர் நீளம் தாண்டுதலில் பஞ்சாப் வீராங்கனை பூமிகா தாக்குர் (5.94 மீ. தூரம்), தேசிய ஜூனியர் சாம்பியனான மேற்கு வங்கத்தின் பாய்ராபி ராய் (5.75)வெள்ளிப் பதக்கமும், தமிழக வீராங்கனை கார்த்திகா (5.74) வெண்கலமும் வென்றனர்.

ஆடவர் உயரம் தாண்டுதலில் கேரளத்தின் ஸ்ரீனித் மோகன் (2.11 மீ. தூரம்), அஜய்குமார் (2.04) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்தனர். ஆடவர் ஈட்டி எறிதலில் பஞ்சாபின் சரப்ஜித் சிங் (71.07 மீ), குஜராத்தின் பைரேந்திர குமார் (70.79), ஹரியாணாவின் பர்விந்தர் குமார் (69.06 மீ) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.

மகளிர் ஈட்டி எறிதலில் ஹரியாணாவின் குமாரி ஷர்மி (47.07), கேரளத்தின் பிரஜிதா (41.86), ஒடிசாவின் தமயந்தி (36.15) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.

ஷர்வன் தகுதி

வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்ற ஆடவர் 5000 மீ. ஓட்டத்தில் 14 நிமிடம், 54.51 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றதோடு, தைவானில் நடைபெறவுள்ள ஆசிய ஜூனியர் தடகளப் போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றார் ஹரியாணா வீரர் ஷர்வன் கர்ப்.

இந்தப் போட்டியில் ஷர்வன், அபிஷேக் பால் (அசாம்) ஜேதிந்தர் குமார் (பஞ்சாப்) ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. ஆசிய யூத் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவரான அபிஷேக் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்தபோதும், ஒரு கட்டத்துக்குப் பிறகு வேகம் பிடித்த ஷர்வன், அபிஷேக்கை பின்னுக்குத் தள்ளினார். ஜேதிந்தர் (14:55.24) வெள்ளிப் பதக்கமும், அபிஷேக் (14:56.23) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

சஞ்ஜீவினி புதிய சாதனை

மகளிர் 5000 மீ. ஓட்டத்தில் மகாராஷ்டிர வீராங்கனை சஞ்ஜீவனி ஜாதவ் 17 நிமிடம், 11.27 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தை வென்றதோடு, புதிய (பெடரேஷன் கோப்பை) சாதனையையும் படைத்தார். இதற்கு முன்னதாக 5000 மீ. ஓட்டத்தில் மேற்கு வங்க வீராங்கனை சஹானாரா காட்டர்ன் 17 நிமிடம், 30.48 விநாடிகளில் இலக்கை எட்டியிருந்ததே தேசிய சாதனையாக இருந்தது. இப்போது அதை சஞ்ஜீவனி ஜாதவ் முறியடித்துள்ளார்.

இதே பிரிவில் மத்தியப் பிரதேச வீராங்கனை நேஹா (17:46.43) வெள்ளிப் பதக்கமும், மற்றொரு மகாராஷ்டிர வீராங்கனை ஜனாபாய் ஹிர்வே (18:07.58) வெண்கலப் பதக்கமும் வென்றனர். சஞ்ஜீவனி தேசிய சாதனை படைத்தபோதும், ஆசிய ஜூனியர் தடகளப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. ஆசிய தடகளப் போட்டிக்கான தகுதிச்சுற்று நேரத்தை (16:32.02) அவர் எட்டவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்