மாலையில் விளக்கேற்றினால் குபேர மகாலக்ஷ்மி வருவாள்; அட்சய திருதியை நாளில், நாணயம் வைத்து வழிபாடு! 

By வி. ராம்ஜி

செல்வந்தராக இருப்பவர்கள் அட்சய திருதியை நாளில், அன்னதானம் செய்வதோ உணவுப் பொட்டலம் வழங்குவதோ, உடையோ குடையோ வழங்குவதோ பெரியவிஷயமல்ல. மாறாக, ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், தங்களால் முடிந்த அளவுக்கு உணவுப் பொட்டலம் வழங்கினால் அதுவே மிகப்பெரிய புண்ணியம். அதைக் கண்டு கிருஷ்ண பரமாத்மா குளிர்ந்து போய் அருளுவார்.


தன் ஏழை நண்பன் குசேலன், பசியுடனும் வறுமையுடனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் கூட, இனிய ஸ்நேகிதன் கண்ணனை வெறுங்கையுடன் பார்க்கக் கூடாது என்றெண்ணி, வீட்டிலிருந்த அவலை மடித்து எடுத்துவந்து கொடுத்தான் என்கிறது புராணம். இந்த அவலை ஒரு கை எடுத்துச் சாப்பிட்டதுமே, குசேலனின் குடிசை மாளிகையானது. அந்த மாளிகையில் எல்லாச் செல்வங்களும் குடிகொண்டன. மனைவி மக்கள் ஆபரணங்கள் அணிந்து, புத்தாடையுடன் திகழ்ந்தார்கள்.
ஆகவே, ஏழ்மை நிலையில் எவரொருவர் அட்சய திருதியைநாளில், தங்களால் இயன்ற தான தருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு உடனே அருள்மழை பொழிவார் மாயக்கண்ணன்.


வீட்டில், முன்னோர்கள் படமிருந்தால், அந்தப் படங்களுக்கு அட்சய திருதியை நாளில், மாலை வேளையில், விளக்கேற்றி, பூக்களிட்டு, அவர்களுக்குப் பிடித்த ஏதேனும் இனிப்புப் பண்டத்தை நைவேத்தியமாகப் படைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். இதில் குளிர்ந்த முன்னோர்கள், நம்மை ஆசீர்வதிப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். கருத்துவேற்றுமையில் இருந்த தம்பதி, ஒன்றிணைவார்கள். இழந்த சொத்துசுகங்களைப் பெறுவார்கள்.


அட்சய திருதியை நாள் என்பது கிருஷ்ணரை வணங்கும் நாள். அன்றைய தினம் பரசுராமர் அவதரித்த நாள். குபேரனுக்கு யோகம் கிடைத்த நன்னாள். மகாலக்ஷ்மியின் பரிபூரண அருள் பக்தர்களுக்குக் கிடைத்த அற்புத நாள். இவர்களின் அருளையெல்லாம் பெறுவதற்கு, அட்சய திருதியை நாளில், மாலையில் விளக்கேற்றுங்கள். மகாலக்ஷ்மி நம் வீட்டில் வாசம் செய்வாள். பூஜையறையில், நாணயங்களை ஒரு தட்டில் வைத்து, அதற்கு சந்தனம், குங்குமமிட்டு, அட்சதையிட்டு, தீபாராதனை காட்டுங்கள். செல்வ கடாக்ஷம் இல்லத்தில் நிறைந்திருக்கும்!


முக்கியமாக, நம் குலதெய்வத்தை நினைத்து, குடும்பமாக அமர்ந்து வேண்டிக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு கல்வியில் இருந்த தடைகள் யாவும் நீங்கும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். புதிய நகைகள் வாங்கவும் ஆடைகள் வாங்கவும் சூழல் உருவாகும். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆகவே மாலையில் விளக்கேற்றி மகாலக்ஷ்மியையும் குலதெய்வத்தையும் மனதாரப் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.


அட்சய திருதியை நாளில், புதிதாகக் கடைகள் திறப்பது கம்பெனி திறப்பது தடையின்றி வெற்றி பெறும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். முக்கியமாக, உணவகங்கள் திறப்பது, மிகுந்த லாபத்தைப் பெற்றுத்தரும். அதனால்தான், அள்ள அள்ளக் குறையாமல் உணவு வந்த பாத்திரத்துக்கு அட்சயப் பாத்திரம் என்றே பெயர் அமைந்தது.
எனவே, கலை, வணிகம் உள்ளிட்ட எந்த விஷயமாக இருந்தாலும் அட்சய திருதியை நாளில் தொடங்குவது சிறந்தது. தற்போதைய நிலையில், அதைத் தொடங்க இயலாதவர்கள், மஞ்சள் துணியில், மாலையில் வீட்டில் விளக்கேற்றியதும் 11 ரூபாய் முடிந்துவைத்து, பிறகொரு நாளில் தொடங்குங்கள். லாபம் பெருகும். தொழில் சிறக்கும். கலைகளில் சிறந்துவிளங்குவீர்கள்.

அட்சய திருதியை அன்று மாலையில், வீட்டில் விளக்கேற்றும் சூழலில், உப்பு, சர்க்கரை, மஞ்சள் ஆகியவற்றை வைத்து பூஜிப்பது ரொம்பவே விசேஷம். இதுவரை தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும்.


குறிப்பாக, ஆணுக்கோ பெண்ணுக்கோ நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த திருமணம் முதலான வைபவங்கள், விரைவிலேயே நடைபெறும். முடிந்தால், அட்சய திருதியை நன்னாளில், சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் தானமாக வழங்கலாம்.


அப்படி வழங்க இயலாதவர்கள், மஞ்சள், குங்குமம் கொடுத்து, கூடவே வெற்றிலை பாக்குடன் ஒருரூபாய் வழங்கி மகிழலாம். இதனால், மங்கல காரியங்களும் நடக்கும். செல்வமும் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இன்று 26.4.2020 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்