இன்டியன்வெல்ஸ்: இறுதிச்சுற்றில் ஃபெடரர், ஜோகோவிச்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவின் இன்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் உலகின் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் 8 ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும் மோதுகின்றனர்.

போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜோகோவிச் கடும் போராட்டத்துக்குப் பிறகு 7-5, 6-7 (2), 6-1 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜான் இஸ்னரைத் தோற்கடித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றிய ஜோகோவிச், 2-வது செட்டில் ஒரு கட்டத்தில் 5-4 என்ற கணக்கில் இருந்தார். ஆனால் தொடர்ந்து விடாப்பிடியாக போராடிய ஜான் இஸ்னர், அந்த செட்டை டைபிரேக்கருக்கு கொண்டு சென்றார். அதில் அபாரமாக ஆடிய இஸ்னர், 2-வது செட்டை 7-6 (2) என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதையடுத்து நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டின்போது காலில் ஏற்பட்ட காயத்துக்கு இருமுறை சிகிச்சை எடுத்துக் கொன்ட இஸ்னர், டபுள் பால்ட் தவறை செய்ததால் ஜோகோவிச் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். தொடர்ந்து 6-வது கேமில் மீண்டும் இஸ்னரின் சர்வீஸை முறியடித்த ஜோகோவிச், அடுத்த கேமோடு ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இதனால் 3-வது செட் 6-1 என்ற கணக்கில் ஜோகோவிச் வசமானது.

2008, 2011 ஆகிய ஆண்டுகளில் இன்டியன்வெல்ஸில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், 2012-ல் இஸ்னரிடம் தோல்வி கண்டார். இப்போது இஸ்னரை வீழ்த்தியிருப்பதன் மூலம் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

வெற்றி குறித்துப் பேசிய ஜோகோவிச், “2-வது செட்டில் இஸ்னரின் சர்வீஸை முறியடிக்கும் வாய்ப்பு இரு முறை கிடைத்தது. ஆனால் அதில் மோசமாக ஆடி வாய்ப்பை கோட்டைவிட்டேன். டைபிரேக்கரில் இஸ்னர் வியக்கத்தக்க வகையில் விளையாடினார். ஜான் இஸ்னருடன் எப்போது டைபிரேக்கரில் விளையாடினாலும், அது எதிராளிக்கு சாதகமாக இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும். எனினும் நான் நம்பிக்கையை இழக்காமல் விளையாடிய தால் வெற்றி பெற்றிருக்கிறேன்” என்றார்.

ஃபெடரர் வெற்றி

இன்டியன்வெல்ஸில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ரோஜர் ஃபெடரர் தனது அரையிறுதியில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோபோலோவை தோற்கடித்து இறுதிச்சுற்றை உறுதி செய்தார். இந்த ஆட்டத்தில் தோற்றதால் ஒரே போட்டியில் நடால், ஃபெடரர் இருவரையும் தோற்கடித்த 6-வது வீரர் என்ற பெருமையைப் பெறும் வாய்ப்பை டோல்கோபோலோவ் இழந்தார்.

17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ஃபெடரர், இந்த முறை வெல்லும் பட்சத்தில் 22-வது ஏடிபி மாஸ்டர் பட்டத்தைக் கைப்பற்றுவார். சர்வதேச தரவரிசையிலும் 4-வது இடத்துக்கு முன்னேறுவார்.

ஃபெடரரும், ஜோகோவிச்சும் இதுவரை 32 முறை மோதியுள்ளனர். அதில் ஃபெடரர் 17 முறையும் ஜோகோவிச் 15 முறையும் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சானியா-காரா ஜோடி தோல்வி

இன்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்ற பி.என்.பி. பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் இறுதிச்சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி தோல்வி கண்டது. இந்த ஜோடி 6-7 (5), 2-6 என்ற நேர் செட்களில் தைவானின் ஷியா சூ-வெய்-சீனாவின் பெங் ஷுவாய் ஜோடியிடம் தோல்வி கண்டது. சானியா-காரா ஜோடிக்கு எதிராக ஆடிய 11 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது சூ-வெய்-பெங் ஷுவாய் ஜோடி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்