விவிலிய மாந்தர்கள்: சகிப்பின் மறுபெயர் யோபு!

By ஜோ.ஆரோக்யா

விவிலியத்தில் கவிதை மொழி நிறைந்திருப்பதை உலகம் முழுவதும் பொதுவாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் விவிலியத்துக்குள் பல புத்தகங்கள் நீண்ட கவிதைகளாகவே எழுதப்பட்டிருக்கின்றன. கவிதை வடிவில் எழுதப்பட்ட ‘யோபு புத்தகம்’, விவிலியத்தின் ஞான நூல்களில் மதம் கடந்த செல்வாக்கைப் பெற்றது.

கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக, யோபு புத்தகத்தின் தாக்கத்தில் உலக மொழிகள் பலவற்றிலும் பல ஞான நூல்கள் எழுதப்பட்டிருப்பதை விவிலிய ஆராய்ச்சியாளர்கள் நிறுவியிருக்கிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறது அந்தப் புத்தகத்தில் என்றால், ‘யோபு’ எனும் மிகச்சிறந்த பக்தனின் வாழ்க்கைக் கதையை அது எடுத்துக்காட்டுகிறது.

கடவுள் மீதான ‘விசுவாசத்தின் தந்தை’ எனப் போற்றப்பட்ட ஆபிரகாம் தோன்றிய சேம் வம்சத்தில் வந்தவர் யோபு. அவரது உறவினரும்கூட. யோபுவின் வரலாற்றை எழுதியவர் ஆபிரகாம். இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 1,400 ஆண்டுகளுக்கு முன் மீதியான் தேசத்தின் அருகில் இருந்த ஊத்ஸ் என்ற தேசத்தில் யோபு வாழ்ந்து வந்தார்.

கடவுளின் குழந்தை 

உலகைப் படைத்த கடவுளாகிய பரலோகத் தந்தையை யோபு வணங்கினார். ஒவ்வொரு சிறு செயலிலும் கடவுளுக்குப் பயந்து நடந்தார், அதனால் நேர்மையானவராகவும் உத்தமராகவும் இருந்தார்.  பெரும் செல்வந்தர். ஏழாயிரம் ஆடுகள், மூவாயிரம் ஒட்டகங்கள், ஆயிரம் மாடுகள், ஐந்நூறு கழுதைகள் என கால்நடைச் செல்வங்கள் அவருக்கு இருந்தன.

ஏராளமான பணியாளர்கள் அவரிடம் வேலை செய்து வந்தார்கள். பணியாளர்கள் அடிமையாய் பாவிக்கப்பட்ட காலத்தில், அவர், அவர்களை எஜமானர்களைப் போல நடத்தினார். அவர் எல்லோரிடமும் அன்பாக இருந்தார். ஏழைகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கும், பெற்றோர் இல்லாத பிள்ளைகளுக்கும் உதவினார்.

இதனால் கிழக்குப் பிரதேசங்களில் புகழ்பெற்றிருந்த குறுநில மன்னர்கள், கோமான்களைவிட, அதிக மதிப்பும் மரியாதையும் பெற்றவராக இருந்தார். யோபுவுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் இருந்தார்கள். யோபுவோ தனக்கு இவ்வளவு புகழ் இருக்கிறது என்பதைக் கூட அறியாமல், கடவுளின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கும் சிறு குழந்தைபோன்ற கனிவுடன் வாழ்ந்துவந்தார்.

சாத்தானின் சவால்

யோபுவின் வாழ்வைக் கண்டு சாத்தான் பொறாமைகொண்டான். அவர் மீது கடுங்கோபம் கொண்டிருந்தான். ஒருநாள் கடவுள் முன்பாக சாத்தான் வந்து நின்றான். அவனது நோக்கம் கடவுளுக்குத் தெரிந்தது. அவனது வாயைக் கிளறும் விதமாகக் கடவுள், சாத்தானிடம், “ என் அன்புக்குரிய ஊழியன் யோபுவைப் பார்த்தாயா, அவனைப் போலப் பூமியில் உத்தமர் யாருமில்லை.

அவன், என் பேச்சைக் கேட்டு, எனக்குப் பயந்து நடக்கிறான், நல்லதையே செய்கிறான். அவனைப்போல் உத்தமர் அங்கே யாருமில்லை”என்றார். அதற்கு சாத்தான், “அவன் உங்களுக்கு எதற்காகப் பயந்து நடக்கிறான்?  நீங்கள் அவனைச் சுற்றி வேலிபோட்டு அவனையும் அவனுக்குச் சொந்தமான அனைத்தையும் பாதுகாத்து, ஆசீர்வதிக்கிறீர்கள். அவனது செல்வத்தைப் பெருகச் செய்திருக்கிறீர்கள், அதற்காகத்தான்.

அவனிடமிருக்கும் அனைத்தையும் எடுத்துப் பாருங்கள். அதன்பிறகு அவன் உங்களை நேசிப்பதை நிறுத்திவிடுவான். உங்களை தூசிப்பான்”என்றான். உடனே கடவுள் சாத்தானிடம், “வேண்டுமானால் நீ யோபுவைச் சோதித்துப் பார். ஆனால், அவனது உயிரை எடுக்க உனக்கு உரிமையில்லை” என்றார். கடவுளின் சவாலை ஏற்றுக்கொண்ட சாத்தான், கடவுள் மீதான பணிவையும் விசுவாசத்தையும் உடைத்துக்காட்டுவாதக் கூறிவிட்டு, தலைகொள்ளாத மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தான். ஆனால் கடவுளோ, யோபு தனக்கு உண்மையாக இருப்பார் என்று நம்பினார்.

எல்லாவற்றையும் இழந்த யோபு

சாத்தான் முதலில், யோபுவின் மாடுகளையும் கழுதைகளையும் திருடுவதற்கு, சபேயர்கள் என்னும் கால்நடைகளைத் திருடுவதையே தொழிலாகக் கொண்ட ஆட்களை அனுப்பித் திருடிக் கொண்டான். பிறகு, யோபுவின் ஆடுகள் மந்தையாய் மேய்ந்து கொண்டிருக்கும்போது நெருப்பு மழையைப் பெய்ய வைத்து அவற்றைத் தீயில் சாகடித்தான்.

அடுத்து, கல்தேயர்கள் எனும் பாலைவனக் கூட்டத்தாரை அனுப்பி, யோபுவின் ஒட்டகங்களைத் திருடிக்கொண்டான். இவற்றைத் தடுத்த யோபுவின் வேலைக்காரர்களும் கொலையுண்டு போனார்கள். இவை எல்லாவற்றையும்விட யோபுவுக்கு சாத்தான் அடுத்து கொண்டுவந்த துயரம் மிகக் கொடியது.

யோபுவின் பத்து பிள்ளைகளும் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவர்கள் இருந்த வீடு இடிந்து விழுந்து, எல்லோரும் இறந்துபோனார்கள். இடிந்துவிழுந்த வீட்டிலிருந்து தப்பி ஓடிவந்த ஒரு பணியாளன் இதைக் கூறியபோது சாத்தான் ஆவலோடு தனது காதைத் தீட்டி வைத்துக்கொண்டான். யோபு, கடவுளைக் கடுஞ்சொற்களால் வசைபாடப்போகிறார் என்று மகிழ்ச்சியுடன் காத்திருந்தான்.

ஆனால் பணியாளன் கூறிய அகாலத் துக்கச் செய்தியைக் கேட்டு எழுந்த யோபு, தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டார், தலைமுடியை வெட்டிக்கொண்டார். பிறகு, சாஷ்டாங்கமாக விழுந்து, “என் தாயின் வயிற்றிலிருந்து வெறுங்கையோடு வந்தேன். வெறுங்கையோடு மண்ணுக்குப் போவேன். என் கடவுளாகிய யகோவா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தார்.

அவரே எடுத்துக்கொண்டார்; அவரது பெயருக்கு என்றும் புகழ் சேரட்டும்” என்று சொன்னார். இந்த வார்த்தைகள் சாத்தானின் காதுகளில் கொதிக்கும் ஈயமாய் ஊடுருவின. ‘தனக்கு இவ்வளவு நடந்தும் யோபு பாவம் செய்யவில்லையே, கடவுள்மேல் எந்தக் குறையும் சொல்ல வில்லையே..அவரை வணங்குவதையும் அவன் நிறுத்த வில்லையே.. இவனை எப்படி வெல்வது’ என்று அடுத்த கட்டத் திட்டம் தீட்டினான்.

நோயும் மனைவியின் வார்த்தைகளும்

அப்போது சாத்தான் ‘ஒரு மனிதன் எந்த உயிரையும்விட, தன்னுடைய உயிரைத்தான் பெரிதாக நினைப்பான். அதைக் காப்பாற்றிக் கொள்ள எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராயிருப்பான்; அது கடவுள் மீதான அன்பாக இருந்தாலும். யோபுவைச் சிதைத்து கடவுள் மீது அவன் பாராட்டும் அன்பையும் சிதைத்துக்காட்டுகிறேன்’ என்று கூறிக்கொண்டு யோபுவுக்கு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை கொடிய கொப்புளங்களை உருவாக்கி, அவரை வாட்டி வதைத்தான்.

யோபுவுக்கு உடல்முழுவதும் புண்ணாகி சீழ் நீர் வடிந்தது. நொடிக்கு நொடி வேதனையால் துடித்தார். தன் உடம்பிலிருந்த கொப்புளங்களைச் சுரண்டுவதற்காக, உடைந்துபோன ஓடு ஒன்றை எடுத்துக்கொண்டு யோபு சாம்பலில் போய் உட்கார்ந்தார். அப்போது அவருடைய மனைவி, “இன்னுமா கடவுள்.. கடவுள்.. என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்; அவரைத் திட்டித் தீர்த்துவிட்டு செத்துப்போய்விடுங்கள்!” என்று சொன்னாள்.

ஆனால் யோபு மனைவியிடம் பொறுமையாக,“என் மீதுள்ள அன்பால், நீ பைத்தியக்காரியைப்போல் பேசுகிறாய். கடவுள் கொடுக்கிற நல்லதை மட்டும் ஏற்றுக்கொண்டு, கஷ்டத்தை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாமா?” என்று கேட்டார்.

இத்தனை நடந்தும்கூட, அவர் தன் வாயால் கடவுளைத் தூற்றவில்லை. இதன்பிறகும் பொறுத்துக்கொள்ள முடியாத சாத்தான், ‘யோபு.. யாரைத் தன் உயிர் நண்பர்கள் என்று நினைக்கிறானோ, அவர்களை வைத்தே கடவுளை தூசிக்க வைக்கிறேன்’ என்று கூறிக்கொண்டு அடுத்த கட்ட திட்டத்தில் இறங்கினான்.

(யோபுவின் நிறைவுப்பகுதி அடுத்த வாரம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

க்ரைம்

49 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்