காற்று மாசுபாடுள்ள சுற்றுப்புறங்களில் வசிக்கும் 93 சதவீதம் குழந்தைகள்:சுற்றுச்சூழல் ஆர்வலர் வேதனை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

இன்று ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம்

சர்வதேச அளவில் 93 சதவீதம் குழந்தைகள் காற்று மாசுபாடுள்ள சுற்றுப்புறங்களில் வசிக்கிறார்கள். 10 பேரில் 9 பேர் மாசுபாடான காற்றை சுவாசிக்கிறார்கள் என வேதனையைப் பதிவு செய்கிறார் மதுரையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு எற்படுத்தவும், ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 'காற்று மாசுபாடை ஒழித்தல்' என்ற கருத்தை மையப்படுத்தி உலக சுற்றுச்சூழல் நாள்  கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்கன் கல்லூரி பேராசிரியரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ராஜேஷ் கூறுகையில், "மனிதர்களின் அதிகமான இறப்பிற்கு 5-வது முக்கிய காரணியாக காற்று மாசுபாடு என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

அதன் கணக்கெடுப்படி, உலகளவில் 93 சதவீதம் குழந்தைகள் காற்று மாசுபாடுள்ள சுற்றுப்புறங்களில் வசிக்கிறார்கள். 10 பேரில் 9 பேர் மாசுபாடான காற்றை சுவாசிக்கிறார்கள்.

 

 

 

உலகளவில் 3 பில்லியன் மக்கள், வீட்டு எரிப்பொருளாக மண்ணெண்ணெய், மரக்கட்டைகளை பயன்படுத்துகிறார்கள். இதில் வரக்கூடிய புகையால் காற்று அதிகளவு மாசுபாடு அடைகிறது. மாசடைந்த காற்றில் சல்பர் டை ஆக்ஸைடு கார்பண் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, ஹைட்ரோ கார்பன், காரீயம் போன்ற நச்சு வாயுக்கள் கலந்துள்ளன.

இந்தியாவில் 2030ம் ஆண்டில் 670 மில்லியன் மக்கள் மாசுப்பட்ட காற்றை சுவாசிப்பார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

உலகளவில்  அதிகளவு மாசுபாடுள்ள 10 நகரங்கள் இந்தியாவில் உள்ளது. காற்று மாசுபாடு காரணமாக 29 சதவீதம் நுரையீரல் புற்றுநோயாலும், 25 சதவீதம் இதய நோயாலும் இறக்கிறார்கள்.

ஆஸ்துமா, மூளைபாதிப்பு, கண்பாதிப்பு, சர்க்கரை நோய், மனசோர்வு, சுவாசக் கோளாறு, காது பாதிப்புக்கு காசு மாசுபாடு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் 166 நாடுகளில் குப்பைகளை திறந்த வெளியில் எரிக்கிறார்கள்.

காற்று மாசுபாட்டை தடுக்க என்ன செய்யலாம்?

காற்று மாசுப்பாட்டை தவிர்க்க குப்பையை எரிக்காமல் மறுசூழற்சி செய்யலாம். ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும். முடிந்தளவு கார், பைக் போன்ற தனி நபர் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து பஸ், ரயில் போன்ற பொதுவாகனங்களை பயன்படுத்தலாம்" என்றார்.

தேடி விதைப்போம் மரங்களோடு மனித நேயத்தை..

மதுரை 'பூம்' அமைப்பின் நிர்வாகியும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான என்.ஷர்மிளா கூறுகையில், "தேடி விதைப்போம் மரங்களோடு மனித நேயத்தை கோஷத்தை முன்நிறுத்தி இந்த ஒரு மாதத்தில் 'சம்மர் சேலஞ்' என்ற இயக்கத்தைதொடங்கி மரம் வளர்க்க ஆசைப்படுவோரின் வீடுகளை தேடிச் சென்று  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளோம்.

அரச மரம், சொர்க்க மரம் போன்றவை ஆக்சிஜனை சுத்தப்படுத்துவதோடு நிழல் தரவும் பெரிதும் உதவுகிறது.

 

 

 

நம் ஊருக்கே உரித்தான நாட்டு மரங்களான கடம்பம்,  புங்கை மற்றும் வேம்பு நம் மண்ணில் வளமாக வளர்வதோடு நிழலுக்கும் உதவுகிறது.

வறட்சியாகவும், வெப்பமயமாகியும் தவித்து கொண்டிருக்கும் நம் உலகை மீட்பதற்கு மரம் நடுவதே ஒரே வழி.  மக்கள் மத்தியில் சமீபமாக மரம் வளர்ப்பில் பெரிதாக ஆர்வம் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

எங்களைத் தேடி வந்து நிறைய பேர் மரம் வாங்கி சென்றதோடு குடும்பத்தோடு பங்கேற்றதும் இம்மாற்றத்தை உணர்த்தியது" என்றார்.

சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் மின்சார உற்பத்தி செய்யப்படுமா?

மதுரை ஜனதா சங்கம் மண்டலத்தலைவர் சசாங்கன் கூறுகையில், "மின்சார கண்டு பிடிப்புக்குப்பின்னரே அனைத்து மின்சார கருவிகளும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது.

அறிவியலின்  அனைத்து  துறைகளும் மின்சாரத்தின் துணையோடு  வேகமாக  வளர்ந்தது. மனிதனின்  வாழ்க்கையை  எளிதாக்கியது  மட்டும்  இல்லாமல் மனித  நாகரிக  வளர்ச்சிக்கும்  அடிப்படையாக  அமைந்திருக்கிறது.

 

 

 

ஆரம்ப  காலத்தில் இயற்கையான முறையில் விவசாயத்திற்காகவும் குடிநீருக்காகவும் கட்டப்பெற்ற மிக உயரமான  அனைக்கட்டுகளில் இருந்து  வெளியேற்றப் படும் தண்ணீரின் அழுத்தத்தைக்  கொண்டு குறைந்த  செலவில் சுற்றுச் சூழல்  பாதிப்பின்றி மின்சாரம் உற்பத்தி செய்தோம்.

நாளடைவில் தொழில்  வளர்ச்சி,  மின்சாரப் பரவலாக்கம், மற்றும் மக்கள்  தொகைப்  பெருக்கம் ஆகியவற்றால்  மின்சாரத்தின் தேவை  அதிகரித்தது. அதனால், நிலக்கரி மற்றும் பெட்ரோலியப்  பொருள்கள் மூலம்  மின்சாரம்  தயாரிக்கப்படுவதால்  உலகின்  வளங்கள் வேகமாக குறைந்து  வருகிறது.

நிலக்கரியை வெட்டி எடுப்பதால் பூமியில்  பெரும்  பள்ளங்களும்,பெட்ரோலியப்  பொருள்களை  பெருமளவில்  வெளியில் எடுப்பதால் பூமிக்குள்  வெற்றிடமும் அதன் காரணமாக  உள் தட்டு  நகர்வதால் நில அதிர்வும் ஏற்படுகிறது.

தமிழக அரசு சூரிய மின் உற்பத்திக்கு அதிக மானியம்  வழங்கி  மக்களை  சூரிய  மின்  உற்பத்திக்கு  மாற்றம் செய்வதோடு, காற்றாலை, கடலலை, தேசிய நீர்வழிச்சாலை மின் உற்பத்தி ஆகிய திட்டங்களை  சுற்றுச் சூழலை  கருத்தில் கொண்டு  விரைவில் பெருக்கி நிறைவேற்றிட வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்