தெய்வத்தின் குரல்: நளன் கதை - காஞ்சி மடத்து ஆராதனை ஸ்வாமி

By செய்திப்பிரிவு

அத்வைத தத்துவத்தை ஸ்ரீஹர்ஷர் சொன்னதோடு நம் மடத்தில் ஆராதிக்கப்படும் சந்திரமௌளீசுவரரைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

தமயந்தியின் சுயம்வரத்தில் பல ராஜ்ய மன்னர்கள் வந்திருந்ததுபோல, தமிழ்நாட்டிலிருந்தும் சென்றிருந்தார்கள். காஞ்சீபுரத்திலிருந்து போயிருந்த அரசனைப் பற்றி சரஸ்வதி தேவி, தமயந்தியிடம் சொல்கிறாள்:

“இந்த அரசன் காஞ்சீபுரத்தில் சமுத்திரம் போன்ற ஒரு பெரிய தடாகத்தை வெட்டியிருக்கிறான். அது பரம நிர்மலமான ஜலம் நிரம்பியது. அதை வர்ணிக்க முடியாமல் கவிகள் மௌனமாகிவிட வேண்டியதுதான். இந்தத் தடாகத்திலிருந்து தெளித்த துளிதான் சந்திரனோ என்று தோன்றும். இந்தத் தடாகத்திலிருந்து அபிஷேகம் செய்யப்பட்டு ஸ்படிக மயமான யோகேச்வரர் கண்ணுக்குத் தெரியாமல் போகிறார்” என்பது சுலோகத்தின் பொருள்.

சுத்தமான ஸ்படிகம் ஜலத்தைப் போலவே நிறமில்லாதது அல்லவா? அதை ஜலத்துக்குள் போட்டால் அது இருப்பதே தனியாகத் தெரியாது. ஸ்படிக லிங்கத்துக்கு நிறைய ஜலத்தைக் கொட்டி அபிஷேகிக்கும்போது அது ஜலத்திலிருந்து வேறாகத் தெரியாது.

காஞ்சீபுரத்தில் உள்ள ஸ்படிக மயமான யோகேச்வரர் யார்? நம் மடத்திலுள்ள ஸ்ரீ சந்திர மௌளீசுவர ஸ்படிக லிங்கம்தான். ஆதி ஆச்சாரியாள் ஐந்து ஸ்படிக லிங்கங்களை ஐந்து இடங்களில் பிரதிஷ்டை செய்தார். பத்ரியில் முக்தி லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். நேபாளத்தில் உள்ள நீலகண்ட க்ஷேத்திரத்தில் வரலிங்கம்; சிதம்பரத்தில் மோக்ஷ லிங்கம்; சிருங்கேரியில் போக லிங்கம்; காஞ்சீபுரத்தில் யோக லிங்கம் பிரதிஷ்டை செய்தார்.

காஞ்சி மடத்தில் பூஜிக்கப்படும் யோகலிங்கத்தைத்தான் ஸ்படிக மயமான யோகேஷ்வரர் என்கிறார் நைஷதகவி. இந்த மூர்த்தியின் அபிஷேகத்துக்குப் பயனாகிற தீர்த்தத்தைக் கொண்ட தடாகத்தை வெட்டியதே காஞ்சி ராஜனுக்குப் பெருமை என்று சொல்லாமல் சொல்கிறார்.

ஸ்ரீஹர்ஷரின் சுலோகத்தில் ‘யோகேஷ்வர’ என்ற வார்த்தை முடிவாக இருக்கிறது. இதில் ஒரு குளறுபடி. ‘எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்’ என்று ஒரு பழமொழி கேள்விப்பட்டிருக்கலாம். இதில் ‘எழுதினவன்’ என்கிறது ஏட்டுப் பிரதிகள் எடுப்பவனைத்தான். அவன் ஒரு ஓலைச் சுவடியைப் பார்த்து அதிலிருப்பதை இன்னொரு சுவடியில் காப்பி பண்ணுவான். அப்படிப் பண்ணும்போது அவன் ஏதாவது தப்பு செய்துவிட்டால் அது பெரிய அனர்த்தமாகிவிடுவதும் உண்டு.

இங்கே அப்படித்தான் ‘யோகேஷ்வர’ என்பதை ‘யாகேஷ்வர’ என்று எழுதி அதுவே ஒரு பாடாந்தரமாகப் பரவியும்விட்டது. ‘யோ’வுக்கு உள்ள கொம்பை தவறிப்போய் விட்டுவிட்டதால் யோகேஷ்வரர் யாகேஷ்வரராகிவிட்டார்! ஆனாலும் காஞ்சீபுரத்தில் எங்கே தேடிப் பார்த்தாலும், எத்தனை காலத்துக்கு முந்தின கதைகளை ஆராய்ந்து பார்த்தாலும் யாகேஷ்வரர் என்று ஒரு ஸ்படிக லிங்க ஸ்வாமி இருந்ததாகத் தெரியவில்லை.

சமஸ்க்ருத காவியங்களுக்கு உரையெழுதிய பிரசித்தமான உரைகாரர்களில் ஒருவர் மல்லிநாத சூரி என்பவர். அவர் நைஷதத்துக்கு எழுதியிருக்கும் வியாக்கியானத்தில் இந்த இடத்தில் ’யோகேஷ்வர’ என்ற பாடத்தையே எடுத்துக் கொண்டிருக்கிறார். அதோடு அந்த ஸ்படிக லிங்க யோகேஷ்வரர் பிரசித்தி பெற்றவர் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார். ‘ஸ்படிகம் லிங்கம் யோகேஷ்வர இதி ப்ரஸித்தி:’ என்று சொல்லியிருக்கிறார்.

தற்காலத்தில் மஹா பண்டிதராக இருக்கும் மஹாமஹோபாத்யாய கோபிநாத் கவிராஜும் ‘யோகேஷ்வர’ என்ற பாடத்தையே ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆகையினால் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நம்முடைய மடத்து ஸ்வாமியைத்தான் ஸ்ரீஹர்ஷர் சொல்லியிருக்கிறாரென்று ஆகிறது.

ஸ்ரீஹர்ஷருக்கு அத்வைத தத்துவத்தில் நிரம்பவும் பற்று இருந்ததோடு, ஸ்ரீ ஆச்சாரியர்களால் ஆராதிக்கப்பட்ட யோக சந்திர மௌளீசுவர லிங்கத்திடமும் மிகுந்த பக்தி இருந்ததாகத் தெரிகிறது. அவர் எண்ணூறு வருஷங்களுக்கு முன்னால் வசித்ததாக அறிகிறோம்.

காஞ்சி ராஜனைப் பற்றிச் சொன்னதுபோல், அவர் குளம் வெட்டியவர்களைப் பல இடங்களில் பெரிதாகப் புகழுவதைப் பார்க்கும்போது அவர் ரொம்பவும் தண்ணீர்ப் பஞ்சமுள்ள குஜராத், மார்வாட் (ராஜபுதனம்) போன்ற சீமையைச் சேர்ந்தவர் என்று தோன்றுகிறது. இந்தச் சீமைகளில்தான் குளம், குட்டை, கிணறு வெட்டுவதைப் போற்றுகிற வாபீ ப்ரசஸ்தி என்ற பல சாஸனங்கள் கிடைக்கின்றன.

பல நூறு வருஷங்களுக்கு முன்னால், வட இந்தியாவில் எங்கோ ஒரு பிரதேசத்தில் இருந்த ஒரு கவி காஞ்சீபுரத்து யோகேஷ்வரரைத் தெரிந்துகொண்டு அவரைச் சிலாகித்துக் கூறியிருக்கிறார் என்பதிலிருந்து நம் மடத்தின் தொன்று தொட்ட பிரசித்தி தெரிகிறது.

அதோடு இங்கே பூஜிக்கப்படுகிற சந்திரமௌளீசுவரர் உலகுக்கெல்லாம் சொந்தமான சுவாமி என்றும் தெரிகிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் சொந்தமாக ஒரு சுவாமியை வைத்துப் பூஜை செய்கிறோம். உலகத்தையே ஒரு வீடாக்கி அதற்கு சுவாமியாகப் பஞ்சலிங்கங்களை ஆச்சாரியார் பிரதிஷ்டை செய்திருக்கிறார். லோகமெல்லாம் க்ஷேமமாயிருப்பதற்காக இந்தச் சந்திரமௌளீசுவர ஆராதனை எந்நாளும் அமோகமாக நடந்து வர வேண்டும்.

*குறிப்பிடப்படுபவர் இதன் பிற்பாடு மறைந்துவிட்டார்

- தெய்வத்தின் குரல் (ஏழாம் பகுதி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்