தோனி களத்தில் இருந்தால் அவர் நிர்ணயிப்பதுதான் இலக்கு: விராட் கோலி திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

எம்.எஸ்.தோனி பேட்டிங் பற்றி எழும் விமர்சனங்களெல்லாம் தோனி ரசிகர்களை அசைக்காததைப் போல் இந்திய கேப்டன் விராட் கோலியையும் அசைப்பதில்லை. அவரும் வெகு உற்சாகமாக ‘தோனியின் அனுபவம் 10 முறையில் 8 முறை நல்லபடியாகவே அமைந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

 

நேற்று தோனியின் பேட்டிங் சொதப்பலாக அமைந்தது மட்டுமல்ல ஒரு டைவ் கேட்ச் நீங்கலாக அவரது விக்கெட் கீப்பிங்கும் சராசரிக்கும் கீழ்தான் இருந்தது என்பதை வர்ணனையாளர்களும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

 

சச்சின், லஷ்மண் போன்றவர்கள் கூறுவதென்னவெனில் தோனி மிடில் ஓவர்களில் காட்டும் மந்தத்தினால் இறுதி ஓவர்களில் எதிர்பார்த்த ரன்களை எடுக்க முடியவில்லை என்பதுதான் என்றனர்.  தோனி நேற்று 42 பந்துகளில் 22 ரன்களை எடுத்திருந்த போது வர்ணனையில் சஞ்சய் மஞ்சுரேக்கர், ‘தோனி 22 ரன்ஸ் ஆஃப் ஒன்லி 42 பால்ஸ்’ என்றது கிண்டலா அல்லது உண்மையில் அவர் நம்பினாரா என்பது இருண்மை நிறைந்தது.

 

ஒரு அணி டீம் மீட்டிங்கில் பிட்ச் உள்ளிட்டவற்றை கணக்கிலெடுத்துக் கொண்டு இதுதான் இலக்கு என்று திட்டமிட்டுச் செல்லும் போது தோனி களமிறங்கி அவரது ரன்குவிப்பு திறனின்மையை மறைத்து ‘இந்தப் பிட்சில் இவ்வளவு இருந்தால் போதும்’ என்று முடிவெடுப்பதை எந்த கேப்டனும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், ஆனால் கோலி ஏற்றுக் கொள்கிறார்.  பந்து வீச்சு இப்படி திறமையாக இல்லையெனில் இந்த அணி நிச்சயம் பெரிய தோல்விகளைச் சந்திக்கும் அதற்கு தோனி ஒரு காரணமாக இருப்பார். ஆனால் போட்டிகளை வென்று கொண்டிருப்பதால் சொதப்பல் கூட பெரிய விஷயமாக நம் கண்களை மறைக்கவே செய்யும்.

 

ஏனெனில் கடைசி ஒவரில் கூட ஒஷேன் தாமஸ் வீசிய 3 பந்துகளை அவரால் அடிக்க முடியவில்லை, ஊர்பட்ட ஷார்ட் பிட்ச் வீச அதை சிக்சராக மாற்றினார், இதே ஷார்ட் பிட்ச் பந்துகளை தொடக்கத்தில் ஏன் லொட்டு வைத்தார் என்பதற்கு ஒருவரிடமும் பதில் இல்லை.

 

எல்லோரும் சேர்ந்து குறைபடு ஆட்டத்திற்கு முட்டுக் கொடுக்கும் போது அது கிரிக்கெட்ட் திறமைகள், நுட்பங்களைத் தாண்டிய வேறு காரணங்களுக்காக  என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல.

 

இந்நிலையில் விராட் கோலி நேற்று தோனியின் ஆட்டத்துக்கு முட்டுக் கொடுக்கும் போது கூறியதாவது:

 

“ஆட்டக்களத்தில் அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை சரியாகவே தோனி புரிந்து வைத்திருக்கிறார்.  அனைவருக்குமே ஒரு சில நாட்கள் சரியாக அமையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அவருக்கும் சில நாட்கள் சரியாக அமையாவிட்டால் அது பெரிது படுத்தப்படுகிறது.

 

ஓய்வறையில் நாங்கள் எப்போதும் அவரை ஆதரிக்க முடிவெடுத்துள்ளோம். அவர் பல போட்டிகளை வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார். அவரைப் பொறுத்தமட்டில் சிறப்பம்சம் என்னவெனில் டெய்ல் எண்டர்களை வைத்துக் கொண்டு அணிக்குத் தேவைப்படும் கூடுதல் 15-20 ரன்களை எடுக்க முடிவதே.

 

முடிவில் ஸ்ட்ரைக்கை தன் வசம் வைத்துக் கொண்டு இரண்டு பெரிய சிக்சர்களுடன் முடித்தது ஒரு அணியாக எங்களுக்கு பெரிய உற்சாகத்தை அளித்தது. நாங்கள் 250 ரன்கள் எதிர்பார்த்தோம் ஆனால் 270க்கு நெருங்கி வந்தோம். காரணம் தோனி அங்கு இருந்ததுதான். ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக ஆடினார். தோனியின் அனுபவம் 10 முறைகளில் 8 முறை சிறப்பாகவே வந்துள்ளது.

 

நம்மிடையே சில வீரர்கள் தங்கள் உள்ளுணர்வின் வழிநடத்தலில் பாசிட்டிவாக ஆடுபவர்கள் உள்ளனர். ஆனால் தோனி மட்டுமே களத்திலிருந்து அணிக்கு செய்தியை அனுப்புவார். அதாவது, ‘இந்தப் பிட்சில் இது சரியான ஸ்கோர், 260 நல்ல ஸ்கோர், 265 நல்ல ஸ்கோர், போதுமானது என்பார் மேலும் 300 அடிக்கப்போஉ 230-ல் முடிய வேண்டாம் என்பார்.

 

அவர் அந்த வழியில்தான் எப்போதும் இருப்பார், அதுதான் தோனியின் பலம். அதாவது கணக்கிட்டு ஆட்டத்தைக் கொண்டு செல்வது, எப்போதும் ஆட்டத்தில் இருப்பது, வெற்றிகளுக்கான வழிகளை தேடுவது. அவர் ஒரு லெஜண்ட். நம் அனைவருக்கும் இது தெரியும். அவர் நமக்காக பிரமாதமாக ஆடிவருகிறார், தொடர்ந்து ஆடுவார் என்று நம்புகிறோம்” இவ்வாறு கூறினார் விராட்  கோலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

40 mins ago

உலகம்

40 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்