அமைதி தவழும் ஆனந்தக் காட்சி

By என்.ராஜேஸ்வரி

ஆகஸ்ட் 22: திருவல்லிக்கேணி யோக நரசிம்மர் சம்ப்ரோஷணம்

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் விழித்தெழும்போது, நாராயணனின் பத்து அவதாரங்களை மனதிற்குள் சொல்லிக் கொண்டே எழ வேண்டும். இதனை மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமனவதார மூர்த்தியை, ராமகிருஷ்ண, பெளத்த, பலராம, கல்கி அவதார மூர்த்தியை என்று கீர்த்தனமாய் சொல்வது கிராமிய வழக்கம். ஆண்டாளும், ஹரி என்ற பேரரவம் கேட்டிலையோ என்கிறாள்.

ஸ்ரீமன் நாராயணன், தூணிலும், துரும்பிலும் வியாபித்து துரிதகதியில் எடுத்த அவதாரம் ஸ்ரீநரசிம்ம அவதாரம். இந்த நரசிம்மர் யோக நரசிம்மராக வீற்றிருக்கும் திருத்தலம் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில். இத்தலத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீவரதராஜர், திருமழிசை ஆழ்வார், கருடாழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளுக்கு மகாசம்ப்ரோஷணம் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 22 ம் தேதி (22.08.16) அன்று நடைபெறவுள்ளது.

இதனையொட்டி முதல்முறையாக ஸ்ரீநரசிம்மருக்கு சொர்ணபந்தனமும், ஸ்ரீவரதராஜ சுவாமிக்கு ரஜத பந்தனமும் பொருத்தப்படவுள்ளது.

நரசிம்மர் பிறந்த தலம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள அஹோபிலம் பெருமாளின் பெருமையை, திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தன் பிரகலாதனுக்கு அருள் பாலிக்க ஹிரண்யகசிபுவைத் தன் தொடையில் வைத்து வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலையாகப் போட்டுக்கொண்டவர், நரசிம்மர்.

பின்னர் கோபம் தணிந்து, கையில் படிந்த ரத்தக் கறையை அருகில் உள்ள ஓடை நீரில் சுத்தம் செய்துகொண்டார். அந்த ஓடையில் அவர் கை வைத்த இடம் என்று சுட்டப்படும் இடம் சென்னிறமாகக் காணப்படுவதைப் பார்க்க முடிகிறது. அந்த இடத்தினை ஒட்டிக் கொஞ்சம் முன்னும் பின்னும் பார்த்தால் ஒடை நீர் சாதாரணமாகத் தெரிகிறது. இந்த அற்புதத்தை இன்றும் காணலாம்.

நவ நரசிம்மரின் பெயர்கள் பார்க்கவ நரசிம்மர், காரஞ்ச நரசிம்மர், யோக நரசிம்மர், சத்ரவட நரசிம்மர், க்ரோடாகார நரசிம்மர், மாலோல நரசிம்மர், அஹோபில நரசிம்மர், பாவன நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர் ஆகியவை ஆகும்.

மாலோலன் மனதுக்கு இனியவன்

இத்தலத்தில் தாயாருடன் இருக்கும் பெருமாள் மாலோலன். செஞ்சுலக்ஷ்மி என்ற தாயாரின் அம்சமான ஆதிவாசிப் பெண்ணை மணந்ததால் பெருமாளின் திருநாமம் மாலோலன். இவ்வூரின் பெயரே மந்திரம். அஹோபிலம் மஹாபலம் என்று சொன்னால் உடல், மனம் வாக்கு, புத்தி ஆகியவற்றுக்கு மஹாசக்தி. மாலோலன் மனதுக்கு இனியன். அஹோபிலம் ஆன்மிக மலையேற்றம் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.

திருவல்லிக்கேணியில் நரசிம்மர்

இந்த அஹோபிலம் நவ நரசிம்மரே சென்னை திருவல்லிக்கேணி திருத்தலத்தில் யோக நரசிம்மராய் அமர்ந்த திருக்கோலத்தில், மனமகிழ்ச்சி பெற யோகங்களை அள்ளி அருளும் வகையில் காட்சி அளிக்கிறார். உற்சவர் தெள்ளியசிங்கர் நின்ற திருக்கோலத்தில், சிங்க முகமற்று, பொலிவாகக் காட்சி அளிப்பதால் இவரின் திருநாமம் தெள்ளியசிங்கர். மனநிலை மாற்றம் கொண்டவர்களுக்கு இந்த நரசிம்ம தரிசனம் தீர்வாக இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். வாழ்வில் மென்மேலும் வளமுறச் செய்பவர் நரசிம்மர் என்பது ஐதீகம்.

யோக நிஷ்டையில் அமர்ந்திருக்கும் நரசிம்மர் என்பதால், இவரது சன்னதி திருக்கதவுகளில் உள்ள மணிகளில் சப்தம் ஏற்படுத்த அமைக்கப்படும் நாக்கு கிடையாது. இவரை தரிசனம் செய்யும்பொழுது மனதால் துதித்தாலே, எண்ணமெல்லாம் நிறைவேறும் என்றும், உடல் உபாதைகள் நீங்குவதற்கு உப்பு, மிளகு இடலாம் என்றும் கூறுகின்றனர்.

வேண்டுவனவெல்லாம் அருளும் நரசிம்மருக்கு நாளை என்பதே இல்லை.

திருத்தல உலா

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பஞ்ச மூர்த்தித்தலம். இங்கு வேங்கட கிருஷ்ணர், ரங்கநாதர், ராமபிரான், கஜேந்திர வரதர், யோக நரசிம்மர் என்று ஐந்து சன்னிதிகளும் பிரதானமாக இருக்கின்றன. திருக்கச்சிநம்பி, வேதாந்தச்சாரியார், ராமானுஜர், மணவாளமாமுனிகள், சக்கரத்தாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் சன்னிதிகள் பிரகாரத்தில் இருக்கின்றன.

ஞானமும் வளமும்

பார்த்தசாரதி திருக்கோயிலில் குடி கொண்டுள்ள நரசிம்மரை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம். பார்த்தசாரதி பெருமாளை வேண்டினால் கல்யாணம், குழந்தை, குடும்ப ஐஸ்வர்யம் ஆகிய வரங்களை அள்ளி அருளுபவர் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

படங்கள்: எம். என். எஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

8 mins ago

உலகம்

6 mins ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

19 mins ago

சினிமா

25 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

50 mins ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்