புனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி

By செய்திப்பிரிவு

புனே ஆடுகளத்தின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.20 ஆயிரம் பரிசும், புகைப்படத்தையும் அளித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகள் தடைக்குப் பின் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் களமிறங்கியது. சென்னையில் ஒருபோட்டி விளையாடிய நிலையில், காவேரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக நடந்த போராட்டம் காரணமாக அனைத்துப் போட்டிகளும் புனே நகருக்கு மாற்றப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புனே நகர மைதானத்தை சொந்தமைதானமாக நினைத்து விளையாடுவதால், அதை ஆடுகள பராமரிப்பு ஊழியர்கள் சிறப்பாக பராமரித்தனர்.

புனேயில் இந்தமுறை விளையாடிய 6 போட்டிகளில் 5-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

கிங்ஸ்லெவன் அணிக்கு எதிரான கடைசி லீக் சுற்றுப்போட்டி நேற்று நடந்தது. அதிலும் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வென்று 9-வது முறையாக ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது.

புனே மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங்குக்கும், பந்துவீச்சுக்கும் சமஅளவில் ஒத்துழைத்ததற்கு ஆடுகளத்தை நன்கு பராமரித்த ஊழியர்களின் பங்கு முக்கியமானது. இதை நன்கு உணர்ந்த சிஎஸ்கே கேப்டன் தோனி, ஊழியர்களுக்குப் பரிசளிக்க விரும்பினார்.

இதையடுத்து, நேற்று போட்டி தொடங்கு முன் ஆடுகளம் பராமரிப்பில் பணியில் ஈடுபட்டு இருக்கும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் சிஎஸ்கே அணி சார்பில் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தைப் பரிசளித்தார். மேலும், அவர்களுடன் புகைப்படம் எடுத்து அந்தப் படத்தை பரிசளித்தார்.

இது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் கூறுகையில், புனே ஆடுகளத்தைச் சிறப்பாக பராமரித்து வரும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் சிறிய வெகுமதிதான் இது. இந்த பணம் வீரர்கள் அனைவரின் தரப்பில் இருந்தும், அணி நிர்வாகம் சார்பிலும் இருந்து தரப்பட்டது.

போட்டி தொடங்கும் முன் ஆடுகள பராமரிப்பில் இருக்கும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.20 ஆயிரம் பரிசை தோனி வழங்கி, அவர்களின் பணியைப் பாராட்டினார் எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே கடந்த வாரத்தில் புனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்கள் தோனிக்கு ஓவியம் ஒன்றை பரிசாக அளித்தனர். அதில் தோனி, தனது மகள் ஜிவாவை தூக்கி வைத்து கொஞ்சுவதுபோல் இருக்கும் வரையப்பட்ட ஓவியத்தை பரிசாக அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்