இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

By செய்திப்பிரிவு

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே நகரில் நடந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 600 ரன்களைக் குவித்தது. இதைத்தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் திலுருவன் பெரேரா அதிகபட்சமாக 92 ரன்களைக் குவித்தார்.

இலங்கை அணி, மிகக்குறைந்த ரன்களைப் பெற்றபோதும் அதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாலோ ஆன் வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடவந்த இந்திய அணி, 3-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை எடுத்திருந்தது. விராட் கோலி 76 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்நிலையில் நேற்று அஜிங்க்ய ரஹானேவுடன் சேர்ந்து களமிறங்கிய விராட் கோலி, ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இலங்கை அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். மிகக் குறைந்த ஓவர்களில் அதிக ரன்களைக் குவித்து ஆட்டத்தை டிக்ளேர் செய்வதே அவரது இலக்காக இருந்தது. அவரது இந்த எண்ணத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் அஜிங்க்ய ரஹானேவும் மிக விரைவாக ரன்களைக் குவித்தார். அதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென்று உயர்ந்தது. 39 பந்துகளில் இந்த ஜோடி 50 ரன்களைக் குவித்தது.

விராட் கோலி சாதனை

இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக விளங்கிய கேப்டன் விராட் கோலி, 133 பந்துகளில் சதம் அடித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த 17-வது சதமாகும். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 17 சதங்களைக் குவித்த திலிப் வெங்சர்காரின் சாதனையை சமன் செய்தார். 17 சதங்களை அடிக்க வெங்சர்க்கார் 116 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்தார். ஆனால் விராட் கோலி தனது 58-வது டெஸ்ட் போட்டியிலேயே அந்த சாதனையை சமன் செய்து சாதனை படைத்துள்ளார்.

விராட் கோலி சதம் அடித்த சிறிது நேரத்திலேயே இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களாக இருந்தது. விராட் கோலி 103 ரன்களுடனும், ரஹானே 23 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்தியாவை வெற்றி கொள்ள வேண்டுமானால் 550 ரன்களை எடுக்கவேண்டும் என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி, 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால் அது அத்தனை சுலபமில்லை என்பதை இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே இலங்கைக்கு உணர்த்தினர். இலங்கையின் தொடக்க ஆட்டக்காரரான உபுல் தரங்காவை (10 ரன்கள்) மொகமது ஷமியும், குணதிலகாவை (2 ரன்கள்) உமேஷ் யாதவும் அவுட் ஆக்க 2 விக்கெட்டுக்கு 29 ரன்கள் என்று இலங்கை அணி சிக்கலில் மாட்டிக்கொண்டது.

கருணாரத்னே போராட்டம்

இந்த இக்கட்டான நிலையில் இருந்து இலங்கை அணியை மீட்கும் முயற்சியில் கருணாரத்னே ஈடுபட்டார். 3-வது விக்கெட்டுக்கு மெண்டிஸுடன் ஜோடி சேர்ந்த அவர், தன்னால் இயன்றவரை போராடினார்.

இந்திய பந்து வீச்சாளர்களின் கடும் முற்றுகைக்கு இடையே இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 79 ரன்களைச் சேர்த்தது. உறுதியான பேட்டிங் மூலம் இந்தியாவுக்கு சவால் விட்ட கருணாரத்னே, 81 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார். அதே நேரம் கருணாரத்னேவுக்கு துணையாக இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலை நீண்டநேரம் சமாளித்த மெண்டிஸ், ஜடேஜாவின் பந்தில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 71 பந்துகளை எதிர்கொண்ட மெண்டிஸ் 36 ரன்களைச் சேர்த்தார்.

மெண்டிஸை அவுட் ஆக்கிய சிறிது நேரத்திலேயே மேத்யூஸின் (2 ரன்கள்) விக்கெட்டையும் ஜடேஜா கைப்பற்ற, இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 116 ரன்கள் என்று மீண்டும் நிலைகுலைந்தது. இந்நிலையில் கருணாரத்னேவுடன் திக்வெல்லா ஜோடி சேர்ந்தார். தோல்வியைத் தவிர்க்கும் போராட்டத்தில் இந்த ஜோடி தீவிரமாக ஈடுபட்டது. இதனால் தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்திருந்தது.

தீவிர தாக்குதல்

தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணியின் பந்துவீச்சில் ஆவேசம் கூடியது. 4-வது நாளிலேயே ஆட்டத்தை முடிக்கவேண்டும் என்ற உத்வேகத்துடன் அவர்கள் பந்துவீசினர். அவர்களின் தீவிர தாக்குதலை இலங்கை பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியவில்லை. 67 ரன்களை எட்டியிருந்த நிலையில் அஸ்வினின் பந்துவீச்சில் திக்வெல்லா வீழ்ந்தார். அவர் 67 ரன்களைச் சேர்த்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே கருணாரத்னேவும் 97 ரன்களில் வீழ்ந்தார். அவரது விக்கெட்டையும் அஸ்வின் கைப்பற்றினார்.

கருணாரத்னே அவுட் ஆன பிறகு இலங்கையை சாய்ப்பது இந்தியாவுக்கு சுலபமானது. நுவன் பிரதீப், குமாரா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக, ஹெராத்தும், குணரத்னேவும் காயத்தால் ஆட முடியாமல் போக 245 ரன்களில் இலங்கையின் 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். மொகமது ஷமிக்கும், உமேஷ் யாதவுக்கும் தலா 1 விக்கெட் கிடைத்தது. ஆட்ட நாயகனாக ஷிகர் தவண் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

உலகம்

7 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்