பாவம் தீர்க்கும் பாபநாச பூமி!

By வி. ராம்ஜி

அது... ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த அற்புதமான திருத்தலம். அந்த ஊரும் ரம்மியம். ஆலயத்தைத் தரிசித்தாலும் நிம்மதி. நம் பாவங்களையெல்லாம் போக்கி, நம்மையும் நம் குலத்தையும் காக்கும் தெய்வமான ஈசன் குடிகொண்டிருக்கிறார் இங்கே! இவரின் திருநாமம் பாபநாச நாதர். அம்பாள் உலகம்மை நாயகி.

திருக்கயிலாயத்தில் சிவ - பார்வதிக்குத் திருமணம். ஏகத்துக்கும் கூட்டம். தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டம் என்பார்களே. அதைவிட கூட்டம். இதனால் வடக்கு தாழ்ந்தது தெற்கு உயர்ந்தது. இதை சமன் செய்வதற்காக, அகத்திய மாமுனிவரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவபெருமான்.

ஆனால் அகத்தியருக்கோ அகம் முழுவதும் வருத்தம். கல்யாணக் காட்சியைப் பார்க்க முடியாதே என்று. உடனே சிவன், கவலை வேண்டாம். அந்தத் திருக்கோலத்தின் உனக்குக் காட்சி தருகிறேன் என்றார். அதன்படி,. சித்திரை மாதப்பிறப்பன்று அவருக்குத் தனது திருமணக் கோலத்தை காட்டியருளினார் ஈசன்.

கருவறைக்கு பின்புறம் பிராகாரத்தில் கல்யாண சுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் ரிஷபாரூடராக இன்றைக்கும் எல்லோருக்கும் காட்சி தந்து கொண்டிருக்கிறார். அருகிலேயே அகத்தியரும் அவர் மனைவி, லோபாமுத்திரையும் வணங்கிய கோலத்தில் உள்ளனர்.

அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒருமுறை, துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதை அறிந்த இந்திரன் அவரைக் கொன்று போட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.

பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான்.

வியாழ பகவான் இந்திரனிடம், இந்தத் தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இந்தத் தலத்தில் கால் வைத்த போதே, அவனுடைய பாவங்களையெல்லாம் நீக்கி, அருளினாராம் சிவனார். இதனால் சிவபெருமானுக்கு பாபநாச நாதர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!

அகத்தியரின் சீடரான ரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்கப் பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி ரோமசர், தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் 9 இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார் ரோமசர். இவையே, நவ கயிலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. நவ கயிலாயங்களில், முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கயிலாயம் என்றும் போற்றப்படுகிறது!

இந்தத் தலத்து லிங்கத்திற்கு முக்கிளா லிங்கம் என்ற பெயரும் உண்டு. கருவறையில் ருத்ராட்ச வடிவிலும், பிராகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும், அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது. எனவே சிவனுக்கு இந்தப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!

பொதிகை மலையில் உருவாகி மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதி, இந்தக் கோயிலுக்கு அருகேதான் சமநிலை அடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுவது விசேஷம்!

வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய முனிவர்களுக்கு ஒரு தைப்பூசத்தன்று நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார் நடராஜர். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

அம்பாள் உலகம்மை சந்நிதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரலி மஞ்சளை இட்டு அதனை இடிக்கின்றனர். இந்த மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடக்கின்றன. அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்பது ஐதீகம்!

சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், சித்திரைப் பிறப்பன்று அகத்தியருக்கு திருமணக்காட்சி விழா, தைப்பூசம் ஆகியவை சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன.

ராஜகோபுரத்தை அடுத்து நடராஜர் தனிச்சன்னதியில் ஆனந்ததாண்டவக் கோலத்தில் இருக்கிறார். இவரை, “புனுகு சபாபதி’ என்கின்றனர். கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

20 mins ago

சுற்றுச்சூழல்

30 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

25 mins ago

விளையாட்டு

46 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்