தோனி, டுபிளேசி அதிரடியில் பெங்களூரை ஊதியது சென்னை

By செய்திப்பிரிவு

பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தன் கடைசி லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரை எளிதில் வீழ்த்தி இரண்டாவது இடத்தை ஏறக்குறைய உறுதி செய்தது

கடைசி ஆட்டத்திலாவது வெற்றியுடன் முடிக்கலாம் என்ற பெங்களூரின் கனவு பொய்த்துப்போனது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட பெங்களூரு அணி கோலியின் அபார, அதிரடி அரைசதத்தின் மூலம் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து பெங்களூரை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஊதியது.

ஜகதி வீசிய 18வது ஓவரில் முதல் பந்தை தோனி ஸ்வீப் செய்து பவுண்டரிக்கும் பிறகு ஷாட் பிட்ச் பந்தை தூக்கி லாங் ஆனில் சிக்ஸிற்கும் விரட்டினார். பிறகு ஒரு ரன்னை எடுத்து டுபிளேசியிடம் ஸ்ட்ரைக் கொடுத்தார். அவரோ மேலேறி வந்து லாங் ஆஃபில் ஒரு சிக்சரை அடித்து அரைசதம் எடுத்தார், அதுவே வெற்றி ரன்களாகவும் அமைந்தது.

முன்னதாக துவக்கத்திலேயே வைன் ஸ்மித் மற்றும் டுபிளேசி அதிரடியாக ஆடினர். பவுண்டரிகளும் சிக்சர்களும் பறக்க 4.2 ஓவர்களில் 57 ரன்கள் விளாசப்பட்டது. 17 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சர் அடித்து 34 ரன்கள் விளாசிய வைன் ஸ்மித் ராம்பால் வீசிய ஸ்லோ பந்தை கெந்தி கோலி கையில் கொடுத்து வெளியேறினார்.

ரெய்னாவுக்கு இன்று பந்துகள் சரியாகச் சிக்கவில்லை. 2 பவுண்டரிகளை மட்டுமே அவர் அடுத்தடுத்து அடித்தார். 18 ரன்கள் எடுத்த நிலையில் யுவ்ராஜ் பந்தை மேலேறி வந்து அடிக்க நினைத்துக் கோட்டைவிட்டு ஸ்டம்ப்டு ஆகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

9.3 ஓவர்களில் 85/2 என்ற நிலையில் தோனி களமிறங்கினார். அவருக்கு காலில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் துவக்கத்தில் தடுமாற்றாம் அடைந்தார். அப்போது யுவ்ராஜ் பந்தில் ஒரு அருமையான ஸ்டம்பிங் வாய்ப்பை பெங்களூரு விக்கெட் கீப்பர் கோட்டை விட்டார். அதுவே ‘பை’-யாக 4 ரன்களுக்கும் சென்றது. அடுத்த இரண்டு யுவராஜ் பந்தை தோனி 2 மிகப்பெரிய சிக்சர்களாக மாற்றி யுவ்ராஜின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார்.

அதன் பிறகு தோனி நிறுத்தவில்லை. 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் அவர் 28 பந்துகளில் 49 நாட் அவுட். டுபிளேசி 54 நாட் அவுட். பெங்களூர் அணியில் சாஹல், யுவ்ராஜ் சிறப்பாக வீசினர்.

பெங்களூர் அணியின் பேட்டிங் சொதப்பலாக அமைந்தது. மீண்டும் முதல் 15 ஓவர்களில் 100 ரன்களையே எட்ட முடிந்தது. யுவராஜ் சிங் 25 ரன்கள் எடுத்து வெளியேற, கோலி 49 பந்துகளில் 2 பவுண்டரி 5 அற்புதமான சிக்சர்களை அடித்து 73 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். டிவிலியர்ஸ் இன்று சோபிக்கவில்லை 10 ரன்களில் நெஹ்ரா பந்தில் பவுல்டு ஆனார். கோலியின் அதிரடியினால் கடைசி 5 ஓவர்களில் 54 ரன்கள் வந்தது.

ஆஷிஷ் நெஹ்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மோகித் சர்மா சிக்கனம் காட்டினார். ஆட்ட நாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார்.

கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியை பலமாக வீழ்த்தினால் மட்டுமே சென்னையைப் பின்னுக்குத் தள்ளி 2 வது இடத்திற்கு முன்னேற முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

23 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்