அம்மே நாராயணா லக்ஷ்மி நாராயணா

By நதீரா

சோட்டாணிக்கரை பகவதியை ஏன், ‘அம்மா நாராயணா’ என்று அழைக்கிறார்கள்?

அம்மா நாராயணா என்றால், ‘பகவான் ஸ்ரீமன் நாராயணனின் இதயத்தில் வீற்றிருக்கும் தாயே... விரைந்து வந்து என்னைக் காப்பாற்று’ என்று பொருள். ஐயப்ப பக்தர்கள் தவறாமல் செல்லும் கோயில்களில் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயிலும் ஒன்று.

கீழ்க்காவு அம்மை

கோயிலின் கிழக்குப் பக்கம் கொடிக் கம்பம் அமைத்துள்ளது. அம்பாள் சன்னிதியும் கிழக்கு முகம் பார்த்தே உள்ளது. இதன் நேர் எதிரே 200 அடி தூரத்தில் திருக்குளம் உள்ளது. குளத்தின் மறுகரையில் உக்கிரகாளியின் சன்னிதி. இதையே கீழ்க்காவு அம்மை என்கின்றனர். இந்த அம்பாள், சோட்டாணிக்கரை தேவியின் தங்கை.

கீழ்க்காவு அம்மையை பிரதிஷ்டை செய்தவர் வில்வ மங்கலம் சுவாமிகள். இந்த சன்னிதியின் இடது பக்கம் பழமையான பலா மரம் ஒன்று இருக்கிறது. இந்த மரத்தின் மேல் ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன. துர்தேவதைகளாலும் மன அதிர்ச்சியாலும் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமடைய இந்த மரத்தில் ஆணி அடிக்கின்றனர்.

குருதி பூஜை

தினமும் இரவு 8 .45 மணிக்கு நடக்கும் ‘குருதி பூஜை’ செண்டை ஒலி முழங்க ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கும்.

நீரில் மஞ்சளையும் குங்குமத்தையும் கரைத்து அந்தச் செந்நிற நீரில் செய்யப்படுவதே குருதி பூஜை. இந்தத் தீர்த்தத்தைத் தெளித்தால் துர்தேவதைகள் விலகி ஓடும் என்பது ஐதீகம். ஒரு காலத்தில் இங்கு உயிர்ப் பலியும் ரத்த பூஜையும் நடந்துள்ளன. காலம் மாறிவிட்டாலும் பழைய பழக்க வழக்கங்களின் நினைவாகவே இன்றும் குருதி பூஜை நடக்கிறது. குருதி பூஜை முடிந்ததும் இந்தச் சிவப்பு நிற தீர்த்தத்தையே பிரசாதமாகத் தருவார்கள்.

பிரம்ம ராட்சசன்

கீழ்க்காவு அம்மையைப் பார்க்கப் போகையில் வழியில் குளத்தின் வடக்கே பிரம்ம ராட்சசன் சன்னிதியைக் காணலாம். சன்னிதி என்றால் சுற்றுச் சுவர், கூரை எதுவும் இருக்காது. திறந்தவெளியில் நான்கு கற்களைப் (வனதுர்க்கை, சாஸ்தா, பத்ரகாளி, ராட்சசன்) பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அந்தக் கற்களுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரமும் ஏற்றுவார்கள். சோட்டாணிக்கரை கோயிலில் உபதேவதைகளுக்குப் பூஜை கிடையாது, நைவேத்தியம் மட்டுமே. மூலஸ்தானத்தில் நைவேத்தியம் முடித்து மீதி பிரசாதம் இங்கு படைக்கப்படும்.

கோயிலின் நியதிகள், கட்டுப்பாடுகள் கடுமையானவை. இதனால்தான் சோட்டாணிக்கரை என்றாலே பலருக்கும் பயம் கலந்த பக்தி வருகிறது.

ஜோதியாக வந்தவர்

ஒரு காலத்தில் இந்தப் பகுதி, காடாக இருந்துள்ளது. இக்காட்டில் வேடுவப் பெண்ணொருத்தி தேவியை வழிபட்டுவந்தாள். அப்போது கோயில் எதுவுமில்லை. தேவியை அரூப ரூபமாக வழிபட்டுவந்தாள்.

ஒரு நாள் அந்த வேடுவப் பெண்ணுக்கு பகவதி, ஜோதி ரூபத்தில் காட்சியளித்தார். இதனால் அந்தப் பகுதியை ‘ஜோதியான கரை’ என்று அழைத்துவந்தனர். இதுவே பின்னாளில் ‘சோட்டாணிக்கரை’ என மாறியது எனப் பழைய மலையாள நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

chottanikkara bagavathi

சோட்டாணிக்கரை பகவதியின் தோற்றம் குறித்து இன்னொரு சுவையான சம்பவமும் உண்டு. அக்காலத்தில் இந்தக் காட்டில் வேடர் இன மக்கள் குடும்பம் குடும்பமாக வசித்துவந்தனர். காட்டில் கிடைக்கும் தேன், காய் கனிகள், விறகு போன்ற பொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு எடுத்துச் சென்று பண்ட மாற்று வியாபாரம் செய்துவந்தனர்.

அவர்களில் கண்ணப்பன் என்ற வேடன் ஒருவன் இருந்தான். அவன் மனைவியை இழந்தவன். அவனுக்கு உறவென்று சொல்லிக்கொள்ள ஒரு மகள் மட்டும் இருந்தாள். அந்தச் சிறுமியின் பெயர் பவளம். தாயில்லாத அந்தக் குழந்தையை அவன் மிகுந்த அன்புடன் வளர்த்துவந்தான்.

பாறையில் குடிகொண்ட பகவதி

கண்ணப்பன் தெய்வ பக்தி மிக்கவன். அவனது குல தெய்வம், வன தேவதை என்ற பகவதியே. வாரத்தில் ஒரு நாள் ஒரு மாட்டை பகவதிக்குப் பலி கொடுப்பது அவன் வழக்கம். மாட்டை உயிர்ப்பலி கொடுக்கும்போது மகள் பவளம், “அச்சா மாட்டைக் கொல்ல வேண்டாம். அதற்குப் பதில் என் உயிரை எடுங்கள்” எனக் கூறி அழுவாள். மகள் சொல்வதைக் கேட்டு கண்ணப்பன் மனம் மாறினான். கண்ணீர்விட்டுக் கதறினான்.

திடீரென ஒரு நாள் அவனுடைய மகள் பவளம் இறந்துவிட்டாள். புத்திர சோகத்தால் கண்ணப்பன் துடித்துப் போனான். அதன் பிறகு அவன் உயிர்ப்பலியை நிறுத்திவிட்டான். தன்னிடம் இருந்த ஒரு மாட்டைத் தன் மகளாக எண்ணி வளர்த்தான். ஒரு நாள் காலை மாட்டுத் தொழுவத்துக்குப் போனவனுக்கு அதிர்ச்சி.

பசு நின்ற இடத்தில் ஒரு பாறை இருந்தது. பசு கல் ஆனதா, கனவா நனவா எனப் புரியாமல் கைதொழுது நின்றான் கண்ணப்பன். அதன் பிறகு கண்ணப்பனும் அப்பகுதியில் உள்ளவர்களும் குடிமாறிப் போய்விட்டனர். அவர் வாழ்ந்த பகுதியில் புற்கள் மண்டிக் கிடந்தன.

ஒரு நாள் வழக்கம் போல் புல் அறுக்க வந்த பெண் அங்கிருந்த பாறையில் கத்தியைக் கூர் தீட்டினாள். அந்தக் கல்லில் இருந்து நெருப்புப் பொறியுடன் ரத்தமும் வந்தது. இந்தத் தகவலை ஊர்த் தலைவரான நம்பூதிரி அறிந்தார். அப்போது அவர் கண்ணப்பனின் உயிர்ப்பலியை நினைவுகூர்ந்தார். அது பகவதி குடிகொள்ளுமிடம் என அறிந்தார். அப்போதே அந்தப் பகுதி சுத்தம் செய்து பழங்களும் பூக்களும் கொண்டுவந்து பூஜை செய்தார். இது வாய் மொழியாகச் சொல்லப்பட்டுவரும் கதை.

சோட்டாணிக்கரையில் அதிகாலை நான்கு மணிக்கு நிர்மால்ய தரிசனம். மூலஸ்தானத்தின் கதவு திறந்தவுடன் தீபாராதனையுடன், ‘அம்மே நாராயண, லட்சுமி நாராயண, பத்ரே நாராயண’ என்று கூறி பக்தர்கள் வணங்குவார்கள்.

எப்படிப் போவது?

எர்னாகுளத்திலிருந்து சோட்டாணிக்கரைக்குப் பேருந்தில் செல்லலாம். கோயிலின் அருகே நிறைய தனியார் விடுதிகளும் ஹோட்டல்களும் உண்டு. தேவஸ்தான விடுதியும் உண்டு. கோயிலின் மேற்குக் கோபுர வாயில் அருகில் பேருந்துகள் நிற்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்