தெய்வத்தின் குரல்: இருவரும் ஒருவரே

By செய்திப்பிரிவு

சிவ - விஷ்ணு அபேதத்தைக் காட்டும் ஸ்தலங்கள் பல உள்ளன. திருநெல்வேலிச் சீமையில் சங்கர நாராயணன் கோயிலும், ('சங்கர நயினார் கோயில்' என்று தப்பாகச் சொல்கிறார்கள்.) மேற்கே ஹரிஹர க்ஷேத்திரத்திலும் இவ்விரண்டு மூர்த்திகளும் ஒன்றாக இணைந்த பிம்பங்கள் உள்ளன. குற்றாலத்தில் விஷ்ணு மூர்த்தியை அகஸ்திய மஹரிஷி சிவலிங்கமாக மாற்றியிருக்கிறார். இவை பிரபலமான ஸ்தலங்கள். இவ்வளவு பிரபலமில்லாத ஒரு க்ஷேத்திரத்தைப் பற்றிச் சொல்கிறேன்:

திருப்பாற்கடல் என்று ஒரு ஊர் இருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து வேலூருக்குப் போகிற வழியில் இருபது மைலில் இருக்கிறது. முதலில் அந்த க்ஷேத்திரத்தில் ஒரு பெருமாள் கோயில்கூடக் கிடையாதாம். ஈஸ்வரன் கோயில்தான் இருந்ததாம். ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அநேக க்ஷேத்திரங்களுக்குச் சென்று விஷ்ணு தரிசனம் பண்ணிக் கொண்டு வருகிற காலத்தில் அந்த ஊருக்கு வந்தாராம். ஒவ்வொரு நாளும் ஊருக்குப் போகிறபோது விஷ்ணு தரிசனம் பண்ணாமல், அவர் ஆகாரம் பண்ணுவதில்லை என்ற நியமத்தை வைத்துக் கொண்டிருந்தார்.

அவர் திருப்பாற்கடலுக்கு வந்து “எங்கே விஷ்ணு ஆலயம் இருக்கிறது? என்று ஒவ்வொரு கோயிலாகப் போனார். எல்லாம் சிவன் கோயிலாகவே இருந்தன. கடைசியில் விஷ்ணு ஆலயமாகத்தான் இருக்கும் என்று நினைத்து ஒரு கோவிலுக்குள் நுழைந்தார். உள்ளே போனால் ஈசுவரன் இருந்தார். உடனே வெளியே ஒடிவந்துவிட்டார். ஆகாரம் பண்ணவில்லை. வயிறு பசியில் துடித்தது. அதைவிட மனசு 'இன்றைக்கு விஷ்ணு தரிசனம் பண்ணவில்லையே!' என்று துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கிழவர் அவருக்கு முன்னால் வந்து “என்ன ஸ்வாமி! விஷ்ணு தரிசனம் பண்ண வருகிறீர்களா?” என்று கேட்டார்.

“இந்தப் பிரயோஜனமில்லாத ஊரில் எங்கே ஐயா விஷ்ணு கோயில் இருக்கிறது?” என்று அவர் கோபமாக சொன்னாராம்.

“அதோ தெரிகிறதே, அது சாக்ஷாத் விஷ்ணு கோயில்தான்” என்று கிழவர் சொன்னார்.

அந்த கோயிலுக்குத்தான் அந்த வைஷ்ணவர் நுழைந்த பிறகு ஈஸ்வரன் இருப்பதைப் பார்த்துவிட்டு ஒடி வந்திருக்கிறார். அதனால், “ஏன் அய்யா பொய் சொல்கிறீர்? அது ஈஸ்வரன் கோயில்” என்று சொன்னாராம்.

“இல்லவே, இல்லை. நீர்தான் பொய் சொல்கிறீர். அது பெருமாள் கோயில்தான். வேண்டுமானால் உள்ளே வந்து பாரும்” என்று அவர் சொல்ல, “இப்போதுதான் நான் பார்த்தேன் என்று இவர் சொல்ல, கடைசியில் கிழவர் “பந்தயம் கட்டும்;எதற்காகப் பொய் சொல்கிறீர்? “ என்று ஸ்ரீவைஷ்ணவரிடம் அடிதடிச் சண்டைக்குப் போய் விட்டாராம்.

இதற்குள் ஊரில் இருந்தவர்களுக்கு இது தெரிந்து, அவர்களுக்குள் மத்தியஸ்தம் செய்து வைக்க வந்தார்கள்.

“எதற்காக இப்படி சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டும்? எல்லோரும்தான் போய் எது மெய்யென்று பார்க்கலாமே?” என்று ஊர் ஜனங்கள் சொன்னார்கள்.

“நான் அந்த கோயிலுக்குள் நுழையமாட்டேன்” என்று விஷ்ணு பக்தன் சொன்னாராம்.

“வராவிட்டால் விட முடியாது. எப்படி நான் சொல்வது பொய் என்று இவர் பார்க்காமல் சொல்லலாம்? யார் பொய் என்று பார்த்துவிட வேண்டும்” என்று அந்தக் கிழவர் வீம்பு பண்ணிக் கொண்டு, விடமாட்டேன் என்று மல்லுக்கு நின்றார்.

கடைசியில், ஊர் மத்தியஸ்தத்தின் பேரில் இவர்கள் எல்லோரும் கோவிலுக்குள் சென்றார்கள்.

வாஸ்தவத்தில் அங்கே போய் பார்த்தால் சிவலிங்கம் மாதிரி இருந்தது. கீழ் பிரம்ம பீடமாகிய ஆவுடையார் இருந்தது. ஆவுடையாருக்கு நடுவிலிருந்து ஒரு மூர்த்தி எழும்பியதால் அசப்பில் சிவலிங்கம் மாதிரியே தோன்றிற்று. ஆனால் வாஸ்தவத்திலோ ஆவுடையாருக்கு மேலே தெரிந்தது லிங்கமல்ல. லிங்கத்தின் ஸ்தானத்தில் பெருமாள் நின்று கொண்டிருந்தார்.

அதைப் பார்த்தவுடன், 'அடடா! நாம் ஏமாந்து போய்விட்டோமே - மஹாவிஷ்ணு அல்லவா இங்கே இருக்கிறார்? என்று அந்த விஷ்ணு பக்தர் மிகவும் மனம் உருகி, அநேக ஸ்தோத்திரங்கள் பண்ணினாராம்.

கிழவரிடம் மன்னிப்புக் கேட்கத் திரும்பினால், அந்தக் கிழவரே விஷ்ணு மூர்த்திக்குள் கலந்து விட்டார். பெருமாளே கிழவராய் வந்திருக்கிறார்.

திருப்பாற்கடல் என்னும் ஊருக்குப் போனால் இப்போதும் பார்க்கலாம். ஆவுடையார் இருக்கும். அதற்கு மேல் லிங்கம் இருக்கிற இடத்தில் பெருமாள் நின்று கொண்டிருக்கிறார். இந்த க்ஷேத்திரமும் நமக்கு ஈஸ்வரன் வேறு மஹா விஷ்ணு வேறு இல்லை என்ற தத்துவத்தை விளக்குகிறது.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்