தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By இரா.வினோத்

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 4 டிஎம்சி நீரை கர்நாடகா உடனடியாக திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் காவிரி வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “காவிரி தீர்ப்பை அமல்படுத்துவதற்காக செயல் திட்டத்தின் வரைவு அறிக்கை தயாராகிவிட்டது. 4 மாநிலங் கள் சம்பந்தப்பட்டிருப்பதால் மத்திய அமைச்சரவையில் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தார். நாடு திரும்பியவுடன் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பெரும்பாலான மத்திய அமைச்சர்கள் கர்நாடக பிரசாரத்தில் உள்ளனர். இதனால் திட்ட‌ வரைவு அறிக்கைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை. அந்த அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதலாக 2 வார அவகாசம் தேவை. கர்நாடக தேர்தல் வரும் 12-ம் தேதி முடிந்தவுடன், இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்’’ என்றார்.

அதற்கு நீதிபதி தீபக் மிஸ்ரா, “நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற இன்னும் எவ்வளவு அவகாசம் கேட்பீர்கள்? இதில் இருந்து மத்திய அரசு தப்பிக்க முடியாது. விரைவில் திட்ட வரைவு அறிக்கையை தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்றார். அதற்கு மத்திய அரசின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “நாங்கள் இக்கட்டான நிலையில் இருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் கர்நாடக தேர்தல் முடிந்துவிடும். அதன் பிறகு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்றார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, “உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 2 மாதங்கள் ஆன பிறகும் மத்திய அரசு தாமதம் செய்வதை ஏற்க முடியாது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்கிறது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்காகவே மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல் இருக்கிறது. கர்நாடக தேர்தல் முடிவு குறித்து அக்கறை காட்டும் மத்திய அரசு, காவிரி செயல் திட்ட வரைவு அறிக்கையை தயாரிக்க அக்கறை காட்டவில்லை. மத்திய அரசின் இந்தப் போக்கு நாட்டின் கூட்டாட்சிக்கும், நீதிமன்ற உத்தரவுக்கும் முடிவு கட்டுவதாக அமைந்துள்ளது” என்றார்.

இதையடுத்து நீதிபதி தீபக் மிஸ்ரா, “உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமலில் இருப்பதால் கடந்த பிப்ரவரியில் இருந்து கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 4 டிஎம்சி நீரை உடனடியாக திறக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

அதற்கு கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஷியாம் திவான், “ஏற்கெனவே கர்நாடகா தமிழகத்துக்கு கூடுதலாக நீரை திறந்துள்ளது. எனவே இப்போது காவிரி நீரைத் திறக்க முடியாது” என்றார்.

அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, “கோடை காலத்தில் கர்நாடகா இதுவரை 1.1 டிஎம்சி நீரை மட்டுமே தமிழகத்துக்கு திறந்துள்ளது. எனவே நீதிமன்ற உத்தர‌வின்படி தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீரை திறக்க வேண்டும். இல்லாவிட்டால் கர்நாடக அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேடும். காவிரி செயல் திட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய அரசு கூறும் வாதத்தை ஏற்க முடியாது” என்று கூறி, அடுத்தகட்ட விசாரணையை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முதல்வர் சித்தராமையா மறுப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறும்போது, “தமிழகத்துக்கு திறந்துவிடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லை. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு நீர் திறக்க முடியாது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

32 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்