தென்னாப்பிரிக்கா தொடர்: இளம் அணிக்கு அக்கினிப் பரீட்சை

By அரவிந்தன்

டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் 18ஆம் தேதி தொடங்கவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஒரு விதத்தில் மிகவும் ஆச்சரியமான அணி என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் தூண்களாக விளங்கிவந்த பெரும்பாலானவர்கள் இல்லாத இளம் அணி அது.

சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், வி.வி.எஸ். லட்சுமனன், வீரேந்திர சேவாக், கௌதம் காம்பீர், ஹர்பஜன் சிங் ஆகிய யாரும் அந்த அணியில் இல்லை. ஜாகீர் கான், தோனி ஆகிய இருவரையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இது முழுக்க முழுக்கப் புதிய அணி இல்லை என்றாலும் மிகவும் அனுபவம் அற்ற இளம் அணி என்று சொல்லிவிடலாம்.

இந்திய அணியில் காலந்தோறும் மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் மொத்தமாக மாற்றம் நடந்திருப்பது இப்போதுதான். அதுவும் ஆசியக் கண்டத்துக்கு வெளியே இந்திய அணி அனுப்பும் முதல் இளம் அணி இதுவாகத்தான் இருக்கும்.

தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவணும் முரளி விஜய்யும் இந்திய மண்ணில் நன்றாக ஆடினாலும் வேகமாக எழும்பி வரும் ஆடுகளங்களைக் கொண்ட தென்னாப்பிரிக்காவில் எப்படி ஆடுவார்கள் என்பது முக்கியமான கேள்வி. தொடக்க ஆட்டக்காரர்கள் சிறிதளவாவது தாக்குப்பிடித்து ஆடினால்தான் அடுத்து வருபவர்களால் இன்னிங்ஸை வலுப்படுத்த முடியும் .

விரைவாக முதல் விக்கெட் விழும்போதெல்லாம் ஆற்றுப்படுத்தும் சக்தியாக விளங்கிவந்த ராகுல் திராவிடின் இடத்தை சத்தீஸ்வர் புஜாரா நிரப்புவாரா? 24 ஆண்டுகளாக 4ஆம் இடத்தின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கரின் இடத்தை விராட் கோலி அல்லது அஜிங்க்ய ரஹானே நிரப்புவாரா? அடுத்தடுத்து விக்கெட் விழுந்தாலும் ஆபத்பாந்தவனாகக் களமிறங்கும் லட்சுமணன் தந்த நிம்மதியை ரோஹித் ஷர்மா தருவாரா? கடை நிலை ஆட்டக்காரர்களை வைத்துக்கொண்டு இன்னிங்ஸைக் கரை சேர்க்கும் லட்சுமணனின் அனாயாசமான போராட்டத்தின் தொடர்ச்சியாக ரஹானே அல்லது ஷர்மா விளங்குவாரா?

இந்த இளைஞர்கள் அனைவருமே தங்கள் திறமைகளை நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் கோலியைத் தவிர யாரும் ஆசியக் கண்டத்துக்கு வெளியே டெஸ்ட் போட்டியில் தங்கள் திறமையை நிரூபித்ததில்லை. அன்னிய மண்ணில், அதுவும் தென்னாப்பிரிக்காவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைச் சமாளிப்பது என்பது இளம் வீரர்களுக்கு உண்மையிலேயே அக்கினிப் பரீட்சைதான். தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து நியூஸிலாந்தில் இந்திய அணி பயணம் செய்யவிருக்கிறது. இதுவும் சவாலான பயணமாகவே இருக்கும்.

இந்த அக்கினிப் பரீட்சையின் முடிவுகள் இந்த இளைஞர்களின் திறமையை மட்டுமின்றி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக்கூடிய அடையாளங்களைக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்