துளி சமுத்திரம் சூபி 03: பூரணத்துவத்துக்கு வழிகாட்டும் ஞானி

By முகமது ஹுசைன்

டகிழக்கு ஈரானில் உள்ள நிஸாப்பூரில் 1142-ம் ஆண்டு பிறந்த பரித் அல்-தின், மிகச் சிறந்த சூபி கவிஞர்களில் ஒருவர். 1221-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், நிஸாப்பூரை ஊடுருவிய மங்கோலியர்கள் நிகழ்த்திய படுகொலையில் 70 வயதில் கொடூரமான மரணமடைந்தார். இன்று நிஸாப்பூரில் உள்ள அவரது சமாதியை, 16-ம் நூற்றாண்டில் அலி-ஸிர் நவா கட்டினார்.

அத்தர், வளமிக்க மருத்துவர் ஒருவரின் மகன்; மேலும் இமாம் ரேஸா மசூதியைச் சேர்ந்த மதரசாவில் மருத்துவம், அரபி மற்றும் மெய்ஞானத்தில் மிகச் சிறந்த கல்வியைப் பெற்றார். இதைத் தவிர, அத்தரின் ஆரம்பகால வாழ்வைப் பற்றிய பெரிய தகவல்கள் காணக் கிடைக்கவில்லை. தனது இன்னல்களைப் பற்றி, அத்தர் எழுதிய புத்தகத்தில், அவர் இளம் வயதில், தந்தையின் மருந்தகத்தில் வேலை செய்ததாகவும், அங்கு அவர் மருந்துகளைத் தயாரித்து, நோயாளிகளைப் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தந்தையின் மறைவுக்குப் பின், அந்த மருந்தகம் அவருடையதானது. அத்தர் என்ற அடைமொழி அவரது தொழிலைக் குறிக்கிறது. அத்தர் என்றால் அரபி மொழியில் வாசனைத் திரவியம் என்று பொருள்.

அத்தரைப் பாதித்த வறுமை

இளவயது அத்தருக்கு மருந்தகத்தில் வேலை பார்ப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. எல்லாத் தரப்பு மக்களும் அவரிடம் வந்து தங்களின் துயரங்களையும் வேதனைகளையும் பகிர்ந்து சென்றனர். அவர்களுடைய வறுமை அத்தரின் மனதை மிகவும் பாதித்தது. ஒருநாள், ஆண்டியைப் போல் இருந்த நபர் ஒருவர், அவர் கடைக்கு வந்தார். அத்தரின் கடையில் நிலவிய ஆடம்பரத்தை, அவர் பார்த்த இகழ்ச்சியான பார்வை, அத்தரைச் சற்றுத் தடுமாறவைத்தது. கடையைவிட்டு வெளியேறுமாறு அவருக்கு, அத்தர் உத்தரவிட்டார். அத்தரையும் சரக்குகள் நிரம்பி வழிந்த கடையையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அத்தரை உற்று நோக்கி, “அழுக்கு உடையணிந்த நான் வெளியே செல்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை, ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு எப்படி உன்னால் வெளியேற முடியும்” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

அந்த ஆண்டியின் பேச்சு, அத்தரை ஆழமாகப் பாதித்தது. அதைப் பற்றியே ரொம்ப நாட்கள் சிந்தித்துக்கொண்டிருந்தார். இறுதியாகக் கடையைத் துறந்து வெளியேறுவதென்று முடிவெடுத்தார். அவர், குப்ராவியா வகையைச் சேர்ந்த சேக் ரூக்நல்தீன் அக்காஃப் எனும் ஆன்மிக வட்டத்தில் இணைந்தார். அவரைப் பாதித்த அந்த ஆண்டியைப் போன்றே அவரது இந்தப் புது வாழ்வு, பயணத்திலும் தேடலிலும் கழிந்தது. ரே, குஃபா, மெக்கா, டமாஸ்கஸ், துர்கிஸ்தான் மற்றும் இந்தியா எனப் பல இடங்களில் பல நாட்கள் பயணித்தார். அவர் அந்தப் பயணத்தில் சூபி ஞானிகளைச் சந்தித்து, அவர்களிடம் இருந்து ஆன்மிக ஞானத்தைக் கற்றுணர்ந்தார்.

தேடிய ஞானம் கிடைத்தது

இந்தப் பயணங்களில் தான் தேடியது கிடைத்துவிட்டது என்று உணர்ந்த பின், அத்தர் மீண்டும் தன் சொந்த ஊரான நிஸாப்பூருக்குத் திரும்பி, தன் மருந்துக் கடையைத் திறந்து வாழ ஆரம்பித்தார். அங்கு அவர் சூபி ஞானத்தையும் பரப்பினார். சூபி ஞானிகளைப் பற்றி எழுத்து வடிவில் அது வரை இருந்ததில்லை, எனவே, அவர்களைப் பற்றி எழுதத் தொடங்கினார். அத்தர் நம் உலகுக்களித்த முதல் புத்தகம் ‘தத்கிராத் அல்-ஒளலியா’. அந்தப் புத்தகத்தில், முந்தைய சூபி ஞானிகள் சொன்ன அனைத்துப் போதனைகளையும் கவிதைகளையும் தொகுத்தார். அதன் பின்பு அத்தர் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஈரடிச் செய்யுள்களைக் கொண்ட 190 புத்தகங்களை எழுதினார்.

அத்தரின் எழுத்துக்கள் மூன்று வகைகளில் அடங்கும். முதலாவதில், ஒரு தேர்ந்த கதாரிசியர் போன்று மறைஞானத்தைப் பற்றி எழுதியிருப்பார். இரண்டாம் வகையில் இலக்கியத்தைவிட அவரது ஆன்மிகப் பற்று வெளிப்படும். மூன்றாவது வகையில் ஞானி அலியின்பால் தாக்கம் கொண்ட ஒரு வயதான கவிஞரின் பற்று வெளிப்படும். இந்தக் கடைசி நிலையில், அத்தரின் எண்ணங்கள் தெளிவின்றி, முறையற்றுக் காணப்படும்.

‘அஸ்ரர் நாமே’ (ரகசியங்களின் தொகுப்பு), அத்தர் எழுதிய சிறந்த இலக்கியப் படைப்பு. அத்தர் இந்தப் புத்தகத்தைத் தான் ரூமிக்கு, அவர் குடும்பத்துடன் கொன்யாவிற்குச் செல்லும் வழியில் கொடுத்தார். அத்தரின் மற்றொரு சிறந்த படைப்பு, சந்நியாசம் பற்றி அவர் எழுதிய ‘இலாகி நாமே’ எனும் புத்தகம்

பூரணத்துவம் நோக்கிய பயணம்

ஆனால் அத்தரின் எல்லாப் படைப்புகளிலும் மேலானது, ‘பறவைகளின் சங்கமம்’ (மாண்டெக் அல்-தாயிர்) எனும் புத்தகமாகும். இதில் அவர் கடவுளுடன் இணைந்து, பூரணத்துவம் நோக்கிச் செல்லும் மனிதனின் பயணத்தை, ஏழு பள்ளத்தாக்குகளைத் தாண்டி, ஸிமூர்க் எனும் ஞானப் பறவையைச் சந்திக்கச் செல்லும் பறவைகளின் இன்னல் மிகுந்த பயணம் வழியாக ஆன்மிகம் ததும்ப ததும்பச் சொல்லியிருப்பார். இதில் ஒவ்வொரு பறவையும் ஒரு பாவச் செயலைக் குறிக்கும். ஏழு பள்ளத்தாக்குகள் முறையே தேடல், அன்பு, புரிதல், சுதந்திரம், ஒற்றுமை, திகைப்பு, இழப்பு மற்றும் மரணம் ஆகியவை ஆகும்.

அந்தப் பறவைகளில் 30 பறவைகளைத் தவிர மற்றவை எல்லாம், வழியில் பல்வேறு நிலைகளில் மரித்துவிடும். அந்த 30 பறவைகள் மட்டும்தான் ஸிமூர்க்கைச் சந்தித்தன. ஸிமூர்க்கைப் பார்த்தவுடன் அவை திகைத்துப் போயின; ஏனென்றால், ஸிமூர்க் அந்த 30 பறவைகளின் பிரதிபலிப்பாக இருந்தது. பெர்சியன் மொழியில் ஸிமூர்க் என்றால் 30 பறவைகள் என்று அர்த்தம். இந்தக் கதையின் மூலம் மனிதன், தன்னை அறிவதன் மூலம், தன்னை இழந்து கடவுளிடம் ஐக்கியமாகிறான் என்பதைச் சொல்லியிருப்பார். எவ்வளவு ஆழமான உண்மை இது!

(மீண்டும் மற்றொரு சூபி ஞானியுடன் சந்திப்போம்...)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

சினிமா

8 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்