தோனி, ஜடேஜா, அஸ்வின் அபாரம்; அரையிறுதிக்கு அருகில் சென்னை சூப்பர் கிங்ஸ்

By ஆர்.முத்துக்குமார்

பெங்களூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுக்க, தொடர்ந்து அடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 142/7 என்று தோற்றது. இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்த அணி.

14 ஓவர்கள் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் மந்தமாகவே இருந்தது. பிறகு ஜடேஜா, தோனி இணை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் மட்டமான பந்து வீச்சை பதம் பார்த்தனர். கடைசி 6 ஓவர்களில் 86 ரன்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

பிரெண்டன் மெக்கல்லம், டிவைன் ஸ்மித் ஆகியோர் ஆட்டமிழந்ததுடன் ரெய்னா (1) ரன் அவுட் ஆனது சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தியது. பெர்த் ஸ்பின்னர்கள் டிவைன் பிராவோ, மிதுன் மன்ஹாஸ் ஆகியோரைக் கட்டுப்படுத்தினர். சைனமன் பவுலர் பிராட் ஹாகை ஆடத் திணறினர். இருவரும் இணைந்து 34 பந்துகளில் 23 ரன்களையே எடுக்க முடிந்தது.

ஜடேஜா இறங்கியபோதும் ரன்கள் குவியத் தொடங்கவில்லை. 6வது ஓவருக்குப் பிறகு 15வது ஓவரின் முதல் பந்தை பிராவோ பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தையும் நேர் பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் அவுட் ஆனார்.

தோனி களமிறங்கி அராபத்தின் புல்டாஸை லெக் திசையில் மிகப்பெரிய சிக்சரை அடிக்க அதுவரை நன்றாக வீசிய பிராட் ஹாக் பந்தை மேலேறி வந்து ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்தார் ஜடேஜா.

தோனியின் 3 சிக்சர்களில் ஒன்று மைதானத்திற்கு வெளியே:

19வது ஓவர் பெர்த் அணியின் தோல்விக்கு பெரும் காரணமாக அமைந்தது. அராபத் அந்த ஓவரில் 27 ரன்களை விட்டுக் கொடுத்தார். முதல் பந்தில் தோனி 2 பிறகு ஒரு சிங்கிள், பிறகு ஜடேஜா ஃபைன்லெக்கில் ஒரு பவுண்டரி, பிறகு ஒரு சிங்கிள், தோனி ஸ்டரைக்கிற்கு வந்தார்.

5வது பந்து உயரமான ஃபுல்டாஸ். நோ.பால், தோனி அதனை ஃபைன் லெக் திசையில் சிலபல பார்வையாளர்கள் வரிசையைத் தாண்டி அடித்தார். மீண்டும் ஒரு ஃபுல்டாஸ் அதனை ஸ்கொயர் லெக் திசையில் அடித்தார். பந்து மேலே மேலே மேலே சென்று கொண்டிருந்தது. கீழே இறங்குமா என்ற நிலையில் கூரையில் விழுந்து மைதானத்திற்கு வெளியேயானது. ஆனால் இது தோனியின் மிகப்பெரிய சிக்சர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த பந்து மிடிவிக்கெட்டில் ஒரு சிக்சர்.

16 பந்துகளில் 4 சிக்சர்கள் அடித்த தோனி 20வது ஓவரில் 35 ரன்களில் அவுட் ஆனார். ஜடேஜா 28 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 44 ரன்கள் எடுத்தார். இவர்தான் அதிகபட்ச ஸ்கோர். கடைசி 4 ஓவர்களில் 66 ரன்கள். சென்னை அணி 155 ரன்களை எட்டியது.

இலக்கைத் துரத்திய ஸ்கார்ச்சர்ஸ் பவர் ப்ளேயில் 35 ரன்கள் எடுத்தனர். 10 ஓவர்கள் தறுவாயில் 6 ரன்களுக்கும் சற்று கீழே இருந்தது ரன் விகிதம். மிட்செல் மார்ஷ் 9வது ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுக்க அது நோபால் ஆனது. ஆனால் அஸ்வின் வீசிய 10வது ஓவரில் டீப் ஸ்கொயர் லெக் திசையில் அவர் அவுட் ஆனார்.

6வது விக்கெட்டுக்காக ஆஷ்டன் டர்னர், நேதன் கூல்டர்-நைல் இணைந்து 33 பந்துகளில் 6வது விக்கெட்டுக்காக 50 ரன்களைச் சேர்த்தபோது ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு நம்பிக்கை துளிர் விட்டது. 13 பந்துகளில் 33 எடுத்தால் வெற்றி என்ற சிறு நம்பிக்கை நிலை தோன்றியது. ஆனால் டர்னர் ரன் அவுட் ஆக பெர்த் தோல்வி தழுவியது.

இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளனர். லாகூர் லயன்ஸ் 6 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளனர். சென்னை அணியில் அஸ்வின் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் நெஹ்ரா 2 விக்கெட்டுகளையும் மோகித் சர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஜடேஜா ஆட்ட நாயகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

ஜோதிடம்

4 mins ago

ஜோதிடம்

57 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்