பைபிள் கதைகள் 28: கடவுள் தந்த கட்டளைகள்

By அனிதா அசிசி

கடவுள் காட்டிய இரக்கத்தால் எகிப்திலிருந்து தப்பித்து செங்கடல் வழியாக சீன் பாலைவனத்தில் ஏலிம் என்ற இடத்துக்கு வந்தனர் இஸ்ரவேல் மக்கள். அங்கே பட்டினியால் சாகாதிருக்க அவர்களுக்கு வானிலிருந்து உணவைப் பொழியச் செய்தார் கடவுள். அந்த உணவுக்கு ‘மன்னா’எனப்பெயரிட்டு மகிழ்ந்த மக்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். பிறகு “இங்கிருந்து கிளம்பிச் செல்வோம்” என மோசே கேட்டுக்கொண்டதால் அவரைப் பின் தொடர்ந்தனர். எகிப்தை விட்டுக் கிளம்பி இரண்டு மாதங்கள் கடந்துவிட்டிருந்த நிலையில் இப்போது இஸ்ரவேலர் சீனாய் மலையடிவாரத்துக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த மலையின் உச்சியில்தான் மிகப்பசுமையான ஓரேப் சிகரம் இருந்தது. மேகங்கள் அந்தச் சிகரத்தை தழுவிச்சென்றன. மோசே தனது மாமனாரின் ஆட்டு மந்தையை மேய்த்துக்கொண்டிருந்தபோது அவற்றுக்கு பசும்புற்களைத் தேடித் தனது மந்தையை நடத்திக்கொண்டு வந்தது இந்த மலைச் சிகரத்துக்குத்தான். இங்கேதான் மோசேவுக்கு ‘கருகாமல் எரிந்த பசும்புதர்’மூலம் மோசேயிடம் கடவுள் முதல்முதலாகப் பேசினார்.

சீனாய் மலையில் மக்கள்

இந்த இடத்துக்கு வந்ததும் மோசே மனநிம்மதி கொண்டார். மக்களும் இந்த மலையடிவாரத்தில் மகிழ்ச்சியுடன் கூடாரம் அமைத்துத் தங்கினார்கள். சில நாட்களுக்குப்பின் மோசே மலையின் மேல் உள்ள சிகரத்தை நோக்கிப் போனார். இதைக்கண்ட மக்கள் அவர் கடவுளிடமிருந்து அடுத்து எங்கே செல்வது என்ற செய்தியை கேட்டுப்பெற்றுவருவார் என்று நினைத்தார்கள். அவர் மலையிலிருந்து இறங்கி வரும் வரையில் கீழே காத்துக் கொண்டிருந்தார்கள். முன்பு மலை உச்சியின்மேல் எரியும் புதர் இருந்த இடத்தை மோசே அடைந்ததும் அது புனிதமான இடம் என்பதை தன்னியல்பாக உணர்ந்து முழந்தாள்படியிட்டார்.

மோசே இவ்வாறு செய்ததும் உலகைப் படைத்த கடவுளாகிய யகோவா அவரிடம் பேசினார். “ இஸ்ரவேல் மக்கள் அனைவரும் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். எனது மக்கள் என்று நான் நினைக்கும்விதமாக அவர்கள் மாறவேண்டும். இதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை அவர்கள் மூலமே நான் அறிய வேண்டும்”என்று கூறினார். கடவுளின் விருப்பத்தை அறிந்துகொண்ட மோசே கீழே இறங்கி வந்தபோது மக்கள் ஓடிவந்து அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். கடவுளின் விருப்பத்தை மோசே இஸ்ரவேலருக்கு எடுத்துக் கூறினார். அதைக்கேட்ட அவர்கள் “கடவுளின் விருப்பப்படியே ஆக விரும்புகிறோம். அவருக்குக் என்றென்றும் கீழ்ப்படிவோம்”என்று உறுதியளித்தார்கள்.

கடவுளின் இடிமுழக்கம்

இஸ்ரவேலர் இப்படி உறுதியளித்ததைக் கேட்டுக்கொண்டிருந்த கடவுள், இனி அவர்களோடு நேரடியாகப் பேசலாம் என்ற முடிவுக்கு வந்தார். எனவே மலைச்சிகரத்தின் உச்சியில் புகை உண்டாகும்படி செய்தார். அதன் தொடர்ச்சியாக இடி, மின்னல் முழக்கத்தை உருவாக்கினார். பிறகு மக்களிடம் மேகத்தின் புகை மூட்டத்திலிருந்து தன் குரல்வழியே பேசினார்: “எகிப்தின் அடிமைத் தளையிலிருந்து உங்களை மீட்டு அழைத்து வந்த உங்களின் கடவுளாகிய யகோவா நானே.. என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுள் இல்லை. வேறு எந்தக் கடவுளையும் நீங்கள் வணங்கக் கூடாது.

கடவுள் என்ற பெயரில் கற்பனையால் நீங்கள் எதையும் உருவாக்கி வணங்கக் கூடாது”என்று கடும் குரலில் கட்டளையிட்டார். அவ்வாறு கட்டளையிட்டு முடித்தபோது மின்னல் மக்களின் கண்களைக் கூசச்செய்யும்படியாகவும் இடி காதுகளை வலிக்கச் செய்யும் விதமாகவும் இருந்தது. இதனால் பயந்துபோன மக்கள் “எங்கள் மூப்பனே… நீரே கடவுளிடம் பேசும்… கடவுள் எங்களிடம் பேசினால் நாங்கள் செத்துப்போய் விடுவோமோ என்று பயமாக இருக்கிறது” என்று அஞ்சி நடுங்கினார்கள். இதைக் கேட்ட கடவுள், தன் மீது அவர்களுக்கு பயமிருப்பதைக் கண்டார்.

எனவே மோசேவை நோக்கி “ மோசே நீ மீண்டும் மலை மீதேறி என்னிடத்துக்கு வா. அங்கு நான் உனக்குத் தட்டையான இரண்டு கற்களைக் கொடுப்பேன். என் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைகளை அதன் வழியே நான் தருவேன். அவை இந்த பூமியில் வாழ்வதற்கான சட்டங்கள்”என்று கூறினார். எனவே மோசே மலைச் சிகரம் நோக்கி ஏறிச் சென்றார். இம்முறையும் மக்கள் அவருக்காக ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தனர். ஆனால் மோசே உடனடியாக அங்கிருந்து திரும்பவில்லை.

பத்து கட்டளைகள்

கடவுள் பேசும் இடமாகிய ஓரேப் மலைச்சிகரத்துக்கு ஏறிச் சென்று முழந்தாளிட்டுக் கைகளை ஏந்தியபடி தியானித்தார் மோசே. உணவு எதையும் உண்ணாமல் தண்ணீர் பருகாமல் இரவும் பகலுமாக நாற்பது திங்கள் அங்கே அவர் தவமிருந்தார். அப்போது மோசேயிடம் இரண்டு தட்டையான கற்களைக் கொடுத்த கடவுள் அவற்றில் தனது கட்டளைகளை எழுதும்படி அவரைப் பணித்தார். கடவுள் கூறக் கூற மோசே அந்த இரண்டு கற்களிலும் பத்துக் கட்டளைகளை எழுதி முடித்தார்.

பத்துக் கட்டளைகள்

1. உன் கடவுளாகிய என்னை நீ உன் முழு மனதோடும், முழு ஆத்மாவோடும் முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும். என்னைத் தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை.

2. உன்னை நேசிப்பது போலவே நீ மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.

3. கடவுளாகிய என் பெயரை வீணாகச் சொல்லாதே.

4. வாரத்தின் ஏழாம் நாளில் எந்த வேலையும் செய்யாதே. மற்ற நாட்களில் உழைக்கும் நீ, ஏழாம் நாளை என்னை நினைத்துத் தியானிக்கும் புனித நாளாக அனுசரி.

5. உன் பெற்றோரை மதித்துக் கீழ்படித்து அவர்களைப் போற்று.

6. கொலை செய்யாதே

7. பாலியல் தொழிலில் ஈடுபடாதே.

8. உனக்குச் சொந்தமில்லாத எந்தப் பொருளையும் திருடாதே. அதற்குப் பிறருடைய உடைமையை விரும்பாதே.

9. யாருக்கு எதிராகவும் பொய் சாட்சி சொல்லாதே.

10. பிறரது மனைவியைக் கவர்ந்து கொள்ளாதே.

(பைபிள் கதைகள் தொடரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

51 mins ago

வாழ்வியல்

42 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்