சென்னை வானொலிக்கு வயது 80

By குமரி எஸ்.நீலகண்டன்

ஜூன் 16 , 1938 அன்றுதான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்ற ராஜாஜி சென்னை வானொலி நிலையத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். அது ஒரு புனிதமான ஆரம்பம். அன்றைய சமூகத்தின் மனநிலையையும், நாகரீக அநாகரீகங்களையும், அறிவியல் மேன்மையையும், கலைப்பார்வையையும், சமூகக் கவலைகளையும் பிரதிபலிக்கும் விதமாக அன்று ராஜாஜியின் சிந்தனை ஒரு உயர்ந்த நோக்கோடு வானொலியில் முதன்முதலாக முழங்கியது.

எக்மோர் மார்ஷல் சாலையிலுள்ள ஈஸ்ட் நூக் எனப் பெயரிடப்பட்ட ஒரு பழைய கட்டிடத்தில்தான் அப்போது சென்னை வானொலி நிலையம் இருந்தது. முன்னதாக மெரினா, ராபின்சன் பூங்கா, பீப்பிள்ஸ் பூங்கா, உயர் நீதிமன்ற கடற்கரை என ஆறு ஒலிப்பெருக்கிகள் மூலமாக சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சிகளை மக்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதனைத் தொடர்ந்து 1954-ம் ஆண்டு ஜூலை மாதம்தான் மெரினா கடற்கரைக்கு அருகிலிருக்கும் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது.

வானொலியை 1970-80களில் தெருவில் வெறுமனே நடந்துகொண்டே கேட்க முடியும். எல்லா வீடுகளிலும் சென்னை வானொலி முழங்கிக்கொண்டிருந்தது. இன்று உலகத் தமிழர்களின் மனம் நிறைந்த திரைக் கலைஞர்களான சிவாஜி கணேசன், மனோரமா, ஆர்.எஸ்.மனோகர் உட்பட்ட ஏராளமான கலைஞர்கள் சென்னை வானொலியின் நாடகக் கலைஞர்கள்தான். அப்போதெல்லாம் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைக்காக நேயர்கள் காத்திருப்பார்கள். அது தொலைக்காட்சியில்லாத காலகட்டம். ஞாயிறு பிற்பகல் சென்னை வானொலியில் ஒலிபரப்பாகும் நாடகம், திரைப்பட ஒலிச் சித்திரங்கள் ஒரு திரைப்படம் அளவுக்கு நேயர்களுக்கு போதையூட்டின. பல பிரபலமான தலைவர்கள், ஆளுமைகளின் மரண ஊர்வலங்களைத் தொலைக்காட்சி இல்லாத காலகட்டத்தில் சென்னை வானொலியின் நேர்முக வர்ணனையின் மூலமாகக் கேட்டு அந்தத் துயர நிகழ்வுகளில் மக்கள் பங்கெடுத்துக்கொண்டார்கள்.

பள்ளியில் பாடவேளையின்போது நண்பன் நாரயணன் தன் கைக்குட்டைக்குள் ஒரு சிறிய வானொலிப் பெட்டியைப் பொதிந்து குறைந்த சத்தத்தில் கிரிக்கெட் தமிழ் வர்ணனையை பின்வரிசையிலிருந்து கேட்டது இன்றும் பசுமையான நினைவு. 90களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நண்பரின் விடுதி அறைக்கு வரும்போது எல்லா அறைகளிலும் தென்கச்சியின் இன்று ஒரு தகவல், நன்னனின் தமிழ் அறிவோம் உட்பட காலை நிகழ்ச்சிகள் ஒலித்துக்கொண்டிருக்கும். எம்.பி.ஸ்ரீனிவாசின் சேர்ந்திசை எல்லாமே மிகவும் பிரபலமானவை. சென்னை வானொலியில் சிறுவர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பிற்காலத்தில் உலகம் போற்றும் கலைஞர்களாகப் பரிணமித்தார்கள்.

ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன், சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் சமுத்திரம் உட்பட பல எழுத்தாளர்கள் சென்னை வானொலியில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றியவர்கள். இன்று உலகமறிந்த இசைக் கலைஞர்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி, செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், டி.கே.பட்டம்மாள், பால முரளி கிருஷ்ணா, எம்.எஸ்.கோபால கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன் உட்பட்ட பல பிரபல இசை ஜாம்பவான்களின் வளர்ச்சியோடு உலகத்தையும் வளர்த்தது சென்னை வானொலி.

2004 டிசம்பர் 26 அன்று அதிகாலை மறக்க முடியாத நாள். அரங்கத்தில் ஏதோ அதிர்வதாக நண்பர் பஷீர் கூறினார். நான் உணரவில்லை. இரவு விழித்து ஒலிபரப்பிய களைப்பு எனக்கு. வீட்டுக்குக் கிளம்பினேன். ஆழ்வார்பேட்டை போக வேண்டும். வீடு வந்து சேர்ந்ததும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கடற்தண்ணீர் அலுவலகத்தில் நுழைந்துவிட்டது. என்னால் நம்பவே இயலவில்லை. பத்து நிமிடங்களில் அப்படி என்ன நிகழ்ந்துவிட்டது. நான் ஆச்சரியத்தில் நிலையத்தை நோக்கிப் பயணித்தேன். சற்றுமுன் வெறிச்சோடிக் கிடந்த சாந்தோம் பேருந்து நிறுத்தத்தில் அகதிகள்போல பெட்டிபடுக்கைகளுடன் கதறிக்கொண்டு மக்கள் கூட்டம். சென்னை வானொலி நிலையம் தண்ணீரில் மிதப்பதுபோலதான் காட்சி அளித்தது. காவல்துறை தலைமை அலுவலகச் சுவர் இடிந்து விழுந்திருந்தது.

சில மணி நேரங்களிலேயே அந்தச் சாலையில் மக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்டது. சுனாமி வருவதற்கான எச்சரிக்கையை அரசு விடுத்திருந்தது. மறுநாள் சாந்தோமில் குடியிருப்புவாசிகள் பலர் வீடுகளைவிட்டுச் சென்றுவிட்டனர். அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. வெறிச்சோடிக் கிடந்த சாலையில் வெகு தூரத்தில் தனியார்த் தொலைக்காட்சி சானல்களின் ஒளிபரப்பு வாகனங்கள் தெரிந்தன.

எங்கள் நிலைய இயக்குநராக அப்போது ஸ்ரீனிவாச ராகவன் இருந்தார். பாதுகாப்பு கருதி ஒலிபரப்புப் பணிக்குத் தவிர்க்க முடியாத குறைந்த பணியாளர்கள் மட்டும் பணியிலிருந்தால் போதுமென்று சொல்லியிருந்தார். மறுநாள் எனக்கு அறிவிப்புப் பணி. கடற்கரை சாலைக்குள் செல்ல காவல்துறை என்னை அனுமதிக்கவில்லை. அறிவிப்பாளர் அடையாள அட்டையைக் காட்டியதும் என்னை மட்டும் அந்தச் சாலையில் அனுமதித்தார்கள். அலுவலகத்தில் ஒலிபரப்புப் பணிக்கு அத்தியாவசியமான நான்கைந்து பேர்தான் அந்த முழுக் கட்டிடத்திலும் இருந்தோம். அவ்வப்போது அறிவிப்புக் குறிப்புகள் தரப்பட்டன. சுனாமி பேரலையின்போது சென்னை வானொலியின் பணி மிகவும் பெருமிதத்துக்குரியது.

நான் ஒவ்வொருமுறை சென்னை வானொலி ஒலிப்பதிவுக்கூடக் கதவின் பழைய கைப்பிடியைப் பிடிக்கும்போதும் என் மனதுக்குள் ஒரு பரவசம் பிறக்கும். அந்தக் கைப்பிடியானது இசை நாடகக் கலைஞர்கள், இந்தியத் தலைவர்கள், தமிழக முதல்வர்கள், ஆளுனர்கள் உட்பட்ட பிரபலமான அரசியல் ஆளுமைகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள், பல்துறை சாதனையாளர்கள் என பல கைகளின் வெப்பத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும் புனிதமான கைப்பிடி அது!

- குமரி எஸ்.நீலகண்டன்,

தொடர்புக்கு: punarthan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

11 mins ago

இந்தியா

13 mins ago

சினிமா

19 mins ago

ஓடிடி களம்

51 mins ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்