ஞானத்தின் ஏழு பண்புகள்

By ஷங்கர்

ஞானத்தை விளக்கும் அதேவேளையில் ஞானத்துக்கு வழிகளாகவும் ஏழு பண்புகளை புத்தர் தனது உரைகளில் தொடர்ந்து சுட்டிக்காட்டியதுதான் ‘சப்த போத்யங்கா’ என்று அழைக்கப்படுகிறது. பாலியில் எழுதப்பட்ட நூலான திரிபீடகத்தில் அவரது உரைகள் பதிவாகியுள்ளன.

சம்யுத்த நிகாயத்தில் வரும் சம்வாதத்தில், தற்கண உணர்வு என்பது எப்போதும் பயன்மிக்கது என்று அடையாளம் காண்கிறார். மனம் மந்த நிலையிலிருக்கும்போது, விசாரம், ஆற்றல் மற்றும் உற்சாகத்தை நோக்கிப் போகச் சொல்கிறார். மனம், கிளர்ந்துகொண்டிருக்கும்போது அமைதி, கூர்மதி, பரிபக்குவத்தை நோக்கிச் செலுத்த வேண்டுமென்கிறார்.

புத்தரின் உடல்நிலை ஒருமுறை மோசமான நிலையில் இருந்தபோது, ஞானத்துக்கு வழிவகுக்கும் ஏழு பண்புகளை விளக்கச் சொல்லி தன் சீடனிடம் கோரினார். அதைக் கேட்ட பின்னர், புத்தர் தனது நோயிலிருந்து மீண்டதாகக் கூறப்படுகிறது.

தற்கண உணர்வு

மனத்தின் நகர்வுகளைக் கவனிப்பதும் தன் இயற்கையை நினைவுகூர்வதுமே தற்கண உணர்வு. உடல், உணர்வு, எண்ணங்கள், கருத்துருவங்களின் மீதான தியானமே தற்கண உணர்வு.

தம்மம்

தன் உடலிலும் மனத்திலும் நடப்பது என்னவென்பதை விசாரிப்பது; உயிருள்ள, உயிரற்ற பொருட்களைக் கவனிப்பது; மானுடத்தையும் தெய்வீகத்தையும் புரிந்துகொள்வது. அதனதனை அதனதன் அடிப்படை இயல்புகளோடு துல்லியத்துடன் பார்ப்பதாகும்.

வீரியம்

மனத்தில் தோன்றும் தீய எண்ணங்களை அழிக்கும் செயல். தீய எண்ணங்கள் தோன்றுவதற்கு முன்பே தடுக்கும் செயல். தோன்றாத நல்ல எண்ணங்களைத் தோற்றுவிப்பது. தோன்றிய நல்லெண்ணங்களை வளர்ப்பதற்கான நற்செயல்கள் வீரியம் எனப்படும்.

ஆனந்தம்

உடல், மனம் இரண்டிலும் பரவக்கூடிய மனத்தின் இயல்பு அது. இந்த இயல்பில்லாவிட்டால் ஞானத்தின் பாதைக்கு ஒருவர் நகரவே முடியாது.

அமைதி

உடலும் மனமும் நிம்மதி அடைந்த நிலை இது. உடல் அமைதியாக இருப்பது ‘காயபசதி’ என்று சொல்லப்படுகிறது. சித்தபசதி மனத்தின் அமைதியைக் குறிப்பது. உணர்வு, பார்வை நிலைகளில் கொந்தளிப்பில்லாமல் இருப்பது. காயமும் சித்தமும் அமைதியாக இருக்கும்போதே அமைதி கிட்டும் என்கிறார் புத்தர்.

சமாதி

மனத்தின் ஒருமுக நிலையைத் தான் சமாதி என்று குறிக்கிறார் புத்தர். தியானத்தின் இலக்கில் அமைதியான மனமே குவிய முடியும். அமைதியும் கவனமும் உள்ள மனம்தான் விஷயங்களை அதன் இயல்பில் பார்க்க இயலும். புலனிச்சை, தீய எண்ணங்கள், தாமச நிலை, பதற்றம், சந்தேகம் போன்ற ஐந்து தடைகளையும் ஒருமித்த மனம் களைந்துவிடும்.

சமநிலை

உள்ளேயும் வெளியேறும் தோன்றி மறையும் பொருட்களையும் விஷயங்களையும் பந்தமின்றி, பிடிப்பின்றி பார்க்கும் அமைதியான மனநிலையைக் குறிக்கிறது. ஆற்றல், மகிழ்ச்சி, விசாரம், அமைதி போன்ற உணர்வுகள் எல்லாமே சில வேளைகளில் முழுமையாகவும் பெரும்பாலும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் மேலோங்கியும் இருக்கும். ஆனால், இவையெல்லாம் சமநிலையுடன் இருப்பதே ஞானத்துக்கான வழி எனப்படுகிறது.

ஞானத்தின் பண்புகள் அனைத்திலும் மனம் நன்கு பக்குவப்படும்போது, உடைமையுணர்வைத் துறக்கும்போது, பந்தத்தை அறுக்கும் மனம்கொண்டவர்கள் மனத்தின் கழிவுகளை அகற்றிப் பொறாமை, வெறுப்பு, மாயைகள் அகன்று ஒளிர்வார்கள்.

ஜென் கவிதைகள்

மலைகள் எதிர்பட்டால் மலைகளைப் பார்ப்பேன்

மலைகள் எதிர்பட்டால்,

நான் மலைகளைப் பார்ப்பேன்

மழை நாட்களில்

நான் மழைக்கு செவிசாய்ப்பேன்.

இலையுதிர் காலம், வேனில் காலம்,

மழைக் காலம், குளிர் காலமென்றாலும்.

நாளையும் நன்றாகவே இருக்கும்.

இன்றிரவும் நன்றாகவே இருக்கும்.

உள்ளது உள்ளபடி

உள்ளது உள்ளபடி

மழை பெய்யும்போது, நான் ஈரமாகிறேன்,

நான் நடக்கிறேன்.

 

எத்தனையளவு உள்ளே போகிறேனோ

எத்தனையளவு உள்ளே போகிறேனோ

அத்தனை பசுமை மலைகள்

 

எனது பிச்சைப் பாத்திரம்

எனது பிச்சைப் பாத்திரம்

ஏற்கிறது உதிர்ந்து விழுந்த இலைகளை.

- டானடா சண்டூகா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

சினிமா

23 mins ago

சினிமா

26 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

24 mins ago

சினிமா

42 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

36 mins ago

சினிமா

47 mins ago

சினிமா

50 mins ago

வலைஞர் பக்கம்

54 mins ago

சினிமா

59 mins ago

மேலும்