சிஎஸ்கே அணியுடன் இறுதிப் போட்டியில் மோதுவது யார்?; ஹைதராபாத் - கொல்கத்தா இன்று மோதல்

By செய்திப்பிரிவு

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் மோத உள்ள அணி எது என்பதை தீர்மானிக்கும் தகுதி சுற்று 2-வது ஆட்டத்தில் இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி லீக் சுற்றில் கடைசி 3 ஆட்டங்களிலும் சிறந்த திறனை வெளிப்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. மேலும் நேற்றுமுன்தினம் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டரில் ராஜஸ்தான் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தகுதி சுற்று 2-வது ஆட்டத்துக்குள் நுழைந்துள்ளது. அதேவேளையில் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் தகுதி சுற்று 1-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் கடைசி கட்டத்தில் வெற்றியை நழுவவிட்டது.

அந்த ஆட்டத்தில் 140 ரன்கள் இலக்கை விரட்டிய சென்னை அணி 17 ஓவர்களில் 97 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் வில்லியம்சன் சரியான களவியூகம் அமைக்கத் தவறினார். 18-வது ஓவரில் அவர், பந்து வீச பயன்படுத்திய கார்லோஸ் பிராத்வெயிட் 20 ரன்களை வழங்கினார். இதுவே ஹைதராபாத் அணியிடம் இருந்து வெற்றி நழுவிச் செல்ல முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் 5-வது பந்து வீச்சாளரை தேர்வு செய்வதில் ஹைதராபாத் அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

19 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள சித்தார்த் கவுல், 18 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள ரஷித் கான் ஆகியோருடன் இணைந்து புவனேஷ்வர் குமார் (9 விக்கெட்கள்) சற்று மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டும். பிரதான பந்து வீச்சுக்குழு வலுவாக இருப்பினும் பேட்டிங் துறையில் ஹைதராபாத் அணிக்கு பெரிய பிரச்சினை உருவெடுத்துள்ளது நடுகளம்தான். இந்த சீசனில் 57.05 சராசரியுடன் 685 ரன்கள் குவித்துள்ள வில்லியம்சனை மட்டுமே பேட்டிங்கில் பிரதானமாக நம்பியிருப்பது பலவீனமாக உள்ளது. தகுதி சுற்று 1-ல் முதல் பந்திலேயே டக் அவுட் ஆன ஷிகர் தவண் மற்றும் நடுகள வீரர்களான மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.

அதேவேளையில் கொல்கத்தா அணிக்கு இந்த பிரச்சினை இல்லை. டாப் ஆர்டரில் யாராவது ரன் குவிக்கத் தவறினால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடுவது பலமாக உள்ளது. எலிமினேட்டர் சுற்றில் சுனில் நரேன் விரைவிலேயே ஆட்டமிழந்த நிலையில் பிற்பகுதியில் ஆந்த்ரே ரஸ்ஸல் 25 பந்துகளில் 49 ரன்கள் விளாசி மிரளச் செய்தார். 15 ஆட்டங்களில் 490 ரன்கள் குவித்துள்ள தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து மேலும் சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா, பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் 27-ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

14 mins ago

வாழ்வியல்

5 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

40 mins ago

சினிமா

36 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்