பக்தியில் கனிந்த மூதன்னை

By ரஞ்சனி பாசு

புனிதவதி என்பது அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர். சிறு வயதில் மணல் வீடு கட்டி விளையாடும் பருவத்திலேயே சிவபெருமானைப் பற்றியே பேசி வளர்ந்தார். சிவனடியார்களைக் கண்டால் சிவன் என்றே வணங்கி, வழிபட்டார். மணப்பருவம் அடைந்த அவரை, நாகப்பட்டினத்தின் வணிகக் குடும்பத்தில் பிறந்த பரமதத்தன் என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தனர். காரைக்காலில் தங்கள் வாழ்வைத் தொடங்கினர் அந்தத் தம்பதி. இறையன்பு மேலும் பெருக, சிவனடியார்களுக்குக் கொடையளித்து, நற்குண நற்செய்கையால் கணவருக்குப் பெரும் புகழ் சேர்த்து இல்லற தர்மத்தை வழுவாது நடத்திவந்தார் புனிதவதியார்.

பரமதத்தன் ஒருநாள் இரு மாங்கனிகளை வீட்டுக்குக் கொடுத்தனுப்பியிருந்தார். அவ்வேளையில் சிவனடியார் ஒருவர் பசியுடன் வந்தார். அமுது தயாராக இல்லை. எனவே, புனிதவதியார் ஒரு கனியை அவருக்குத் தந்தார். உணவருந்தும் வேளையில் பரமதத்தனுக்கு மற்றொரு கனியைப் பரிமாறினார். சுவை மிகுந்த அக்கனியை உண்ட பரமதத்தன், மற்றொன்றையும் கேட்டார்.

செய்வதறியாத புனிதவதியார், சிவபெருமானைத் துதிக்க, அவர் கையில் அதிமதுரக் கனி ஒன்று தோன்றியது. அதைக் கணவருக்குப் படைத்தார். சுவையில் மாறுபாட்டை உணர்ந்த பரமதத்தன் காரணம் கேட்க, வேறு வழியின்றி இறைவனின் அருட்கொடை அக்கனி என்று உண்மையைச் சொன்னார் அம்மையார்.

‘அவ்வாறாயின் மற்றொரு கனியை வருவித்துத் தருக’ என்றார் பரமதத்தன். சிவபெருமானைச் சரணடைந்த அம்மையாரின் கரங்களில் மற்றுமொரு கனி வந்தது. பரமதத்தன் வாங்கவும் அது மறைந்தது. இறைவனின் திருவிளையாடலை உணர்ந்த பரமதத்தன், தன் மனைவி ஒரு தெய்வப் பெண் என்பதை உணர்ந்து அவரை விட்டு நீங்கினார். பாண்டி நாட்டுக்குச் சென்று வணிகம் புரிந்து, வேறொரு பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். அவருக்குப் பிறந்த பெண்குழந்தைக்குப் புனிதவதி என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

புனிதவதியைக் கணவரிடம் சேர்ப்பிக்க சுற்றத்தினர் முடிவு செய்து, மதுரைக்கு அவரை அழைத்து வந்தனர். பரமதத்தன் தன் மனைவி, மகளுடன் வந்து, புனிதவதியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். சுற்றத்தார் திடுக்கிட்டனர். ‘மனைவியை வணங்குதல் முறையோ’ என்றனர். பரமதத்தன், ‘இவர் மானுடப்பிறவி அல்லர். தெய்வப்பிறவி என்று உணர்ந்ததாலேயே வணங்கினேன்’ என்றார். செய்வதறியாது திகைத்த புனிதவதியார், கணவர் பிரிந்த பின் இவ்வுடல் எனக்குத் தசைப்பொதியே. இனி இது வேண்டேன். எலும்புடன் இருக்கும் பேய் வடிவம் தருக என்று சிவபெருமானை வேண்டினார்.

காரைக்கால் அம்மை ஆனார்

பேய் உருக்கொண்ட அவர், கயிலைக்குச் செல்ல விரும்பினார். கயிலையை அடைந்து, அதைக் காலால் மிதிக்க அஞ்சி, தலையால் நடந்தார். இறைவன் மனமகிழ்ந்து, அவரை ‘அம்மையே’ என்று அழைத்தார். பிறவாமை வேண்டிய அம்மை, உமையம்மையுடன் மகிழ்ந்தாடும் திருநடனத்தைக் காணும் வரம் வேண்ட, சிவபெருமான் திருவாலங்காட்டுத் திருத்தலத்தில் திருநடனக் காட்சி அருளினார். அண்டம் அதிர, ஆடல்வல்லானின் அழகிய நடனம் கண்ட அம்மை, ‘கொங்கை திரங்கி’ என்று தொடங்கும் மூத்த திருப்பதிகத்தையும், ‘எட்டியிலவம்’ என்று தொடங்கும் திருப்பதிகமும் பாடிப் போற்றினார். ஆடற்பெருமானின் திருவடியின்கீழ் நீங்காது உறையும் பெருவாழ்வைப் பெற்றார்.

மாங்கனித் திருவிழா

அம்மையார் அவதரித்த காரைக்காலில் அம்மையாருக்குத் தனிக்கோயில் ஒன்று உள்ளது. திருவருளால் அதிமதுரக்கனி பெற்ற திருநாள் ‘மாங்கனித் திருநாள்’ என்ற பெயரில் இன்றும் ஆனி மாதம் பவுர்ணமி நாளில் காரைக்காலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. (2017 ஜூலை 8) பக்தியில் கனிந்த அன்னையின் உணர்வுகளை மனதில் ஏந்தி, மாங்கனித் திருவிழாவைக் கொண்டாடுவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்