ஆன்மா என்னும் புத்தகம் 05: ரமணரைச் சந்தித்த லாரி டார்ரெல்

By என்.கெளரி

இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் வில்லியம் சாமர்செட் மாம் எழுதிய ‘தி ரேஸர்ஸ் எட்ஜ்’ (The Razor’s Edge) நாவல் 1944-ம் ஆண்டு வெளியானது. இந்தப் புத்தகத்தை ஒரு நாவலைப் போன்று சாமர்செட் மாம் எழுதியிருந்தாலும், இந்த நாவலில் அவர் தன் வாழ்க்கையில் சந்தித்த முக்கியமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாகப் படைத்திருக்கிறார்.

அத்துடன், இந்த நாவலில் அவரே ஒரு கதாபாத்திரமாகவும் கதைசொல்லியாகவும் இருக்கிறார். இந்த நாவலின் பெயரை உபநிடதத்தில் இருக்கும் இந்த வரியிலிருந்து எடுத்திருக்கிறார்: “கத்தியின் முனையைக் கடப்பது எப்படிக் கடினமானதோ, அப்படித்தான் விமோசனத்துக்கான பாதையும் கடினமானது”.

கத்தி முனைகள்

இந்தப் புத்தகம் மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதையும், ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அலசுகிறது. கத்தியின் ஒரு முனையில் வாழ்க்கையைப் பற்றிய பாதுகாப்பு உணர்வு, சமூக லட்சியங்களை அடைதல், சமூக விதிகளுடனான இணக்கம் போன்றவை இருக்கின்றன. இன்னொரு முனையில், சமூகம் உறுதிப்படுத்திய அடையாளங்களைத் துறந்து வாழ்க்கையில் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கான பெரிய தேடல் அமைந்திருக்கிறது.

பெரும்பாலானவர்கள், இரண்டாவது பாதையைத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். ஆனால், சாமர்செட் மாமுக்கு ஆன்மிகத்தின் மீதிருந்த ஆர்வம், ‘தி ரேஸர்ஸ் எட்ஜ்’ நாவலை எழுதுவதற்குக் காரணமாக அமைந்தது. அவரது படைப்புகளில், அதிகம் விற்பனையாகிய புத்தகங்களில் ‘தி ரேஸர்ஸ் எட்ஜ்’ நாவலும் ஒன்று.

காதலும் பிரிவும்

இந்த நாவல் 1920-களிலும் 1930-களிலும் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பயணிக்கிறது. லாரி டார்ரெல் என்ற அமெரிக்க இளைஞனின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறது. முதலாம் உலகப் போரில் விமானியாகப் பணியாற்றி அதிர்ச்சிகரமான அனுபவங்களுடன் ஊர் திரும்புகிறான் லாரி. சிகாகோவைச் சேர்ந்த அழகான இளம்பெண் இஸபெல் பிராட்லியுடன் அவனுக்குத் திருமணம் நிச்சயமாகிறது. ஆனால், எந்த வேலைக்கும் செல்ல விருப்பமில்லாமலிருக்கும் லாரியின் பிடிவாதம், திருமணத்துக்குத் தடையாக நிற்கிறது.

வேலைக்குச் சென்றால்தான், திருமணம் என்று இஸபெல்லின் தாய் சொல்லிவிடுகிறார். இந்நிலையில், லாரிக்கும் இஸபெல்லுக்கும் அவர்களின் பணக்கார நண்பன் கிரே மட்டுரின் உதவ முன்வருகிறான். தன் தந்தையின் நிறுவனத்தில் லாரிக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்கிறார். ஆனால், லாரி அந்த வாய்ப்பை மறுத்து பாரிஸுக்குச் செல்வதாகச் சொல்கிறான். போர் அவனிடம் ஏற்படுத்திய தாக்கத்தால் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடிப் பயணிக்கிறான் லாரி. லாரியின் பயண முடிவை ஏற்றுக்கொள்ளும் இஸபெல்லும் அவளின் தாயாரும் இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று அவனை வழியனுப்புகிறார்கள்.

பாரிஸில் இஸபெல்லின் மாமா எலியட் டெம்பிள்டனைச் சந்திக்கும் லாரி, அங்கேயும் சமூக வாழ்க்கையில் நாட்டமில்லாமல் தவிக்கிறான். இரண்டு ஆண்டுகள் கழித்து இஸபெல்லும் லாரியும் சந்திக்கிறார்கள். அவர்களுக்கிடையில் உருவாகியிருக்கும் வேறுபாடுகளைத் தாண்டி இருவரின் காதலும் அப்படியே இருக்கிறது. இஸபெல் வசதிகள் நிறைந்த லௌகீக வாழ்க்கையை எதிர்பார்க்கிறாள். ஆனால், லாரி வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் தனது பயணத்தில் அவளை இணைத்துகொள்வதற்கு முயல்கிறான்.

ஆனால், ஒரு கட்டத்தில் இருவரும் வாழ்க்கையிடமிருந்து இருவேறு விஷயங்களை எதிர்பார்ப்பதைப் புரிந்துகொண்டு திருமண நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொள்கிறார்கள். ஓராண்டு கழித்து இஸபெல் கிரே மட்டுரினைத் திருமணம் செய்துகொள்கிறாள். லாரியை நேசிக்கும் அளவுக்கு அவளால் கிரேவை நேசிக்க முடியவில்லை. ஆனால், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக கிரேவைத் திருமணம் செய்துகொள்கிறாள்.

பயணத்தின் தாக்கம்

லாரியின் வாழ்க்கைத் தேர்வை விளக்குவதற்காக இந்த நிகழ்வுகளைஎல்லாம் நாவலில் நினைவுகூர்கிறார் கதைசொல்லியான சாமர்செட் மாம். ஒரு சாமானிய இளைஞனின் வாழ்க்கைத் தேர்வு அவனின் ஆன்மிகப் பாதைக்கு எப்படி வழிவகுக்கிறது என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம். போரில் ஒரு நாள் உயிரோடிருக்கும் லாரியின் நண்பர்கள், அடுத்த நாள் உயிரோடு இருக்க மாட்டார்கள். அதனால், லாரி தான் உயிரோடிருக்கும் ஒவ்வொரு நொடியையும் கொண்டாட நினைக்கிறான். அப்படியே வாழவும் செய்கிறான்.

இந்த நாவலின் ஒரு கட்டத்தில், லாரியை சாமர்செட் மாம் எழுத்தாளராகவே நுழைந்து சந்திக்கிறார். அப்போது லாரி, தத்துவ அறிஞர்கள் ஸ்பினோஸாவையும் தெக்கார்தேவையும் படித்துகொண்டிருக்கிறான். லாரிக்குக் காதலைவிட ஆன்மிகத் தேடல்தான் முக்கியம் என்பதை தான் உணர்ந்துகொண்டதாகச் சொல்கிறார் சாமர்செட் மாம். இதையடுத்து, ஒரு பிரெஞ்சு மடாலயத்தில் தங்கி ஆன்மிக இலக்கியங்களைப் படித்துத் தன்னைத் தெளிவுபடுத்திகொள்கிறான் லாரி.

குருவைச் சந்தித்தல்

பிரெஞ்சு நிலக்கரிச் சுரங்கம், ஜெர்மானியப் பண்ணை எனப் பல இடங்களில் பணியாற்றும் லாரி, கிழக்கே செல்லும் ஒரு கப்பலில் தொழிலாளியாகப் பயணிக்கிறான். அந்தக் கப்பல் மூன்று நாட்கள் மும்பையில் நிற்கிறது. கடைசி நாள், தான் இந்தியாவில் தங்க வேண்டுமென்று முடிவெடுக்கிறான் லாரி.

இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருக்கிறான். அப்போது குரு ஸ்ரீ கணேஷாவைப் பற்றி அறிந்துகொண்டு, அவரது ஆசிரமத்தில் மாணவனாக இரண்டு ஆண்டுகள் தங்குகிறான். இந்த நிகழ்வை ரமணாசிரமத்தில் ரமண மகரிஷிக்கும் தனக்கும் நடைபெற்ற சந்திப்பை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கிறார் சாமர்செட் மாம்.

இஸபெல், கிரே, எலியட் என வாழ்க்கையில் வெவ்வேறு விஷயங்களைத் தேடியவர்களை மீண்டும் சந்திக்கிறான் லாரி. அவர்களின் வாழ்க்கைத் தேர்வுகள் அவர்களை எப்படி அடியோடு மாற்றியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்கிறான். மடாலயங்களிலோ ஆசிரமங்களிலோ வாழ்வதைவிட, உலகை நேசித்து அதில் அமைதியாக வாழ்வதற்கு முடிவெடுக்கிறான் லாரி.

லாரியின் வாழ்க்கையின் வழியாக ஆன்மிகப் பாதையைத் தேர்தெடுப்பவர்களின் ஆத்ம திருப்தியை இந்த நாவலில் விளக்குகிறார் சாமர்செட் மாம். ‘தி ரேஸர்ஸ் எட்ஜ்’ நாவல் வாசகர்களின்மீது எந்தக் கருத்தையும் திணிக்காமல் எளிமையாகப் பயணிக்கிறது. ஆன்மிகப் பாதையைத் தனது பயணமாகத் தேர்ந்தெடுக்கும் ஒருவனின் வாழ்க்கையை அறிந்துகொள்ள உதவும் புத்தகம் இது.

வில்லியம் சாமர்செட் மாம்

எழுத்தாளர் வில்லியம் சாமர்செட் மாம், 1874-ம் ஆண்டு இங்கிலாந்தின் விட்ஸ்டேபில் நகரத்தில் பிறந்தார். லண்டனில் மருத்துவப் படிப்புப் படித்துவந்த அவர், தன் நாவல் ‘லிஸா ஆஃப் லாம்பெத்’ (Liza of Lambeth) வெற்றிக்குப் பிறகு முழு நேர எழுத்தாளராக மாறினார். எழுபதுக்கும் மேற்பட்ட இவரது படைப்புகளில், ‘Of Human Bondage’, ‘The Moon and Six pence’, ‘Cakes and Ale’, ‘The Summing Up’ (சுயசரிதை) போன்றவை முக்கியமானவை. 1965-ம் ஆண்டு அவர் மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்