புகைப்பழக்கத்துக்கு அடிமையான 6,25,000 சிறுவர்கள்: மீட்பதற்கான 20 ஆலோசனைகள்

By க.நாகப்பன்

 

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகில் சுமார் 70 கோடி பேர் தினமும் புகைப்பிடிக்கின்றனர். 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 10.8 சதவீதம் பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவத்தில் பயன்படுத்துகின்றனர். ஆண்கள் 47 சதவீதமும், பெண்கள் 12 சதவீதமும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். வளர்ந்த நாடுகளில் 42 சதவீத ஆண்களும் 24 சதவீத பெண்களும், வளரும் நாடுகளில் 48 சதவீத ஆண்களும் 7 சதவீத பெண்களும் புகைப்பிடிக்கின்றனர்.

இந்தியாவில் சுமார் 9 கோடியே 3 லட்சம் ஆண்களும், 1 கோடியே 93 லட்சம் பெண்களும் தினமும் புகைப்பிடிக்கின்றனர். அதேபோல், 17 கோடியே 10 லட்சம் பேர் நாள்தோறும் சிகரெட் அல்லாத புகையிலையைப் பயன்படுத்துகின்றனர். சுமார் 6 லட்சத்து 25 ஆயிரம் சிறுவர், சிறுமியர் தினமும் புகைப்பிடிப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் 4 லட்சத்து 29 ஆயிரம் பேர் சிறுவர்கள், 1 லட்சத்து 95 ஆயிரம் பேர் சிறுமியர். ஒவ்வொரு வாரமும் புகையிலை தொடர்பான நோய்களால் இந்தியாவில் 17,887 பேர் உயிரிழக்கின்றனர்.

இந்தியாவில் 6 லட்சத்து 25 ஆயிரம் சிறுவர்கள் (10-15 வயதுக்குள்) தினமும் சிகரெட் புகைப்பதாக அமெரிக்க புற்றுநோய் மையம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 53 சதவீத ஆண்களும் 3 சதவீதப் பெண்களும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் 50% பேர் புகைப்பிடிக்கின்றனர் என்கிறது மத்திய சுகாதாரத் துறை.

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 25 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக லேன்சட்டின் சமீபத்திய ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.'

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. புகையிலையால் வரும் புற்றுநோய்களில் இதுவே அதிகம். 2020-ம் ஆண்டில் இந்தியாவில் 13 சதவீதம் இறப்புகளுக்குப் புகையிலை பழக்கமே காரணமாக இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை திரிபுரா மாநிலத்தில் அதிகபட்சமாக 64.5 சதவீதம் பேர் புகையிலை பழக்கத்துக்கு ஆளாகி உள்ளதாகவும், குறைந்தபட்சமாக கோவாவில் 9.7 சதவீதம் பேர் ஆளாகியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் கிராமப்புறங்களில் மூன்று பேருக்கு ஒருவர் புகையிலையை பயன்படுத்துவதாகவும், நகர்ப்புறங்களில் ஐந்து பேரில் ஒருவருக்கு இப்பழக்கம் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 21% பேர் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் என்கிறது ஓர் ஆய்வறிக்கை.

இந்நிலையில் இதுதொடர்பாக மூளை மற்றும் நரம்பியல் மருத்துவர் அலீமிடம் பேசினோம்.

‘’வயது, பாலினம் என்ற எந்தப் பாகுபாடுமின்றி புகைப்பிடிக்கும் பழக்கமுடைய ஒவ்வொருவருக்கும் உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன. புகைப்பிடிப்பவர் மட்டுமின்றி, பாசிவ் ஸ்மோக்கிங் எனப்படும் புகைப்பிடிப்பவர் அருகில் இருந்தாலும் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. புகைப் பழக்கத்தால் இறப்பவர்களில் 6 லட்சம் பேர் நேரடியாகப் புகைப்பவர்கள் அல்ல. புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதாலேயே 17% பேர் பலியாகின்றனர். இப்படி 2004-ம் ஆண்டில் நேரடியாகப் புகைக்காமல் இறந்தவர்களில் 31% பேர் குழந்தைகள்.

புகைப்பிடிப்பதால் நோய் எதிர்ப்பாற்றல் தன்மை குறைந்து காசநோய் கிருமி தாக்குவதன் மூலம் காசநோய் ஏற்படும். முன்பு வந்த காசநோய் குணமாகி இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால், இழந்தால் திரும்ப காசநோய் உயிர்த்தெழும். காசநோய் உள்ளவர்கள் புகைப்பிடிக்கும்போது அவர்கள் உள்ளிழுத்து வெளியே விடும் புகை காற்றில் பரவும். அதை சுவாசிப்பவர்களுக்கும் காசநோய் பரவும். புகைப்பிடிப்பதால் மருந்தின் வீரியத் தன்மை குறையும், உறுப்புகள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரவும் வாய்ப்புகள் உள்ளன.

சிகரெட்டில் நோயை உண்டாக்கக் கூடிய கார்பன் மோனாக்சைடு நச்சு அதிகம் உள்ளது. தொடர்ந்து புகைப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப் பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படலாம். மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காசநோய், மலட்டுத் தன்மை என மற்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. புற்றுநோய் வந்தால் அவர்கள் நுரையீரலில் வடு இருக்கும். அதனால் காசநோய் வரலாம். ஆனால், இது உறுதி செய்யப்படவில்லை.

புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருந்தால் கைக்குழந்தை, சிசுவின் நுரையீரல் எளிதில் பாதிப்படையும். சிறுவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆட்பட்டால் அவர்களின் வளர்ச்சி குறையும், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் உண்டாகும். வளரிளம் பருவத்தில் இருப்பவர்கள் புகைப்பிடித்தால் அவர்கள் அடுத்தகட்டமாக போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் ஆபத்து நேரலாம்.

பெண்கள் புகைப்பிடிப்பதால் குழந்தை உருவாகும் சக்தி குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படும், கரு உண்டானால் சிசுவின் வளர்ச்சியைப் பாதிக்கும். பெண்கள் புகைப்பிடிப்பதால் அடுத்த தலைமுறையே பாதிக்கும்.

இந்தியாவில் பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவன அறிவுறுத்தலின்படி புகையிலைக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. தற்போது புகைப்பிடிக்கும் பழக்கம் வளர்ந்த நாடுகளில் குறைந்துள்ளது. ஆனால், வளரும் நாடுகளில் அதிகரித்துள்ளது. இ சிகரெட், லைட் சிகரெட், பில்டர் சிகரெட் என எல்லாவற்றாலும் பாதிப்பு ஏற்படுவது 100% உண்மை.

சிறுவர்கள் சிகரெட்டைப் பிடிக்க வைப்பதில் சினிமா நடிகர்களுக்கும், விளம்பரங்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. தனக்குப் பிடித்த நடிகர் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பதைப் பார்த்து அதே போல பிடிக்க ஆசைப்படுகின்றனர். அதுவே பாவனையாக ஆரம்பித்து பழக்கமாகிவிடுகிறது. நாளடைவில் அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். இன்னும் சிலர் சிகரெட் பிடிப்பது பெருமை, ஸ்டேட்டஸ், மகிழ்ச்சி தரும் விஷயம், மன இறுக்கத்தைப் போக்கும் வழி என்று தவறாக நினைத்துக் கொள்கின்றனர். அப்படி எதுவும் இல்லை.

ஆனால், புகைப்பிடிக்கும் சிறுவர்களை எளிதில் திருத்த முடியும். ஏனெனில் அவர்களை பக்குவப்படுத்துவது எளிது. பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என அவர்கள் மற்றவர்களைச் சார்ந்திருப்பதால் புகைப்பழக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அன்புடன் பேசி பிரச்சினையைப் புரியவைக்கலாம். தேவைப்பட்டால் கவுன்சிலிங் அளிக்கலாம். சிறுவர்களைக் கண்காணிப்பதன் மூலமும் கவனிப்பதன் மூலமும் சிகரெட் பிடிக்கும் பழக்கத்திலிருந்து அவர்களை விடுவிக்கலாம்’’ என்றார் மருத்துவர் அலீம்.

40 ஆண்டுகளாக புகைப்பிடித்துக் கொண்டிருந்த எழுத்தாளர் ஷாஜஹான் ஒருநாள் புகைப்பதை விட்டொழித்தார். அதன் அனுபவங்களை 'அவசியம்தானா ஆறாம் விரல்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதினார். இவரின் புத்தகத்தைப் படித்து புகைப்பழக்கத்தை விட்டொழித்தவர்கள் பலர். இந்நிலையில் புகைப்பழக்கத்திலிருந்து சிறார்களை மீட்பது எப்படி? என்ற கேள்வியுடன் எழுத்தாளர் ஷாஜஹானிடம் பேசினோம்.

‘’இளம் வயதிலேயே புகைப்பழக்கத்துக்கு ஆளாகாமல் எப்படி இவர்களைத் தடுக்கலாம்? இது சிறார்களின் கையில் இல்லை, பெரியவர்களின் கையில்தான் இருக்கிறது. குழந்தைகள் தாமாகப் பேசுவதில்லை, நாம் பேசுவதைப் பார்த்துப் பார்த்து அவர்கள் பேசுகிறார்கள் அல்லவா? அதே போலத்தான் குழந்தைகளின் பழக்கங்களும் நம்மைப் பார்த்தே உருவாகின்றன. பெற்றோர் புகைப்பவர்களாக இருந்தால் குழந்தைகளும் புகைப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பல ஆய்வுகள் காட்டுகின்றன. இதை மனதில் இருத்திக்கொள்வதே, சிறார்களின் புகைப்பழக்கத்தை தடுப்பதற்கான முதல் வழி.

2017 டிசம்பரில் இளைஞர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, பெற்றோர் புகைக்கும்போது தாமும் புகைப்பதில் தவறில்லை என்று சொன்னவர்கள் 89% பேர். இதுதான் முதல் காரணம். நண்பர்களின் வற்புறுத்தல், நண்பர்கள் மத்தியில் தம்மை உயர்த்திக் காட்டிக்கொள்ளும் சிந்தனை, தாம் யாருக்கும் கட்டுப்படாதவர் என காட்டிக்கொள்வது, திரைப்படங்களைப் பார்த்துப் பழகுவது ஆகியவை இதர காரணங்கள். ஆர்வக்கோளாறில் புகைத்த சிறுவர்கள், பின்னர் நண்பர்களின் சேர்க்கையால் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். இந்தக் காரணங்களைப் புரிந்து கொண்டால், அதற்கான தீர்வுகளையும் கண்டடையலாம்’’ என்ற ஷாஜஹான் சிறார்களை புகைப்பழக்கத்திலிருது மீட்க 20 ஆலோசனைகளக் கூறியுள்ளார்.

20 ஆலோசனைகள்:

* முதலாவதாக, பெற்றோர் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். புகைப்பழக்கம் இருந்தால் அதை விட்டொழிக்க வேண்டும்.

* புகைப்பழக்கத்தின் தீமைகளைப்பற்றி குழந்தைகளுக்கு இளம் வயதிலிருந்தே அவ்வப்போது சொல்லிவைப்பது முன்னெச்சரிக்கையாக இருக்கும்.

* வீட்டுக்குள் புகைக்கக் கூடாது என்பதைக் கறாராகச் செயல்படுத்த வேண்டும்.

* சிகரெட், பீடி வாங்குவதற்கு குழந்தைகளை/ சிறுவர்களை அனுப்பவே கூடாது.

* விளையாட்டுக்காகக்கூட குழந்தையின்/சிறுவர்களின் கையில் எரியும் சிகரெட் தருவதோ, அல்லது சிகரெட் பற்றவைத்துப் பழக்குவதோ கூடாது.

* சிகரெட் பெட்டி எடுத்துட்டு வா, தீப்பெட்டி கொண்டு வா என்று குழந்தைகளை/சிறுவர்களை வேலை வாங்கக்கூடாது.

* பெற்றோர் புகைப்பவராக இருந்தால், குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் சிகரெட்களை வைக்க வேண்டும்.

* சிறுவர்களைக் கண்காணியுங்கள் — வீட்டுக்கு வரும்போது வாயில் துர்நாற்றம் வருகிறதா, துர்நாற்றத்தை மறைக்க ஏதாவது வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்களா என்று கவனியுங்கள். ஆடைகளில் புகைப்பதன் அடையாளங்கள் இருக்கலாம். இருமல், கமறல் போன்ற அறிகுறிகள் தெரியலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுத்தால் பழக்கத்தை விடச்செய்வது எளிது.

* சிறுவர்கள் புகைக்கிறார்கள் என்று தெரிந்தால், ஆத்திரமோ கோபமா காட்டக்கூடாது. உரையாடல் மூலம் மட்டுமே புரியவைத்துத் திருத்த முடியும்.

* பெற்றோர் புகைப்பவராக இருந்தால், சிறுவர்களைக் கட்டுப்படுத்துவது கடினமாகும். எனவே பெற்றோர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

* ஒருவேளை பெற்றோரால் புகைப்பழக்கத்தை விட முடியவில்லை என்றாலும்கூட, அதன் சிக்கல்களை, விடமுடியாமல் தவிப்பதை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

* பெற்றோர் புகைப்பவராக இருந்து, அதை விட்டொழித்தவராக இருந்தால், அதன் அனுபவங்களை குழந்தைகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

* புகைப்பழக்கத்தின் காரணமாக எவ்வளவு பணம் வீணாகிப்போனது என்பதை பகிர்ந்து, அதை ஆக்கபூர்வமாக எவ்வாறெல்லம் பயன்படுத்தியிருக்க முடியும் என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

* நண்பர்களின் சேர்க்கை காரணம் என்றால், சிறார்களை மட்டுமே கண்டிக்க முடியும். வளரிளம் பருவக் குழந்தைகளை, அந்த நண்பர்களோடு சேரக்கூடாது என்று கடுமையாக விதிக்காதீர்கள். உபதேச / மிரட்டல் மொழியில் பேச வேண்டாம். சக நண்பர் போல உரையாடுங்கள்.

* புகைப்பது எதனால் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது என்று கேட்டு, அந்தக் காரணங்கள் எவ்வாறு அர்த்தமற்றவை என்பதை இதமாக விளக்குங்கள்.

* புகைப்பதன் தீமைகள் சிறார்களுக்கு முழுமையாகப் புரிந்திருக்காது. உடல்நலப் பாதிப்பு, பணச்செலவு, நீண்டகால பாதிப்பு ஆகியவை பற்றி எடுத்துரைக்க வேண்டும்; இதை பணத்தைக் கொண்டு அவர்களுக்கே நன்மை தரக்கூடிய வேறென்னவெல்லாம் செய்து கொள்ளலாம் என்று விளக்குங்கள்.

* புகைப்பழக்கத்தை விட்டொழிப்பதில் உங்கள் குழந்தை அடையும் முன்னேற்றத்தைப் பாராட்டுங்கள், ஊக்கப்படுத்துங்கள்.

* எப்போதெல்லாம் புகைக்கத் தோன்றுகிறது என்று கேட்டு, அந்த நேரங்களில் அவர்களுடன் சேர்ந்து வேறு ஏதாவது பொழுதுபோக்குகளில் ஈடுபட முடியுமா என்று பாருங்கள். அவர்களுடன் அதிக நேரத்தை செலவு செய்யுங்கள்.

* ஒரே முறை உபதேசம் செய்து மட்டுமே நிறுத்தி விட முடியாது. இது ஒரு தொடர் முயற்சி. தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும், துணையாக நிற்க வேண்டும்.

* புகைப்பழக்கத்தைக் கைவிட ஆலோசகரிடம் செல்ல உங்கள் குழந்தை விரும்பினால், அவர்களுக்குத் துணையாக இருங்கள்.

க.நாகப்பன்,

தொடர்புக்கு:nagappan.k@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

57 mins ago

கருத்துப் பேழை

53 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

37 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

15 mins ago

மேலும்