இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: வாழ்வா, சாவா ஆட்டத்தில் வெல்வது யார்?

By செய்திப்பிரிவு





இலங்கை அணி ஏறக்குறைய இறுதிச்சுற்றை உறுதி செய்துவிட்ட நிலையில், இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் மற்றொரு அணி இந்தியாவா அல்லது பாகிஸ்தானா என்பதில் இப்போது போட்டி நிலவுகிறது. இன்றைய போட்டியில் தோற்கும் அணி ஏறக்குறைய இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்துவிடும்.

போனஸ் புள்ளியோடு சேர்த்து 5 புள்ளிகளை வைத்துள்ள பாகிஸ்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில் இறுதிச்சுற்றை உறுதி செய்துவிடும். அதேநேரத்தில் 4 புள்ளிகளை மட்டுமே வைத்துள்ள இந்திய அணி இந்தப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்துவதோடு, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசிப் போட்டியிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.

மிரட்டும் கோலி...

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தொடர்ந்து சொதப்பி வருவது கவலையளிப்பதாக உள்ளது. தற்போதைய நிலையில் அவரை விட்டால் வேறு தொடக்க ஆட்டக்காரரும் இல்லை. கேப்டன் கோலியும் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். எனவே ரோஹித் சர்மா மீண்டும் பார்முக்கு திரும்புவதற்கு இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாகும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண், கேப்டன் விராட் கோலி ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக இவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்தியாவின் ரன் குவிப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலவீனமான மிடில் ஆர்டர்...

இளம் வீரர்களைக் கொண்ட இந்தியாவின் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது. யுவராஜ் சிங், ரெய்னா போன்றவர்கள் இடம்பெறாத நிலையில் முழுக்க முழுக்க இளம் வீரர்களான அஜிங்க்ய ரஹானே, தினேஷ் கார்த்திக், அம்பட்டி ராயுடு ஆகியோரையே நம்பியுள்ளது இந்தியா. ரஹானே, வங்கதேசத்துக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். எனினும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் மூவருமே ஜொலிக்கவில்லை. எனவே பலம் வாய்ந்த பாகிஸ்தானுடனான இந்த ஆட்டத்தில் ராயுடுவுக்குப் பதில் சேதேஷ்வர் புஜாராவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம். புஜாரா அதிரடியாக ரன் சேர்க்காவிட்டாலும், நிலைத்து நின்ற ஆடக்கூடியவர். அதைக் கருத்தில் கொண்டு அவர் ஆடும் லெவனில் சேர்க்கப்படலாம்.

மிஸ்ராவுக்கு வாய்ப்பு?

ஆல்ரவுண்டர் இடத்தில் களமிறக்கப்பட்ட ஸ்டூவர்ட் பின்னி, பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே ஜொலிக்கவில்லை. இலங்கைக்கு எதிராக 3-வது சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் இந்தியா தடுமாறியது. எனவே ஸ்டூவர்ட் பின்னிக்குப் பதிலாக 3-வது சுழற்பந்து வீச்சாளராக அமித் மிஸ்ரா சேர்க்கப்படலாம். மிஸ்ரா பேட்டிங்கிலும் வலு சேர்ப்பார் என்பதால் அவர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. வேகப்பந்து வீச்சில் எவ்வித மாற்றமும் இருக்காது. இந்தியாவின் பீல்டிங் சரியில்லை. இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் 4 கேட்சுகளை கோட்டைவிட்டனர். மேலும் சங்ககாராவுக்கு ஒரு ஸ்டெம்பிங் வாய்ப்பை தினேஷ் கார்த்திக் கோட்டைவிட்டார். இதனால் வாழ்வு பெற்ற சங்ககாரா சதமடித்து ஆட்டத்தின் முடிவை மாற்றிவிட்டார். எனவே இந்திய அணி தனது பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

பலம் சேர்க்கும் மிஸ்பா, உமர்...

பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் கேப்டன் மிஸ்பா உல் ஹக், விக்கெட் கீப்பர் உமர் அக்மல் ஆகியோரையே நம்பியுள்ளது. முகமது ஹபீஸ், அஹமது ஷெஸாத், ஆல்ரவுண்டர் அப்ரிதி என வலுவான பேட்ஸ்மேன்களைக் கொண்டிருந்தாலும், அவர்கள் அனைவருமே பார்மில் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இலங்கைக்கு எதிராக 74 ரன்களும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதமும் அடித்த உமர் அக்மல், இந்திய பௌலர்களுக்கு சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த போட்டியில் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ரன் அவுட்டான கேப்டன் மிஸ்பா, இந்த முறை எச்சரிக்கையோடு விளையாடி பெரிய அளவில் ரன் குவிக்க முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் உமர் குல், ஜூனைத் கான் ஆகியோரை நம்பியுள்ளது பாகிஸ்தான். சுழற்பந்து வீச்சில் பாகிஸ்தானின் மிகப்பெரிய பலமாகத் திகழும் அஜ்மல், ஹபீஸ், அப்ரிதி கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தின் பிரதான கிரிக்கெட் மைதானமான ஷெர்-இ-பங்களா மைதானத்தில் நடை பெறும் இந்தப் போட்டியில் பனி மிகப்பெரிய தாக் கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சையே தேர்வு செய்யும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின. மழையால் பாதிக்கப்பட்ட அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி கண்டது.

இதுவரை...

இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 125 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் பாகிஸ்தான் 71 வெற்றிகளையும், இந்தியா 50 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. 4 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், அஜிங்க்ய ரஹானே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஸ்டூவர்ட் பின்னி, அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது சமி, சேதேஷ்வர் புஜாரா, அமித் மிஸ்ரா, வருண் ஆரோன், ஈஸ்வர் பாண்டே.

பாகிஸ்தான்: மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), ஷர்ஜீல் கான், அஹமது ஷெஸாத், முகமது ஹபீஸ், சோயிப் மசூத், உமர் அக்மல் (விக்கெட் கீப்பர்), ஷாகித் அப்ரிதி, அன்வர் அலி, உமர் குல், சயீத் அஜ்மல், ஜுனைத் கான், முகமது தல்ஹா, அப்துர் ரஹ்மான், பவாட் ஆலம். போட்டி நேரம்: மதியம் 1.30 நேரடி ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்ஷன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்