உயிர் வளர்க்கும் திருமந்திரம் 31: எல்லோர்க்கும் ஒரே குரல்

By கரு.ஆறுமுகத்தமிழன்

‘ம

தச் சார்பின்மை’ என்ற சொல் கடவுளின்மீது ஈடுபாடு கொண்டவர்களிடத்தில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் ‘கடவுள் என்பவர் மதத்தில் குடிகொண்டிருப்பவர்; மதச் சார்பின்மை என்பதோ மதத்தைவிட்டு விலகி நிற்கச் சொல்வது; மதத்தைவிட்டு விலகி நிற்பது என்பது மதம் கையகப்படுத்தி வைத்திருக்கிற கடவுளை விட்டே விலகி நிற்பது; நாத்திகம் பேசுவதை ஒத்தது’ என்று அவர்கள் ஒருவேளை கருதக்கூடும்.

மேலைநாட்டுச் சூழலில் உருவாக்கப்பட்ட ‘மதச் சார்பின்மை’ என்பது, அடிப்படையில் ஓர் அரசியல் கருதுகோள். அரசு என்பது மக்களுக்கிடையில் எந்த வகையிலும் ஏற்ற இறக்கம் பாராமல், மதத்தின் பெயரால் பாகுபாடு பாராட்டாமல், அனைவரையும் சமமாகக் கருதிக் கடமைகள் செய்வதற்கான ஒரு பொது அமைப்பு.

எனவே, அரசும் அரசைச் செலுத்துகிறவர்களும், மக்களை ஏதோ ஓர் அடிப்படையில் பாகுபடுத்துகிற மத நிறுவனங்களிடமிருந்தும் மதப் பீடாதிபதிகளிடமிருந்தும் விலகி நிற்க வேண்டும் என்று பேசுவது மதச் சார்பின்மை. தேவாலயம் என்னும் அதிகாரப் பீடம், மதத்தின் பெயரால் மேலைநாட்டு அரசுகளை ஆக்கிரமித்து வைத்திருந்தபோது முன்னிறுத்தப்பட்ட கருதுகோள் இது.

அரசியல் அதிகாரத்தை மதத்திடமிருந்து விலக்கி வைப்பதற்காக முன்வைக்கப்பட்ட இந்த மதச் சார்பின்மைக் கருதுகோள், பின்னாளில், மக்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய எல்லாவற்றையுமே மதத்திடமிருந்து விலக்கி வைப்பதற்குப் பயன்படத் தொடங்கியது. எடுத்துக்காட்டாக, மதச் சார்பற்ற கல்வி, மதச் சார்பற்ற இசை, மதச் சார்பற்ற சமூகம், மதச் சார்பற்ற மானுடம் ஆகியவற்றைக் கருதலாம்.

மதச் சார்பற்ற மதம் உண்டா

‘மதச் சார்பற்ற’ என்ற முன்னொட்டு, மேற்சொன்ன பொது நிறுவனங்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. அது மதங்களோடும் வந்து ஒட்டிக்கொண்டது. மதச் சார்பற்ற மதம்! அட, என்ன இது? மதச் சார்பற்ற மானுடம் என்பது சரி; மதச் சார்பற்ற மதம் என்பது சரியா? சொல்லிப் பார்க்கவே வேடிக்கையாகவும் முரணாகவும் இல்லையா?

மதம் என்பது என்ன? மதம் என்பது ஒரு நம்பிக்கை மரபு. கட்டமைக்கப்பட்ட ஏதேனும் ஒன்றை அளவிறந்த நம்பிக்கையோடு கட்டித் தழுவிக் கொள்வது. நமக்கான விடுதலையை அது கட்டாயம் வழங்கும் என்ற நம்பிக்கையில், விசாரணையே இல்லாமலுங்கூட, எல்லா நிலைகளிலும் தன்னை அதனோடு பிணைத்துக்கொள்வது. அந்த வகையில் கடவுளை நீக்கிய நம்பிக்கை மரபுகளையும் மதம் என்று அழைக்கலாம். முதலாளித்துவம், பொதுவுடைமைத்துவம், வல்லாண்மைத்துவம், தேசியம், நாத்திகம் என்பனவும்கூட மதங்கள்தாம்.

பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் பிரான்சில் கத்தோலிக்க மதத்தை எதிர்த்துப் பகுத்தறிவு மரபு (Cult of Reason) என்றொரு கடவுளற்ற மதம் உருவாக்கப்பட்டு அரசால் ஆதரிக்கவும் பட்டது. இவை எல்லாமே மதச் சார்பற்ற மதங்கள்; அதாவது கடவுளை நீக்கிய நம்பிக்கை மரபுகள். ஆனால், கடவுளை நம்புகிற மதங்களைப் போலவே இவற்றுக்கும் தனியான புனித நூல்கள், வழிபாட்டு நிலைகள், சடங்குகள், சண்டைகள், திருவிழாக்கள், ஊக்குவிப்புகள், தடைகள் என்று எல்லாமே இருக்கும்.

வைணவத்துக்கு நம்மாழ்வார் சைவத்துக்குத் திருமூலர்

கடவுளை நம்பாத மதங்களை விடுங்கள்; கடவுளை நம்புகிற மதங்களுக்குள்ளும் மதச் சார்பின்மை ஊடாடியிருக்கிறது. கத்தோலிக்க மரபில் ‘மதச் சார்பற்ற குருத்துவம்’ (secular clergy) என்ற வகைமை ஒன்று உண்டு. மதத்தோடு பிணைந்தவர்கள், மதத்தை விட்டுக் கொடுக்காதவர்கள் என்று கருதப்படுகிற யூதர்களிடையே மதச் சார்பற்ற யூதத்துவம் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள்; மதத்தின் அடிப்படையில் அல்லாமல் பண்பாட்டின் அடிப்படையில் தங்களை யூதர்களாக அடையாளம் காண்கிறவர்கள் இவர்கள்.

இசுலாமியர்களிலும் மத நம்பிக்கைகளை முன்மொழியாமல் பண்பாட்டு நடைமுறைகளை மட்டுமே முன்மொழிந்து, பண்பாட்டு முஸ்லிம்களாகத் தங்களை முன்னிறுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். இதே அடிப்படையில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிற பண்பாட்டு இந்துக்களும் உண்டு. மதத்தை ஆதிக்க நிறுவனமாக அல்லாமல் கடவுள் நெறியாக மட்டுமே பார்க்கிறவர்களுக்கு மதச் சார்பற்ற மதம் வாய்க்கக் கூடியதுதான்.

தமிழ்நாட்டுக் கடவுள் நெறியில் சைவத்திலும் சரி, வைணவத்திலும் சரி, மதச் சார்பற்ற மதம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் நடந்திருக்கின்றன. வைணவத்துக்காக நம்மாழ்வாரும் சைவத்துக்காகத் திருமூலரும் அந்த முயற்சியை முன்னின்று செலுத்தியிருக்கிறார்கள்.

நம்மாழ்வார் பாடுகிறார்:

உளன் எனில் உளன்

அவன் உருவம் இவ்உருவுகள்;

உளன் அலன் எனில்

அவன் அருவம் இவ்அருவுகள்;

உளன் என இலன் என

இவை குணம் உடைமையில்

உளன் இரு தகைமையொடு

ஒழிவு இலன் பரந்தே.

(திவ்வியப் பிரபந்தம், 2907)

இறைவன் உண்டென்று சொன்னால், நீங்கள் காண்கின்ற எல்லாமே அவன்தான்; இறைவன் இல்லையென்று சொன்னால், நீங்கள் காணாத எல்லாமே அவன்தான். உண்மை, இன்மை ஆகிய இவ்விரண்டு தன்மைகளோடு எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் இறைவன்.

திருமூலர் பாடுகிறார்:

உள்ளத்தும் உள்ளன், புறத்துஉள்ளன் என்பவர்க்கு

உள்ளத்தும் உள்ளன், புறத்துஉள்ளன் எம்இறை;

உள்ளத்தும் இல்லை, புறத்துஇல்லை என்பவர்க்கு

உள்ளத்தும் இல்லை, புறத்துஇல்லை தானே.

(திருமந்திரம் 1532)

இறைவன் நம் உள்ளத்தில் இருக்கிறான் என்றால் உள்ளத்தில் இருக்கிறான்; புறத்தில் இருக்கிறான் என்றால் புறத்தில் இருக்கிறான்; அவன் உள்ளத்திலும் இல்லை, புறத்திலும் இல்லை என்பவர்க்கு இறைவன் எங்கும் இல்லை.

ஆகவே இறைவன் இருக்கிறானா, இல்லையா, எவ்வாறு இருக்கிறான், எங்கே இருக்கிறான், என்ன வடிவம், எது வழிபாடு என்பனவெல்லாம் அவரவருடைய தனி விவகாரங்கள். இவற்றை மதம் ஆக்கி, பின் மதத்தை அரசியல் ஆக்கி, பின் அதற்கு அதிகாரம் கோரி அரசுக்குள் மதத்தை இழுக்கிற வேலைகள் வேண்டாதவை. அருளாளர்களைப் பொறுத்தவரையில் அரசியல் மட்டுமல்ல; மதமுமே மதச் சார்பற்றதாகத்தான் இருக்க வேண்டும். அதாவது அதிகாரச் சார்பற்றதாக, ஆதிக்கச் சார்பற்றதாக இருக்க வேண்டும்.

ஏசு கலகக்காரரா?

அதிகாரச் சார்புள்ள மத நிறுவனத்துக்கு மாறாகப் பல இடங்களிலும் பேசுகிறார் ஏசுநாதர். மதப் பழைமைவாதிகளுக்குப் பொறுக்க முடியவில்லை. ஏசுவை இடக்குமுடக்காகச் சிக்க வைத்துக் கதையை முடித்துவிட வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். ஏசுவிடம் போய் ‘யூதர்கள், அவர்களுடைய நாட்டை ஆக்கிரமித்திருக்கிற உரோமாபுரிப் பேரரசுக்கு வரி செலுத்த வேண்டுமா? தேவையில்லையா?’ என்று கேட்கிறார்கள்.

 ‘வரி செலுத்தத்தான் வேண்டும்’ என்று விடை சொன்னால், ‘ஏசு யூதர்களுக்கு எதிரானவர், ஆதிக்கப் பேரரசின் ஏவல் அடிமை, யூதத் தேசியத்துக்கு எதிரான இனத் துரோகி’ என்று தூற்றி, யூதர்களை அவருக்கு எதிராகத் தூண்டிவிடலாம். ‘வரி செலுத்தத் தேவையில்லை’ என்று சொன்னாலோ, ‘ஏசு யூத தேசியம் பேசுகிறவர், கலகக்காரர், பேரரசுக்கு எதிரான தேசத் துரோகி’ என்று ஏற்றி, ரோமாபுரிப் பேரரசிடம் அவரைக் காட்டிக்கொடுக்கலாம் என்பது மதப் பழைமைவாதிகளின் திட்டம்.

அவர்களது திட்டத்தை விளங்கிக்கொள்ளும் ஏசு, ‘வரி செலுத்த நீங்கள் பயன்படுத்தும் காசைக் காட்டுங்கள்’ என்றார். அவர்கள் வெள்ளிக் காசு ஒன்றைக் காட்டினார்கள். ‘இதில் யாருடைய உருவம் பதிக்கப்பட்டிருக்கிறது? யாருடைய பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது?’ என்றார். ‘இது சீசருடைய படம்; இதில் சீசரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது’ என்று விடை சொன்னார்கள். ஏசு சொன்னார்: ‘சீசருக்கு உரியதை சீசருக்குக் கொடுங்கள்; தேவனுக்கு உரியதை தேவனுக்குக் கொடுங்கள்!’ (மாற்கு 12:13-17)

‘சீசருக்கு இசைய நினைக்கிறவர்கள் சீசருக்கு இசையுங்கள்! தேவனுக்கு இசைய நினைக்கிறவர்கள் தேவனுக்கு இசையுங்கள்! யாருடைய குடியாக உங்களைக் கருதுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.’

‘நாம் ஆர்க்கும் குடி அல்லோம்’ என்கிறார் அப்பர். கடவுளை மறுக்காமல், கடவுளின் பெயராலான ஆதிக்கத்தை மறுக்கிறார்கள் இவர்கள். எல்லோர்க்கும் ஒரே குரல்.

(திருமந்திரத்தை விசாரிப்போம்)
கட்டுரையாசிரியர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்