தெய்வத்தின் குரல்: அன்னை: கலப்படமற்ற அன்பு

By செய்திப்பிரிவு

தாயன்பைப் போலக் கலப்படமே இல்லாத பூரணமான அன்பை இந்த லோகத்தில் வேறெங்குமே காண முடியவில்லை. பிள்ளை எப்படி இருந்தாலும், தன் அன்பை பிரதிபலிக்காவிட்டாலும்கூட, தாயாகப் பட்டவள் அதைப் பொருட்படுத்தாமல் பூரணமான அன்பைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறாள்.

'பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்று இதைத்தான் சொல்லுகிறோம். 'தேவி அபராத க்ஷமாபன ஸ்தோத்திரம்' என்று அம்பாளிடமே நம் குறைகளைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிற துதி ஒன்று இருக்கிறது. அதில் 'துஷ்டப்பிள்ளை இருப்பதுண்டு. ஆனால் துஷ்ட அம்மா என்று ஒருத்தி கிடையவே கிடையாது என்று வருகிறது. பரிபூரணமாக அன்பையும், தன்னலமே இல்லாத உழைப்பையும், அம்மா ஒருத்தியிடம்தான் பார்க்க முடிகிறது.

குழந்தையாகப் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக் கொள்கிறோம். ஆகாரம் தருவதிலிருந்து சகலத்துக்கும் அவள்தான் குழந்தைக்குக் கதியாக இருக்கிறாள். வயது ஏறுகிற சமயத்தைவிட பால்யத்தில்தான் தாயார், குழந்தை இருவருக்கும் பரஸ்பர அன்பு மிக அதிகமாக இருக்கிறது.

அதிலும் மனித இனத்தைவிடப் பசுக்குலத்திடம்தான் இந்த அன்பு நிரம்பித் ததும்புகிறது. கன்று “அம்மா!” என்று கத்துவதில் உள்ள ஆவல் மாதிரி வேறெங்கும் அன்பைப் பார்க்க முடியவில்லை.

இதைப் பார்த்துதான் மனுஷ்ய ஜாதியே, “அம்மா” என்று கூப்பிட ஆரம்பித்ததோ என்று தோன்றுகிறது. தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மஹாராஷ்டிரம், கன்னடம் முதலிய பாஷைகளிலும் “அம்மா” என்றே தாயாரைச் சொல்கிறார்கள். மலையாளத்தில் “அம்மை” என்பார்கள். சம்ஸ்கிருதத்தில் “மா” என்றும் “அம்பா” என்றும் சொல்லுவதும் இதேதான். ஹிந்தியில் “மா”, “மாயி” என்கிறார்கள். இங்கிலீஷ் “மம்மி”, “மம்மா” எல்லாமும் கன்றுக் குட்டியின் 'அம்மா'விலிருந்து வந்தவைதான் போலிருக்கிறது.

இந்த அம்மாவின் அன்பு ஒரு பக்கம் இருக்கட்டும். இவள் இந்த சரீரத்திற்கு மட்டும்தான் அம்மா. அவளுடைய அல்லது நம்முடைய சரீரம் போன பிற்பாடு இந்த அம்மாவுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை. அப்புறம் வேறு கர்ப்ப வாசம். வேறே அம்மாள் வருவாள்.

இப்படிச் சரீரத்திற்கு மட்டும் அம்மாவாக இல்லாமல், உயிருக்கு அம்மாவாக இருக்கிற ஒருத்தி இருக்கிறாள். சரீரம் அழிகிற மாதிரி உயிர் அழிவதில்லை. இந்தச் சரீரம் போன பிற்பாடு அந்த உயிர் இன்னொரு சரீரத்திற்குப் போகிறது.

இந்த உயிரின் அம்மாதான் நமக்கு சாசுவதமாக, நிரந்தரமாக, எந்நாளும் தாயாராக இருந்து கொண்டிருக்கிறாள். கன்றுக்குப் பசுவைப் போல எந்த ஜன்மத்திலும் எந்தக் காலத்திலும் எல்லாப் பிராணிகளுக்கும் தாயாராக இருக்கும் பரதேவதையின் பாதார விந்தத்தில் நிறைந்த அன்பு வைப்பதே ஜன்மா எடுத்ததன் பிரயோஜனம். ஜன்ம நிவிருத்திக்கும் அதுவே வழி. அதாவது, உயிர் சரீரத்தை விட்ட பின் இன்னொரு சரீரத்தில் புகாமல் பேரானந்தத்தில் கரைவதற்கும் அந்த அம்மாதான் கதி.

நமக்கு இருக்கிற சக்தி எல்லாம் அவளுடையதுதான். ஒரே அகண்ட பராசக்திதான், கண்டம் கண்டமாக, துண்டு துண்டாக ஆகி இத்தனை ஜீவராசிகளிடமும் துளித்துளி சக்தியை வெளிப்படுத்துகிறது.

நாம் ‘சொந்த' முறையில் எதையும் சாதித்ததாகப் பெருமைப்பட்டுக் கொள்ளவும், அகம்பாவம் கொள்ள வும் நியாயமே இல்லை. நாம் எதைச் செய்திருந்தாலும் எல்லாம் அவள் கொடுத்த சக்தியால்தான் நடக்கிறது.

இதை உணர்ந்து அகம்பாவம் சிறிதும் இல்லாமல் அவளிடம் சரணாகதி செய்தால் ஒரே அம்மாவான இவள் இகத்திலும் பரத்திலும் பரமாநுக்கிரஹம் செய்வாள். எப்படி எதுவும் கேட்கத் தெரியாத குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தானே கவனித்துக் கொள்கிறாளோ, அப்படியே ஜகன்மாதாவாகவும் கருணாமூர்த்தியாகவும் உள்ள அம்மா, உண்மையான பக்தி வைத்தவர்கள் தன்னை எதுவும் கேட்காவிட்டாலும்கூட, தானாகவே அவர்களுக்கு இகலோகத்தில் வித்தை, செல்வம், தேககாந்தி முதலிய தந்து, பின்பு ஞானத்தில் பழுத்துப் பரமானந்தத்தைபப் பெறும்படி அருள் புரிவாள்.

பரம ஞான அத்வைத ஆனந்தம் நமக்குக் கிடைத்து, நாம் அந்த ஆனந்தமாகவே ஆகிவிடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். அது அவள் நம் கர்மாவைத் தீர்த்து, என்றைக்கோ ஒருநாள் தரப்போகிற நிலை. அது கிடைக்கிறபோது கிடைக்கட்டும். அதுவே கிடைக்கவில்லையே என்கிற குறை இப்போது நமக்கு வேண்டாம்.

இப்போது நமக்குப் பரம அன்பு அம்மாவான அம்பாள் இருக்கிறாள். அவளுடைய அன்பை நினைத்து அவளிட மும் நாமும் அன்பைச் செலுத்துவதற்கு இப்போதே நமக்குச் சாத்தியமாகிறது.

இதிலுள்ள ஆனந்தத்துக்கு மேல் நமக்கு எதுவும் வேண்டாம். அம்பாள் தியானத்தைவிட நமக்கும் நம் மாதிரியே அவளை அம்மாவாக்கிக்கொண்ட சகல லோகத்துக்கும் நிறைவான இன்பம் வேறில்லை.

சகல லோகமும் சமஸ்த ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்க அன்பே உருவான சாக்ஷாத் அம்பிகையை எப்போதும் ஆனந்தமாக நினைத்துக் கொண்டிருப்போம்.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்