தொடரும் ஆபத்தான சவால்கள்... உலகளவில் ட்ரெண்ட் ஆன #கிகி சேலஞ்ச் உணர்த்துவது என்ன?

By நந்தினி வெள்ளைச்சாமி

நெரிசல் மிகுந்த சாலைகள், வளைவான ஆபத்துமிகுந்த மலைப்பாதைகள், கரடுமுரடான பகுதிகளில் ஓடும் காரிலிருந்து இறங்கி "கிகி டூ யு லவ் மீ? ஆர் யு ரைடிங்?" என கூலான பாப் பாடலுக்கு வித்தியாசமான அசைவுகளுடன் நடனம் ஆடுவது உங்களுக்கு கொஞ்சம் ஆபத்தான ஐடியா போன்று தோன்றலாம். ஆனால், இன்று உலகம் முழுவதிலும் இளைஞர்கள், நடுத்தர வயதினர், புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் எல்லாம் இந்த ஆபத்தான ‘விளையாட்டில்’ தான் ஈடுபட்டு வருகின்றனர். அந்த சவாலுக்கு பெயர்தான் ‘இன் மை ஃபீலிங்ஸ்’ சவால், இன்னும் ஈஸியாக சொல்ல வேண்டுமென்றால் ’கிகி சேலஞ்ச்’.

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், நீலத்திமிங்கலம் (புளூ வேல்) சேலஞ்ச், ஃபிட்னஸ் சேலஞ்ச் என பல சவால்கள் உலகளவில் திடீரென ட்ரெண்டாகும். முக்கிய பிரபலங்கள் கூட உடனடியாக அவற்றால் கவரப்பட்டு சவாலை ஏற்று செய்து காட்டுவார்கள். சமீபத்திய உதாரணமாக, கிரிக்கெட் வீரர் விராட் கோலி விடுத்த ஃபிட்னஸ் சேலஞ்ச்-ஐ ஏற்று பிரதமர் நரேந்திரமோடி தனது காலை வேளை உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார். இதற்கு பாராட்டுகள் குவிந்த அதே வேளையில், அந்த வீடியோ கேலிக்கும் உள்ளாகியது.

இது ஒருபுறமிருக்கட்டும். கிகி சேலஞ்ச் எங்கிருந்து தொடங்கியது என தெரிந்து கொண்டால், இந்த டிரெண்ட் குறுகிய காலத்திலேயே எப்படி மாறி வந்திருக்கிறது என்பதை அறியலாம். கனடாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் டிரேக் கிரஹாம்-ன் ‘இன் மை ஃபீலிங்ஸ்’ எனும் பாடல் உலகளவில் ஹிட் அடித்த பாடல். இந்த பாடலுக்கு அமெரிக்காவின் பிரபல காமெடி நடிகர் ஷிக்கி, இரவு நேரத்தில் பிஸியான சாலையில் நடனமாடுகிறார். காரிலிருந்து இறங்கித்தான் நடனமாடுகிறார். ஆனால், அவர் வெளியிட்ட அந்த வீடியோவில், இப்போது பிரபலமாகி வருவது போன்று காரிலிருந்து இறங்குவதோ, நடனமாடிவிட்டு பின் ஓடும் காரிலேயே ஏறுவது போன்றெல்லாம் காண்பிக்கப்படவில்லை.

இந்த வீடியோ பிரபலமடையவே, அதனை பல இளைஞர்கள் எப்படியோ காரிலிருந்து இறங்கி நடனமாடுவது போன்று மாற்றி ஆபத்தான சவாலாக உலகளவில் வைரலாக்கியுள்ளனர். கடந்த ஜூலை 31 வரை 4 லட்சம் பேர் இந்த சவாலை ஏற்று #InMyFeelings எனும் ஹேஷ்டேகில் வீடியோவை வெளியிட்டுள்ளனர். கிகி சேலஞ்சுக்கு ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் முதல் தமிழ் நடிகை ரெஜினா வரை கவரப்பட்டுள்ளனர். மணப்பெண், மாப்பிள்ளை, வயதான பெண் என பலரையும் இந்த சவால் கவர்ந்துள்ளது. தெலங்கானாவில் விவசாயத்தில் ஏர் கலப்பையை விட்டுவிட்டு விவசாயிகள் இருவர் கிகி சேலஞ்சை தலைகீழாக வித்தியாசமாக செய்ததும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

விளையாட்டுதானே என தோன்றினாலும் இந்த சவாலில் உள்ள ஆபத்துகள் புரியாமல் தலையில் பலத்த அடியுடன் ஐசியு பிரிவில் சிகிச்சை பெறும் அமெரிக்க இளம்பெண்ணும், காரிலிருந்து இறங்கி நடனமாடும்போது தன் பையை பறிகொடுத்த பெண்ணும் இருக்கின்றனர். இதுதவிர கிகி சவாலை மேற்கொள்பவர்கள் பல்வேறு விபத்துகளுக்கும் உள்ளாகியிருக்கின்றனர். இதனால், காவல்துறையினருக்கு கிகி சவாலால் பெருத்த தலைவலி ஏற்பட்டிருக்கிறது. பல நாடுகளில் இந்த சவாலை மேற்கொள்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் ராஜஸ்தான், மும்பை போலீஸ் கடுமையாக எச்சரித்திருக்கின்றனர். ஐதராபாத் போலீஸ் ஒருபடி மேலே சென்று ‘சிறைக்குப் பின்னால் நடனமாட நேரிடும்’ என எச்சரித்திருக்கின்றனர்.

ஏன் இவ்வளவு ஆபத்துகளை தாண்டியும் கிகி சவாலை உலகம் முழுவதும் மேற்கொள்கின்றனர்? அதற்கு பின்னால் உள்ள உளவியல் என்ன? இளைஞர்கள் என்றாலும் சரி, எந்த வயதினராக இருந்தாலும் இத்தகைய சவால்களுக்கு உடனடியாக ஆட்படுவது அந்த சவால்களினால் ஏற்படும் அதீத ’கிக்’. அந்த சவாலை உடனேயே செய்வதன் மூலம் ஏற்படும் உற்சாக உணர்வு, சமூக வலைத்தளங்களில் அதனை பதிவிடுவதன் மூலம் கிடைக்கும் நிலையற்ற புகழ். இவைதான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இந்த மாதிரியான புகழ்வாய்ந்த சவால்களை நேர்மறையான ஆக்கத்திற்கு பயன்படுத்தினால் கொஞ்சம் நல்லது. உதாரணமாக, ஐஸ் பக்கெட் சேலஞ்ச் உலகளவில் ட்ரெண்ட் ஆன போது, சிலர் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் என்பதை உலகளவில் ட்ரெண்ட் ஆக்கினர். அதாவது ஏழைகளுக்கு ஒருபடி அரிசியை இலவசமாக வழங்கி, அதனை மற்றவர்களுக்கு சவாலாக விடுக்க வேண்டும். அந்த சவாலை உருவாக்கிய ஹைதராபாத்தை சேர்ந்த மஞ்சுலதா கலாநிதிக்கு ஐநாவின் கர்மவீரா சக்ரா விருதும் வழங்கப்பட்டது. அதேபோல், இயலாதவர்களுக்கு உணவு வழங்கிவரும் அமைப்பான ‘ஃபுட் பேங்க் - இந்தியா’ எனும் அமைப்பை சேர்ந்த சினேகா மோகன் தாஸ் சமீபத்தில் #CleanPlateChallenge என்ற சவாலை உருவாக்கினார். அதாவது ஒருவர் தன் தட்டில் உள்ள உணவு முழுவதையும் வீணாக்காமல் சாப்பிட்டு காலியான தட்டை புகைப்படமாக வெளியிட வேண்டும். உலகம் முழுவதும் இன்று கடும் சவாலாக உள்ள உனவு வீணாகுதல் பிரச்சினைக்கான சிறிய விழிப்புணர்வாக இந்த நகர்வு பார்க்கப்பட்டது.

அப்படி ஆக்கப்பூர்வமான சவால்களை மேற்கொள்ளலாம். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு இத்தகையை கிகி சவால்களின் பின்னால் உள்ள ஆபத்துகள் குறித்து விளக்குவதும் அவசியம். சாலை விதிமுறைகளை மீறி உயிருக்கே உலை வைக்கும் கிகி சவால் வேண்டாமே!

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

10 mins ago

இந்தியா

18 mins ago

க்ரைம்

15 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்