ராமனின் திருநாமமே இனிப்பானது

By யுகன்

க்தி மார்க்கத்தில் தங்களுடைய உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்த எண்ணற்ற பக்தர்களின் உன்னதமான சரித்திரங்களை படித்திருப்போம். ராம நாமத்தின் பெருமையை அதன் உயர்வை அதன் தாராளத்தைப் பாடுவதையே தன்னுடைய வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருந்தவர் தியாக பிரம்மம் என்றும் தியாகய்யா என்றும் அழைக்கப்பட்ட தியாகராஜர். பக்தியின் பரிபூரண அடையாளமாகப் புகழப்படும் தியாகராஜர் அவதரித்த 250-வது ஆண்டு இது.

பஞ்சரத்தினங்களின் மேன்மை

கர்னாடக இசை உலகில் இன்றைக்கும் என்றைக்கும் பசுமை மாறாமல் ஒலித்துக் கொண்டிருப்பவை தியாகராஜர் அருளிய பஞ்சரத்னக் கீர்த்தனைகள். `ஜகதாநந்தகாரக’ என்னும் கீர்த்தனையில் தியாகராஜர் சொல்வார், “தியாகராஜனின் நண்பனே நீ வேதங்களின் சாரமாக விளங்குகிறாய். உன்னுடைய கல்யாண குணங்கள் கணக்கற்றவை. உன்னுடைய புகழ் வரம்பற்றது. எல்லாவகையான பாவங்களையும் போக்கும் உன்னை இந்த தியாகராஜன் பூஜை செய்கிறான். உன்னையன்றி வேறு யாரால் இந்த உலகிற்கு ஆனந்தத்தை அளிக்க இயலும்?” என்பார்.

`துடுகு கல’ என்னும் கீர்த்தனையில், “உன்னையன்றி வேறு எந்த ராஜகுமாரன் என்னை முன்னேற்றுவான்?” என்பார் ராமனின் மீது அளப்பரிய பக்தியைக் கொண்டிருக்கும் தியாகராஜர். ‘ஸாதிஞ்செனெ’ என்னும் கீர்த்தனையில், “உன்னுடைய பாதங்களை அனுதினமும் சரணடையும் வரத்தை எனக்குக் கொடு. இன்ப, துன்பங்களை சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை எனக்குக் கொடு” என்று வேண்டுவார். `கநகநருசிரா’ என்னும் கீர்த்தனையில், “ராமனின் திருநாமமே இனிப்பானது. ருசியானது. தினமும் அதை ஜபிக்கும் வரத்தை அருள்வாய்” என்பார். `எந்தரோ மகானுபாவுலு’ என்னும் கீர்த்தனையில், “பரமபக்தர்களாக, ராமச்சந்திரனின் திவ்ய பாதார விந்தங்களையே தியானித்துக் கொண்டு, அவனுக்குத் தொண்டனாகி, தியாகராஜனால் பூஜிக்கப்படும் அந்த ராமனின் அனுக்ரகத்திற்குத் தகுதியுடையவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நமஸ்காரங்கள்” என்பார்.

ராமனே மேலானவன்

பொதுவாக மும்மூர்த்திகளோடு ராமரை ஒப்புமைப்படுத்தி பாடல்களைப் பலரும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் தியாகராஜர் ராமனின் பெருமையைச் சொல்லும்போது மும்மூர்த்திகளுக்கும் மேலாக சில பாடல்களில் உயர்வாக குறிப்பிடுவார்.

ஆயிரக்கணக்கான பாடல்களை தியாகராஜர் எழுதியிருக்கக் கூடும் என்பதற்கு அவருடைய சீடர் ஒருவரின் பாடலையே உதாரணமாகக் குறிப்பிடுவார்கள். அந்தச் சீடரின் பெயர் வெங்கடரமண பாகவதர். தியாகராஜரின் சீடரான இவர், `குருசரணம் பஜரே (சங்கராபரணம்)’ என்னும் பாடலில் தன்னுடைய குருவை ஒரு நூறாயிரம் பாடல்களைப் பாடியவர் என்று வர்ணித்துப் பாடியிருக்கிறார்.

சரணாகதியே சாரம்

கீர்த்தனைகளை மட்டுமே தியாகராஜர் எழுதவில்லை, நவுகா சரித்திரம் என்னும் ஒரு சிறு இசை நாடகத்தையும் அவர் இயற்றியுள்ளார். யமுனா நதிக்கரையில் கண்ணனும் கோபியரும் நிகழ்த்திய படகுப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு கவித்துவமாக புனையப்பட்டது இது.

பக்தி மார்க்கத்தில் சரணாகதி தத்துவமே இறுதியானது. பக்தியின் சாரமும் அதுதான் என்பதை விளக்கும் படைப்பு இது. மனித முயற்சிகள் எல்லாம் கைவிடும் நிலையில் இறைவன் ஒருவனே நம்பிக்கைக்குரியவன் என்பதை உணரவைக்கும் நாடகம் இது.

கோபியரின் தலைக்கனம்

நாவல்பழம் பெறுவதற்காகத் தெருக்களைச் சுற்றிக் கொண்டுவருகின்ற கண்ணனின் குழலோசையைக் கோபியர் கேட்கின்றனர். கோபியர் கண்ணனோடு ஆடிப்பாடியபடி யமுனைக் கரையை அடைகின்றனர். அங்கிருந்து தொடங்குகிறது அவர்களின் படகுப் பயணம். கண்ணனே தங்களுடன் இருக்கிறான் இனி எங்களுக்கு என்ன கவலை? யாரால் எங்களை என்ன செய்துவிட முடியும் என்ற இறுமாப்பில் திளைக்கின்றனர் கோபியர். இந்தக் கர்வத்தை அடக்க நினைத்தான் கண்ணன். கடுமையான இடியும் புயலும் மாயமாக அங்கு தோன்றுகின்றன. தொடர்ந்து பெய்த மழையில் அலைவீசும் காற்றில் நிலையின்றிப் படகு ஆடி அலைந்தது. திடீரென்று படகில் சிறு பிளவு தோன்றியது. ஆற்றுநீர் வேகமாகப் படகினுள் நுழைகிறது. பயத்துடன் கோபியர் கண்ணனை வேண்டுகின்றனர். “உங்கள் ஆடைகளை அவிழ்த்துப் படகினுள் உள்ள ஓட்டையை அடையுங்கள்” என்றான் கண்ணன். வேறுவழி ஒன்றும் தெரியாமல், கண்ணன் மேல் முழு நம்பிக்கை கொண்டு கோபியர் அவனுக்கு அடிபணிகின்றனர். கண்ணன் அப்போது புயலைப் போக்கி அருளுகின்றான். இந்த நூலில் இருபத்து மூன்று பாடல்கள் உள்ளன.

பாகவதம் குறிக்கும் பக்தி நெறிகள்

இறைபுகழ் கேட்டல் (சிரவண), அவன் புகழ் பாடல் (கீர்த்தனா), எப்போதும் அவனையே நினைத்தல் (ஸ்மரணா), அவன் திருவடிகட்குச் சேவை செய்தல் (பாதசேவன), அவனுக்குப் பூஜை செய்து வழிபடல் (வந்தன), தொண்டு செய்தல் (தாஸ்ய) இவையெல்லாம் பாகவதம் அறிவுறுத்தும் பக்தி நெறிகள். இந்த பக்தி நெறிகளை அடிப்படையாகக் கொண்டு பிரகலாத சரித்திரத்தையும் தியாகராஜர் எழுதியிருக்கிறார். பக்தி மரபில் பிரகலாதனுக்கு ஈடு இணையில்லை. பிரகலாதனின் பக்தியை உணர்த்தும் விதமாக ஐந்து அங்கங்களில் பிரகலாத சரித்திரத்தை நாடகமாக 45 பாடல்களில் எழுதியிருக்கிறார் தியாகராஜர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்