பிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை

By இரா.முத்துக்குமார்

கிரிக்கெட் விளையாட்டு வரலாற்றில் நிகழ்ந்த துர்மரணம் ஒன்று உண்டென்றால் அது ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் மரணமாகவே இருக்கும். அவரது கிரிக்கெட் பயணம் மிகவும் ஆரோக்கியமாக வளர்ந்து வந்த நேரத்தில் இந்தத் துயரம் ஏற்பட்டு கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவரது கிரிக்கெட் பயணத்தின் முழு விபரம் இதோ:

இவரது முழு பெயர் பிலிப் ஜோயெல் ஹியூஸ். நவம்பர் 30, 1988-ல் அவர் நியூசவுத்வேல்ஸில் பிறந்தார். இன்னும் 3 நாட்களில் அவருக்கு பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

26 டெஸ்ட் போட்டிகளில் 32.65 என்ற சராசரியுடன் 1535 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்த 160 ரன்களாகும். 3 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் எடுத்துள்ளார்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில், 25 ஆட்டங்களில் 826 ரன்கள். 2 சதங்கள், 4 அரைசதங்கள். சராசரி 35.91.

18 வயதில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகம்:

தனது 18-வது வயதில் நியூசவுத்வேல்ஸ் அணிக்காக டாஸ்மேனியா அணிக்கு எதிராக புரா கோப்பை போட்டியில் முதன்முதலில் அறிமுகமானார். தொடக்க வீரராகக் களமிறங்கி 51 ரன்கள் எடுத்தார்.

இளம் வயதில் முதல் தர சதம் எடுத்து சாதனை:

பிப்ரவரி 2008-ல் புரா கோப்பை இறுதிப் போட்டியில் விக்டோரியா அணியை வெற்றி கொண்ட அந்த போட்டியில் 19-வயதில் சதம் எடுத்த வீரர் என்ற ஆஸ்திரேலிய சாதனையை நிகழ்த்தினார்.


இளம் கிரிக்கெட் வீரருகான பிராட் மேன் விருது:

பிப்ரவரி, 2009-ல் இளம் கிரிக்கெட் வீரருக்கான பிராட்மேன் விருதைப் பெற்றார் பிலிப் ஹியூஸ். அப்போதுதான் மேத்யூ ஹெய்டன் ஓய்வு அறிவிக்க, அவரது மிகப்பெரிய இடத்தை இந்த இளம் பிலிப் ஹியூஸ் இட்டு நிரப்ப ஆஸ்திரேலிய அணிக்கு அழைக்கப்பட்டார். ஜொகான்னஸ்பர்க் மைதானத்தில் டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல், மகாயா நிடினி ஆகியோருக்கு எதிராக தொடக்க வீரராகக் களமிறங்கினார். ஆனால் முதல் இன்னிங்ஸில் 4-வது பந்தில் டேல் ஸ்டெய்ன் பந்தில் பவுச்சர் கேட்ச் பிடிக்க வெளியேறினார்.

2-வது இன்னிங்சில் 121 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 75 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா 207 ரன்களில் மடிந்தது. ஆனால் பிலிப் ஹியூஸ் 75 ரன்கள். அனைத்து ஷாட் பிட்ச் பந்துகளையும் பாயிண்ட், ஸ்லிப் திசையில் தூக்கி அடித்தார் அவர். ஆஸ்திரேலியா அந்தப் போட்டியில் வென்றது. பிலிப் ஹியூஸ் 2-வது இன்னிங்ஸில் 3 கேட்ச்களையும் பிடித்தார்.



2-வது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து சாதனை:

அதே தென் ஆப்பிரிக்க தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்றது. இரு இன்னிங்ஸ்களிலும் சதம் கண்டார் பிலிப் ஹியூஸ், அதாவது 115 மற்றும் 160 ரன்கள். 20 வயதில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து புதிய சாதனை படைத்தார். இது மார்ச் 2009-ல் நடைபெற்றது.

ஆஷஸ் தொடரிலிருந்து நீக்கம்:

2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஷாட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்ததால் ஆஷஸ் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஷேன் வாட்சன் அப்பொது இவருக்குப் பதிலாக சைமன் கேடிச்சுடன் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்டார்.

மீண்டும் 2010-ல் டெஸ்ட் வாசம்:

ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆட அழைக்கப்பட்டார். காரணம் அப்போது கேடிச் காயமடைந்தார். பிறகு வாட்சன் காயமடைய வெலிங்டனில் நியூசிலாந்துக்கு எதிராக 2-வது இன்னிங்ஸில் வெற்றி பெற 106 ரன்கள் தேவை என்ற நிலையில், 75 பந்துகளில் 12 பவுண்டரி ஒரு சிக்சருடன் 86 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

டிசம்பர் 2010:

சைமன் கேடிச்சிற்கு காயம் ஏற்பட மீண்டும் ஆஷஸ் தொடரில் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கு அழைக்கப்பட்டார். ஆனால் மீண்டும் ஷாட் பிட்ச் துர்கனவு அவரைத் துரத்தியது சரியாக ஆட முடியவில்லை.

சர்ச்சைக்குரிய முறையில் மீண்டும் 2011-ல் ஆஸ்திரேலிய அணியில்:

சைமன் கேடிச் கிரிக்கெட் வாழ்வை கிரெக் சாப்பல் முடித்து வைக்க பிலிப் ஹியூஸ் தனது டெஸ்ட் இடத்தைத் தக்க வைத்தார். இது அப்போது சர்ச்சையானது. ஆனால் அந்தத் தொடரில் இலங்கைக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில், கொழும்புவில் 126 ரன்கள் எடுத்து தனது 3-வது டெஸ்ட் சதத்தை 2 ஆண்டுகள் கழித்து எடுத்தார் பிலிப் ஹியூஸ்.

2011-ஆம் ஆண்டு இவரது பலவீனத்தை வெளிக்கொணர்ந்த நியூசி. பவுலர் கிறிஸ் மார்டின்:

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸ்களிலும் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மார்ட்டினின் வெளியே செல்லும் பந்துகளை தொட்டு ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

மீண்டும் டிசம்பர் 2012:

டிசம்பர் 2012-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் ஆடி, இரண்டு அரைசதங்களை எடுத்தார்.



ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியில் சதம் எடுத்த ஆஸி. வீரர் என்ற சாதனை:

நீண்ட கால கனவிற்குப் பிறகு ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டு ஆடவைக்கப்பட்டார். மெல்பர்னில் இவர் இலங்கைக்கு எதிராக அறிமுக ஒருநாள் போட்டியில் சதம் எடுத்து புதிய ஆஸ்திரேலிய சாதனை படைத்தார். பிறகு ஹோபார்ட்டிலும் இலங்கைக்கு எதிராக 138 ரன்கள் எடுத்தார்.

அனைத்து வடிவங்களிலும் சிறந்து விளங்கியதற்காக விருது:

பிப்ரவரி 2013-ல் ஆஸ்திரேலியாவின் சிறந்த உள்நாட்டு வீரர் என்ற விருதைப் பெற்றார். அந்த ஆண்டு அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 1108 ரன்களை எடுத்தார் பிலிப் ஹியூஸ்.

தொடக்க வீரர் நிலையிலிருந்து 6-ஆம் இடத்திற்கு இறக்கம்:

2013-ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் அவர் 6ஆம் நிலையில் களமிறங்கி முதல் டெஸ்ட் போட்டியில் 81 ரன்கள் எடுத்தார். ஆனால் அடுத்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒரு ரன்னை எடுத்ததால் மீண்டும் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

லிஸ்ட் ஏ ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் கண்ட முதல் ஆஸி. வீரர்:

ஆஸ்திரேலியா ஏ அணிக்காக ஜூலை 2014-ல் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக டார்வின் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 202 ரன்கள் அடித்து இரட்டை அடித்த முதல் ஆஸி.வீரரானார்.

கடைசியாக அக்டோபர் 12, 2014-ல் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக ஒருநாள் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

உலகம்

9 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்