முதல் ஒருநாள் போட்டி: வில்லியம்சன் சதமும் மழையும் பாகிஸ்தான் தோல்வியும்

By ராமு

நியூஸிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் மழை காரணமாக டக்வொர்த் முறைப்படியான முடிவில் பாகிஸ்தான் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

வெலிங்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து கேன் வில்லியம்சன் (115) சதத்துடன் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணிக்கு மழை காரணமாக 30.1 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது. தொடக்க வீரர் ஃபகார் ஜமான் 86 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் ஆக்ரோஷம் காட்டி நாட் அவுட்டாக இருந்தும் பயனில்லை. மழை குறுக்கிடாமல் இருந்திருந்தால் ஆட்டம் இன்னும் பரபரப்பான முறையில் நெருக்கமாகச் சென்றிருக்கும் என்பதுதான் உண்மை.

ஆனால் மகாவிரட்டலின் முதல் ஓவரிலேயே டிம் சவுதி, பாகிஸ்தானின் அசார் அலி, பாபர் ஆஸம் ஆகியோரை அடுத்தடுத்து எல்.பி.செய்தார். 7/2 என்று முதலிலேயே அடி விழுந்தது. இதில் பாபர் ஆஸம் தீர்ப்பு ரிவியூ செய்யப்பட்டிருந்தால் ஒருவேளை நாட் அவுட்டாகியிருக்கலாம், ஆனால் அசார் அலி நன்றாக நேராக வாங்கி விட்டு ரிவியூ செய்து விரயம் செய்தார். ஒரே ரிவியூவும் காலியானது.

போல்ட் மிக அருமையாக வீசினார், இவர் மொகமது ஹபீஸுக்கு துல்லிய பவுன்சர் ஒன்றை வீச அவர் பைன் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்த ஷோயப் மாலிக் எட்ஜ் ஆகி சவுதியின் இன்னொரு விக்கெட்டாக வெளியேறினார். லெக்ஸ்பின்னர் ஆஸ்ட்ல், சர்பராஸ் அகமதுவை எல்.பி.செய்து வெளியேற்றினார். பாகிஸ்தான் 54/5 என்று ஆனது. பாகிஸ்தானில் தேறிய ஒரு வீரர் சாம்பியன்ஸ் டிராபி இறுதி சத நாயகன் ஃபகார் ஜமான் மட்டுமே, எதிர்முனையில் மார்ச் ஃபாஸ்ட் நடந்த வேளையில் ஃபகார் ஜமான் எதிரணி பந்து வீச்சை அடித்து ஆடத் தொடங்கினார், சாண்ட்னரை வரிசையாக சிக்சர் அடித்தார். 63 பந்துகளில் அரைசதம் கண்டார். ஷதாப் கான் உறுதுணையாக ஆடினார், லாக்கி ஃபெர்கூசன் அதிவேகமாக வீசினார், 150 கிமீ வேகம் என்பது இவருக்கு சர்வ சாதாரணமாக அமைந்தது. ஆனாலும் ஷதாப் கான் 28 ரன்களை எடுத்து ஃபகார் ஜமானுடன் 78 ரன்கள் கூட்டணி அமைத்தார். போல்ட் மீண்டும் வந்து ஷார்ட் பிட்ச் ஒன்றை வீச புல் ஷாட் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது.

பாஹிம் அஷ்ரப் என்பவர் இறங்கி 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என்று காட்டடி காட்டினார். ஃபகார் ஜமான் மிக அருமையாக ஆடி 86 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். சதம் எடுக்கக் கூடிய இன்னிங்ஸ்தான் இது, ஆனால் மழை ஆட்டத்தை நியூஸிலாந்துக்கு சாதகமாக்கியது. 166/6 என்று பாகிஸ்தான் முடிந்தது.

டாஸ் வென்று நியூஸிலாந்தை பேட் செய்ய அழைக்க கொலின் மன்ரோ 35 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 58 ரன்கள் விளாசினார். முதல் விக்கெட்டுக்காக கப்தில், மன்ரோ 12.3 ஓவர்களில் 83 ரன்களைச் சேர்த்தனர், கப்தில் 72 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 48 ரன்கள் எடுத்தார். மொகமது ஆமிர், ருமான் ரயீஸ் இருவரும் சாத்துமுறை வாங்கினர். நடு ஓவர்களில் இறுக்கமாக வீசும் ஹசன் அலி கூட 10 ஓவர்களில் 61 ரன்கள் கொடுத்தார், ஆனால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வில்லியம்சன் 26 ரன்களில் இருந்த போது சர்பராஸ் அகமட் கேட்ச் ஒன்றை விட்டார். ராஸ் டெய்லரை ஹசன் அலி பவுல்டு செய்தார். ஹென்றி நிகோல்ஸ், வில்லியம்சனுடன் இணைந்து கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டினார், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்கூப் ஷாட்களை திறம்படப் பயன்படுத்தி 43 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் சேர்த்து ஹசன் அலியிடம் வீழ்ந்தார்.

கேப்டன் வில்லியம்சன் மிகப்பிரமாதமான ஷாட்களுடன் 117 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 115 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து 315/7. ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சுற்றுலா

34 mins ago

சினிமா

39 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்