எம்.எஸ்.தோனி படம் என் புகழ்பாடாமல் வாழ்க்கைப் பயணத்தையே பதிகிறது: தோனி

By பிடிஐ

“எம்.எஸ்.தோனி-தி அன் டோல்ட் ஸ்டோரி” என்ற திரைப்படம் என் புகழ்பாட எடுக்கப்பட்டதல்ல, எனது போராட்டங்கள், பயணங்கள் பற்றியதே என்று இந்திய ஒருநாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 30-ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகும் இந்தத் திரைப்படத்தின் விளம்பர பரப்புதலுக்காக தன் மனைவி சாக்‌ஷி, படத் தயாரிப்பாளர் அருண் பாண்டே ஆகியோருடன் அமெரிக்கா சென்றுள்ளார் தோனி.

திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தோனி, “நான் பாண்டேயிடம் ஒரு விஷயத்தை தெளிவாகக் கூறினேன், என்னை உயர்த்திப் பிடிக்கும், என் புகழ்பாடும் படமாக இது இருக்கக்கூடாது, ஒரு தொழில்பூர்வமான விளையாட்டு வீரனின் பயணத்தை சித்தரிப்பதாக இருக்க வேண்டும் என்றேன்” எனக் கூறினார் தோனி.

எடிட் செய்யப்படாத படத்தை முதன் முதலில் பார்த்ததாகக் கூறிய தோனி, “என் வாழ்க்கையில் நடந்தது மீண்டும் என் நினைவில் புதிதாக பதிந்தது. நான் வசித்த இடம் முதல் விளையாடிய இடம் என்று பழைய நினைவுகளை என்னிடத்தில் புதிதாக்கியது.

கடந்த காலத்தில் இருப்பது நல்ல உணர்வை ஏற்படுத்தியது. அதாவது மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தனர் என்பது தெரியவருகிறது. நான் என் பெற்றோரிடம் கிரிக்கெட் பற்றி ஒரு போதும் பேசியதில்லை. ஆனால் தற்போது இந்தப் படத்தைப் பார்த்த போது அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்பது தெரிய வந்தது ஒரு புதிதான விஷயமாக இருந்தது.

முதலில் என்னைப்பற்றிய படம் என்று சற்று கவலையடைந்தேன், ஆனால் படம் எடுக்கத் தொடங்கப்பட்டவுடன் நான் கவலைப்படவில்லை, நான் என் தரப்பு கதையைக் கூறத் தொடங்கினேன்.

2007 உலகக்கோப்பை தோல்வி ஏற்படுத்திய திருப்பு முனை:

தோல்விக்குப் பிறகு டெல்லியில் வந்து இறங்கியபோது ஏகப்பட்ட ஊடகங்கள். சில வேளைகளில் தோல்விகள் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் ஒரு விளையாட்டு வீரனாக அனைத்தையும் தாங்கும் கடந்து செல்லும் வலுவான மனநிலை வேண்டும் உணர்ச்சிகள் நமக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கருதுபவன் நான். செய்தியாளர்கள் கூட்டத்தில் வந்து அழுது தீர்ப்பது என்பது போன்ற விஷயமல்ல அது. அல்லது களத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறுவது போன்றதும் அல்ல உணர்ச்சியை வெளிப்படுத்துவது என்பது.

அன்று நாங்கள் விமானநிலையத்தில் இறங்கி போலீஸ் வேனில் ஏறினோம், நான் சேவாக் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அது மாலை அல்லது லேசாக இரவு கவியும் நேரம். 60-70கிமீ வேகத்தில் வேன் சென்றது. இந்தியாவில் குறுகலான சாலையில் ஒரு டீசண்டான ஸ்பீட் அது. எங்களைச் சுற்றி மீடியா வாகனங்கள் அதன் தலையில் மிகுந்த வெளிச்சம் தரும் விளக்குகள், காமராக்களுடன். நாங்கள் ஏதோ பெரிய குற்றமிழைத்து விட்டு போலீஸ் வேனில் சென்றது போன்று இருந்தது. அதாவது ஒரு கொலையாளி அல்லது பயங்கரவாதி என்பது போன்று. உண்மையில் மீடியாக்களால் அன்று நாங்கள் துரத்தி விரட்டப்பட்டோம்.

பிறகு காவல்நிலையத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு 15-20 நிமிடங்கள் சென்ற பிறகு எங்கள் கார்களில் புறப்பட்டோம். இதுதான் என்னிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, அதுதான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரனாகவும் ஒரு சிறந்த மனிதனாகவும் நான் என்னை வடிவமைத்துக் கொள்ள உதவியது.

திரைப்படம் பற்றி...

வங்காளத்தில் டிக்கெட் பரிசோதகராக ரயில்வேயில் பணியாற்றியது தனக்கு மன உறுதியை அளித்தது என்று கூறிய தோனி, தனது சுயசரிதை நூல் பற்றி கூறும்போது, “புத்தகம் கொண்டு வர நேரமெடுக்கும். திரைப்படத்துக்கு முன்பே புத்தகம் பற்றிய கருத்துதான் உருவானது. ஆனால் புத்தகத்திற்கு இன்னும் முயற்சிகள் தேவை இன்னும் கொஞ்சம் பணியாற்ற வேண்டியுள்ளது. புத்தகம் இன்னும் விரிவாக இருக்கும்.

திரைபடத்தின் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட் அருமையான நடிகர். இந்தப் படத்திற்காக அவர் நிறைய உழைத்துள்ளார். நான் அவரிடம் என்னைப்பற்றி முழு விவரங்களையும் தெரிவிக்கவில்லை. நிறைய விஷயங்களைக் கூறவில்லை, ஏனெனில் நான் இன்னும் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறேன். கேப்டனாக இருக்கிறேன்.

இந்தியாவில் விளையாட்டு பற்றி...

“ஒரு ஒலிம்ப்பிக் போட்டிக்குப் பிறகு நாம் விளையாட்டில் முதலீடு செய்து அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லலாம் என்பது ஸ்போர்ட்ஸில் வேலைக்காகாது. உள்கட்டமைப்பு வசதிகளைக் கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து, ஆரோக்கியம் குறித்து கல்வியறிவு ஏற்படுத்த வேண்டும்.

வீரர்களுக்கு இவையெல்லாம் கிடைக்கத் தொடங்கிவிடும் போது, நாம் ஒரு விளையாட்டுத் திறன் தேசமாக உருவெடுக்க முடியும்.

மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட்டின் மீது ஊக்கம்பெறச் செய்வது அவசியம். குழந்தைகளை விளையாட்டுக்கு ஊக்குவிக்க வேண்டும், இப்படித்தான் நாட்டுக்கு பதக்கங்கள் கிடைக்கும். பணம் முதலீடு செய்வது மட்டுமே நேரடியாக பதக்கங்களை பெற்று தராது. வெறுமனே முடிவை நோக்கியது கிடையாது விளையாட்டு என்பது. காலப்போக்கில் தொடர்ந்து பணியாற்றி வரவேண்டும், இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கூறினார் தோனி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

9 mins ago

ஜோதிடம்

51 mins ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்