பிரார்த்தனை வார்த்தைகளில் இல்லை: ஓஷோ கதை

By சங்கர்

ரஷ்யாவில் மூன்று குருமார்கள் திடீரென மக்களிடையே பிரபலம் ஆயினர். ரஷ்யாவின் புகழ்பெற்ற மதகுருவுக்கு அந்த மூன்று துறவிகள் மீதும் பொறாமையும் கோபமும் ஏற்பட்டது. அவர் அந்த மூன்று துறவிகளையும் பார்ப்பதற்காக அவர்கள் வசிக்கும் கிராமத்திற்குப் படகில் சென்றார்.

அந்தத் துறவிகள் வசித்த கிராமம் ஒரு ஏரியின் கரையில் இருந்தது. ஏரியைக் கடந்து கரையில் இறங்கினார் மதகுரு. திடீர் பிரபலமடைந்த மூன்று துறவிகளும் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தனர். குடியானவர்களைப் போல எளிமையாக அவர்கள் இருந்தனர். மதகுருவைப் பார்த்தவுடன் எழுந்து பயபக்தியுடன் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். இதைக் கண்டு மதகுருவுக்குப் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

“இவர்கள் நான் நினைத்து வந்தது போல அபாயகரமானவர்கள் அல்ல. இவர்களைத் திருத்திவிடலாம்.” என்று எண்ணி அவர்கள் எப்படி துறவிகளாக மாறினார்கள் என்று கேட்டார்.

“எங்களுக்குத் தெரியாது. எங்களைத் துறவிகள் என்று சொல்லமுடியுமா என்றும் தெரியவில்லை. மக்கள் எங்களை அப்படி அழைக்கிறார்கள். நாங்கள் துறவிகள் அல்ல, எங்களை அப்படி அழைக்க வேண்டாம் என்றுதான் அவர்களிடம் சொல்கிறோம். நாங்கள் அவர்களிடம் சொல்லச் சொல்ல அவர்கள் எங்களைக் கூடுதலாக வழிபடுகிறார்கள். அதனால் நாங்கள் அவர்களிடம் பேசுவதைக்கூட விட்டுவிட்டோம்” என்றனர்.

மதகுரு மேலும் சந்தோஷமடைந்தார். “உங்களது பிரார்த்தனை என்ன? எப்படி பிரார்த்தனை செய்வது என்று தெரியுமா?” என்று கேட்டார்.

மூன்று பேரும் ஒருவரையொருவர் பார்த்து விழித்தனர். “உண்மையிலேயே சொல்லவேண்டுமெனில், எங்களுக்கு எந்தப் பிரார்த்தனையும் செய்யத் தெரியாது. சொல்வதற்கே சங்கடமாக இருக்கிறது. ஆனாலும் நீங்கள் கேட்பதால் சொல்கிறோம். நாங்களே ஒரு பிரார்த்தனை ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறோம்.

தந்தை, மகன் மற்றும் தூய ஆவியாக ஒரே கடவுள் இருக்கிறார் என்று எங்களுக்கு சொல்லப்பட்டது. நாங்கள் மூன்று பேராக உள்ளோம். கடவுளும் மூன்றாக உள்ளார். அதை வைத்து நாங்கள் ஒரு பிரார்த்தனை மந்திரத்தை ஜெபிக்கத் தொடங்கினோம். ‘ நீங்களும் மூவர். நாங்களும் மூவர். எங்கள் மீது கருணை காண்பியும்’. இதுவே எங்கள் பிரார்த்தனை” என்றனர்.

அந்த மதகுரு அந்த மூன்று பேரையும் பார்த்து எரிச்சல் அடைந்தார். “ இது என்ன முட்டாள்தனம். இது ஒரு பிரார்த்தனையா? நான் உங்களுக்கு சரியான பிரார்த்தனை முறையைச் சொல்லித் தருகிறேன்” என்றார்.

அவர்களும் அவரிடம் திரும்பத் திரும்ப மூன்று முறை கேட்டு பிரார்த்தனையைக் கற்றுக்கொண்டனர்.

மதகுரு மிகவும் திருப்தியாக தனது படகில் ஏறினார். ஏரியின் நடுவில் அவர் ஒரு காட்சியைக் கண்டார். படகோட்டியின் கண்களிலும் வியப்பு. அவரிடம் பிரார்த்தனையைக் கற்றுக்கொண்ட மூன்றுபேரும் தண்ணீரின் மேல் படகை நோக்கி ஓடிவந்தனர்.

மதகுருவின் படகு நின்றது. அவர்கள் மதகுருவிடம், “தயவுசெய்து எங்களுக்கு உங்கள் ஜெபத்தை இன்னும் ஒரே ஒரு முறை கற்றுக்கொடுங்கள். எங்களுக்கு மறந்துபோய்விட்டது” என்று கேட்டனர்.

மதகுரு வியப்பில் ஆழ்ந்தார். அவர் அந்த மூன்று மனிதர்களின் பாதம் தொட்டு வணங்கினார். “நான் என்ன சொல்லிக்கொடுத்தேனோ தயவுசெய்து அதை மறந்துவிடுங்கள். உங்கள் பிரார்த்தனை ஏற்கெனவே கேட்கப்பட்டுவிட்டது.

எனது பிரார்த்தனைதான் இதுவரை கேட்கப்படவேயில்லை. நீங்கள் உங்கள் முறையிலேயே கடவுளைத் தொழுங்கள். என்னை மன்னியுங்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

33 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்