5 கேள்விகள் 5 பதில்கள்: எங்கள் வெற்றி அரசியலையே மாற்றும்!- சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர்

By கே.கே.மகேஷ்

கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது தங்கள் ‘பரப்புரை’யாலும், ‘செயல்பாட்டு வரைவா’லும் (தேர்தல் அறிக்கை) கவனத்தைக் கவர்ந்தது நாம் தமிழர் கட்சி. பிரதான கட்சிகளே ஒதுங்கிக்கொண்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் துணிச்சலாகக் களமிறங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினேன்.

எந்த இலக்கோடு போட்டியிடுகிறீர்கள்?

நாங்கள் முன்வைப்பது ஆள் மாற்ற, ஆட்சி மாற்ற அரசியல் அல்ல. தன்னலமற்ற, நேர்மையான, ஊழல் லஞ்சமற்ற முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பாகவே இந்த இடைத்தேர்தலைப் பார்க்கிறோம். ஒட்டுமொத்தத் தொகுதி களுக்கான தொடக்கமாக இத்தொகுதி இருக்கும். நாங்கள் வென்றால் ஆட்சி மாறாதுதான். ஆனால், இதுவரையில் இந்த நிலத்தில் இருந்த அரசியலே மாறிவிடும்.

ஆட்சிக்கு வர முடியாதவர்களின் பேச்சு எப்போதுமே சுவாரசியமாகத்தான் இருக்கும்.. சீமானின் பேச்சு அத்தகையது என்கிறார்களே?

சரி, ஆட்சிக்கு வர முடியாததால் நான் அரசியல் பேசுகிறேன் என்றே வைத்துக் கொள்வோம். நான் பேசுகிற விஷயங்களை எல்லாம் நிறைவேற்றி, எனக்கு அரசியல் செய்ய இடமே இல்லாமல் செய்துவிட வேண்டியதுதானே? ‘நாங்கள் வந்தால்…’ என்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். ‘நாங்கள் வந்தால்’ என்று பேச வேண்டியது நான்தானே ஒழிய, அவர்கள் அல்ல. அவர்கள் புதிதாக இனிமேல்தான் ஆட்சிக்கு வரப்போகிறார்களா?

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சி எதையுமே செய்யவில்லை என்கிறீர்களா?

எதையும் முழுமையாகச் செய்ய வில்லை என்கிறேன். ‘வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்று சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள். பயிற்று மொழி, ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி எதிலாவது தமிழ் இருக்கிறதா? சமூகநீதி, இடஒதுக்கீடு, பெரிய பெரிய பாலங்கள், கட்டிடங்கள் எல்லாம் தங்கள் சாதனை என்பார்கள். பிறமொழி பேசுவோருக்கும் தமிழகத்தில் இடஒதுக்கீடு கொடுத்தார்களே, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங் களில் பெரும்பான்மையாக வாழ்கிற என் தமிழ் மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்களா? தெலுங்கு வருடப் பிறப்புக்கும், ஓணத்துக்கும் இங்கே விடுமுறை தந்தவர்கள், எத்தனை மாநிலங்களில் தமிழர் திருநாளுக்கு விடுமுறை வாங்கித் தந்திருக்கிறார்கள்? எத்தனை பொதுத் தொகுதியில் இதுவரையில் தாழ்த்தப் பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி யிருக்கிறார்கள்? உடனே, ‘உங்களை எல்லாம் படிக்க வைத்ததே நாங்கள் தான்’ என்பார்கள். ஊரெங்கும் பள்ளிக் கூடங்களைக் கட்டிய காமராஜரே இப்படிச் சொல்லிக் காட்டியதில்லை.

அதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டுவிட்டது.. மகிழ்ச்சியா?

சின்னத்தால் மட்டுமே ஒரு கட்சி வெற்றி பெறுவதில்லை என்பது உண்மை யென்றால், இரட்டை இலைக்காக ஏன் அடித்துக்கொள்கிறார்கள்? அண்ணாவும், எம்ஜிஆரும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த சின்னம், அரசு நலத் திட்டங்களில் எல்லாம் போட்டுப் பிரபலப்படுத்திக் கொண்ட சின்னங்கள் உதயசூரியனும், இரட்டை இலையும். 60 ஆண்டுகளாக ஒரே சின்னத்தை வைத்திருப்பவர்களும், 6 நாட்களுக்கு முன்பு சின்னம் பெற்றவர்களும் சமமான போட்டியாளர்களா?

மார்க்ஸிஸ்ட் வேட்பாளரைவிட அதிக வாக்குகள் வாங்குவோம் என்று பேராசிரியர் அருணனுடன் நீங்கள் போட்ட சவால் இப்போதும் தொடர்கிறதா?

கம்யூனிஸ்ட்டுகள் நாட்டைக் கெடுத்துவிட்டார்கள் என்றோ, அவர் களுடன்தான் எங்கள் போட்டி என்றோ நான் கூறவில்லை. அடிப் படையில், நானும் ஒரு கம்யூனிஸ்ட். ஈழத் தமிழர், கச்சத்தீவு, அணுஉலை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் அவர்களின் செயல்பாடு மண்ணுக்கேற்ற மார்க்ஸியமாக இல்லை. நாங்கள் அதனைச் சரியாக முன்னெடுக்கிறோம். தமிழ்ப் பிள்ளைகள் நல்ல முடிவெடுப் பார்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சுற்றுலா

36 mins ago

சினிமா

41 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்