புத்தரும் தேவதத்தனும்

By ஆதி

தேவதத்தன் கௌதம புத்தரின் சித்தப்பா மகன். புத்தரின் சிறு வயதுத் தோழனும்கூட. சிறு வயது முதலே பல்வேறு விஷயங்களுக்காகப் புத்தரைக் கண்டு தேவதத்தன் பொறாமைப்பட்டுவந்தான்.

ஞானம் பெற்ற பிறகு, புத்தர் தனது ஊரான கபிலவஸ்துவுக்கு வந்தார். அப்போது பல சாக்கியர்களுடன் தேவதத்தனும் தீட்சை பெற்று பௌத்த சங்கத்தில் சேர்ந்தான்.

ஆனால் துறவி ஆன பிறகும்கூட, கௌதம புத்தருக்கு அதிகரித்துவந்த புகழ் பிடிக்கவில்லை. தானே சங்கத்தின் தலைவராக வேண்டும் என்று தேவதத்தன் விரும்பினான். புத்தர் இருக்கும்வரை அது நடக்காது என்று தெரிந்ததும், சூழ்ச்சி செய்ய ஆரம்பித்தான். அதனால் சில துறவிகளுடன் சேர்ந்து, சங்கத்திலிருந்து அவன் பிரிந்து போனான்.

புத்தர் அந்தத் துறவிகளுக்கு உண்மையை உணர்த்த சாரி புத்திர னையும், மொக்கலாயனையும் அனுப்பி னார். மற்ற துறவிகளுக்கு அவர்கள் செய்த தவறு புரிந்தது. தேவதத்தன் தனக்கு ஏற்பட்ட தோல்வியால் மனம் புழுங்கினான். ஒரு நிலையில் புத்தரைக் கொலை செய்யவும் திட்டமிட்டான். இதில் பிம்பிசாரரின் மகன் அஜாதசத்ருவின் உதவி அவனுக்குக் கிடைத்தது.

அஜாதசத்ருவின் மனமயக்கம்

மகத நாட்டு அரசர் பிம்பிசாரர் புத்தருடைய சீடர். புத்தர் மகத நாட்டில் இருந்ததால், அவர் உயிரோடு இருக்கும்வரை தேவதத்தனின் எண்ணம் நிறைவேற வாய்ப்பில்லை. அதனால் பிம்பிசாரரின் மகன் அஜாதசத்ருவை தேவதத்தன் தூண்டிவிட்டான். "உன் அப்பாவுக்கு முதிர்ச்சியே இல்லை. அவரே சாகும்வரை ஆட்சி செய்துகொண்டிருந்தால், நீ எப்போது அரசனாவது?" என்று தூண்டிவிட்டான்.

இந்தத் தூண்டுதலுக்கு அஜாதசத்ரு மயங்கினான். மகத நாட்டின் அரச பதவியை அடைய, அதுவே சரியான தருணம் என்று அவன் நினைத்தான்.

ஓர் இரவு, கட்டாரி எனப்படும் குத்துவாளை எடுத்துக்கொண்டு தன் அப்பாவைக் கொல்ல அவன் சென்றான். ஆனால், பிம்பிசாரரின் மெய்க்காப்பாளர்கள் அவனைப் பிடித்துவிட்டார்கள். அஜாதசத்ருவை, பிம்பிசாரரிடம் கொண்டுவந்து நிறுத்தினார்கள். கௌதம புத்தரின் உபதேசங்களைப் பிம்பிசாரர் உணர்ந் திருந்தார். தன் மகனுக்கு அவர் தண்டனை அளிக்கவில்லை. தானாகவே அரச பதவியைத் துறந்தார். அஜாதசத்ருவை மகத நாட்டு அரசனாக முடிசூட்டிவிட்டு, அவர் பௌத்த பிட்சுவாகிவிட்டார்.

தேவதத்தன் ஆட்சி

அஜாதசத்ரு அரசனாகிவிட்டதால் மகத நாட்டுத் தலைநகர் ராஜகிரஹத்தில் தேவதத்தன் வைத்ததுதான் சட்டம். ராஜகிரஹத்தில் இருந்த பௌத்த விஹாரத்தில் (கோயில்) மழைக்காலத்தில் மூன்று மாதங்களுக்குத் தங்குவது புத்தரின் வழக்கம். அந்தக் காலத்தில் புத்தரைக் கொல்லத் தேவதத்தன் திட்டம் வகுத்தான்.

அஜாதசத்ருவின் படையிலிருந்து தேர்ந்த வில்லாளிகளைத் தேர்ந்தெடுத்து, புத்தர் வரும் வழியில் தேவதத்தன் நிறுத்தினான். ஆனால், புத்தரின் ஒளி பொருந்திய முகத்தைக் கண்டதும், அவர்கள் அம்பு எய்யாமல், மன்னிப்புக் கேட்டு விலகிவிட்டனர்.

திட்டம் தோல்வியடைந்ததால், தேவதத்தனின் மனம் கொதிக்க ஆரம்பித்தது. ஒரு நாள் மலை மீது ஒரு சமாதியில் புத்தர் அமர்ந்திருந்தபோது, மலை உச்சியிலிருந்து ஒரு பாறையை உருட்டிவிட்டுக் கொல்ல முயற்சித்தான். அதுவும் முடியாமல் போனது.

தேவதத்தன் நிதானம் இழக்க ஆரம்பித் தான். கடைசியாகப் புத்தரைக் கொல்ல நீலகிரி என்ற யானையை ஏவினான். ஆனால் அந்த யானை புத்தரின் கண்களைக் கண்டவுடன் சட்டென்று அமைதியாகிவிட்டது. புத்தர் அதற்கு ஆசி வழங்கினார்.

சில காலத்துக்குப் பிறகு தேவதத்தன் உடல்நலம் குன்றினான். அவனுடைய கடைசிக் காலம் நெருங்கியது. தான் செய்த தவறும் அவனுக்குப் புரிந்தது. புத்தரிடம் மன்னிப்பு கேட்க விரும்பினான். ஆனால், அப்போது அவனுக்கு நடக்கக்கூட சக்தி இல்லை. கடைசியில் சிலரது உதவியுடன் புத்தரைக் காண தேவதத்தன் புறப்பட்டான். ஆனால், வழியிலேயே அவனது உயிர் பிரிந்துவிட்டது.

புத்தர் வாழ்வில் உங்கள் பகுதியில் நடைபெறும் சமயத் திருவிழாக்கள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனந்த ஜோதி ஆன்மிக இணைப்பு குறித்த உங்கள் கருத்துகளையும் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

தமிழகம்

11 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்