ஸ்பெயினின் நட்சத்திர நாயகன் இனியெஸ்டா

By செய்திப்பிரிவு

2010

-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி ஸ்பெயின் கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு பொன்னான நாள். ஆம் அந்த நாளில்தான் ஸ்பெயின் உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப்பை முதன்முறையாக வென்றது. ஸ்பெயின் நாடே ஆனந்தக்கூத்தாடியது. கால்பந்து ரசிகர்களின் உற்சாகம் எல்லை மீறிப் போனது. அந்த உற்சாகத்துக்கு வித்திட்டவர்தான் ஸ்பெயின் அணி நடுகள ஆட்டக்காரர் ஆந்த்ரே இனியெஸ்டா.

2010-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக கோலடித்து அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தவர்தான் இந்த இனியெஸ்டா.

1984-ம் ஆண்டு பிறந்த இனியெஸ்டாவுக்கு சிறுவயது முதல் கால்பந்து என்றால் கொள்ளைப் பிரியமாம். எப்போதும் கால்பந்தும் கையுமாகவே இருப்பாராம். பார்சிலோனா இளைஞர் அகாடமியில் இணைந்து தனது கால்பந்து கனவை வளர்த்துக் கொண்டார். பள்ளி, கல்லூரிகளில் கால்பந்துடன் திரிந்தவர் 2002-ல் தொழில்முறை கால்பந்து வீரராக மாறினார். 16, 18 19 வயதுக்குட்பட்டோர் ஸ்பெயின் அணிக்காகவும் அவர் விளையாடி வந்தார். பார்சிலோனா அணிக்காக ஆடி வந்த இனியெஸ்டா, 2006-ல் முதன்முறையாக சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் ஆடினார். 2006-க்குப் பிறகு அவரது கால்பந்து கள வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. 2008-ம் ஆண்டு யூரோ-2008 கோப்பையை ஸ்பெயினுக்குப் பெற்றுத் தந்தார்.

2010-ல் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இனியெஸ்டாவுக்குக் கிடைத்தது. அரிதான வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி சரித்திரமாக்கினார். தனது அற்புதமான ஆட்டத்தால் இறுதிச் சுற்று வரை ஸ்பெயினை அழைத்து வந்தார். இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக ஒரு அற்புதமான கோலைப் போட்டு அணிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்தார். இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதையும் அவரே வாங்கினார். மேலும் 2010 உலகக் கோப்பைப் போட்டியின் ஆல் ஸ்டார் அணியிலும் அவருக்கு இடம் கிடைத்தது.

புகழ்பெற்ற பார்சிலோனா கிளப் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி, ஏராளமான வெற்றிகளை அந்த அணிக்காகக் குவித்திருக்கிறார். 2002-ல் பார்சிலோனாவுக்காக ஆடத் தொடங்கியவர், இன்று வரை அந்த கிளப்புக்காக ஆடி வருகிறார்.

கால்பந்து வரலாற்றில் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் இனியெஸ்டா. ஐரோப்பிய யூனியன் கால்பந்து அணி விருதுக்காக 2009-ம் ஆண்டு முதல் 6 முறை தேர்வு செய்யப்பட்டவர் இனியெஸ்டா. மேலும் பிபா உலக லெவன் விருதுக்காக 9 முறை பரிந்துரை செய்யப் பட்டவர்.

இந்த முறை உலகக் கோப்பையை மீண்டும் ஸ்பெயினுக்காக பெற்றுத் தரும் முனைப்பில் உள்ளார் இனியெஸ்டா. அதிக அனுபவம், அபாரமான திறமை, அற்புதமான செயல்திறனால் தற்போதுள்ள வீரர்களுடன் சிறந்த வீரர் போட்டிக்கு மல்லுக்கட்டுகிறார் இனியெஸ்டா.

ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் ஜூலன் லோபேடெகுவின் மேற்பார்வையில் தனது திறமையை மேம்படுத்தி வருகிறார். அணி வீரர்கள் மார்க்கோ அசென்சியோ, சால் நிகுஸ், செர்ஜியோ புஸ்குட்ஸ், டேவிட் சில்வா ஆகியோருடன் நட்சத்திர வீரராக இனியெஸ்டா ஸ்பெயினுக்காக களமிறங்குகிறார்.

2018-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் ஸ்பெயின் 10 ஆட்டங்களில் விளையாடியது. இதில் 9-ல் வெற்றி கண்டது. ஒரு போட்டி மட்டும் டிராவில் முடிந்தது. இதில் 36 கோல்களை ஸ்பெயின் வீரர்கள் அடித்தனர். மாறாக 3 கோல்களை மட்டுமே ஸ்பெயின் அணிக்கு எதிராக எதிரணி வீரர்கள் அடிக்க முடிந்தது. ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியடையாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின் அணி, எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

கேப்டன் செர்ஜியோ ரமோஸின் வழிகாட்டுதல்கள், இனியெஸ்டாவுக்கு கூடு தல் பலமாக அமைந்துள்ளது. சிறந்த நடு கள வீரராகத் திகழும் இனியெஸ்டா எதிரணியின் தடுப்புகளை உடைத்து கோல்களாக மாற்றுவதில் அசாத்திய திறமை படைத்தவர்.படுவேகம், லாவகமாக பந் தைக் கடத்தும் திறன், பந்துகளை சக வீரர்களுக்கு பாஸ் செய்வதில் நேர்த்தி, கோலடிக்கும் திறமை, சக வீரர்கள் கோலடிக்க உதவுவதில் அற்புதமான சாமர்த்தியம் போன்றவற்றால் மிளிர்கிறார் இனி யெஸ்டா.

அநேகமாக இவருக்கு இது கடைசி உல கக் கோப்பை கால்பந்துப் போட்டியாக இருக்கலாம் என கால்பந்து விமர்சகர்கள் கணிக்கின்றனர். அருமையான பார்மில் இனியெஸ்டா இருக்கிறார். எனவே இந்த முறை ஸ்பெயினுக்காக மீண்டும் கோப்பையை அவர் வெல்வார் என்கிறார்கள் கால்பந்துப் போட்டி விமர்சகர்கள். அதைத் தான் ஸ்பெயின் ரசிகர்களும் விரும்புகின்றனர். நடக்குமா ? ஜூலை 15-ம் தேதி தெரி ந்து விடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

இந்தியா

4 mins ago

தமிழகம்

21 mins ago

வாழ்வியல்

12 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

47 mins ago

சினிமா

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்