சட்டியில் இருப்பது தானே வரும்?

By செய்திப்பிரிவு

ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளச் சென்றவர்கள் திரும்பியாயிற்று. பள்ளிப் பருவத்திலேகூட மைதானம் பக்கம் போகாதவர்கள் இன்றைக்குப் பெரும் விமர்சகராகிவிட்டார்கள்.

'இளமையில் கைக்கொள்' என்பது விளையாட்டு வீரர்களை உருவாக்கும் முறை. இங்கே தொடக்கப் பள்ளிகளில் திடலும் கிடையாது, விளையாட்டு ஆசிரியரும் கிடையாது.

உயர், மேனிலைப் பள்ளிகளில் 250 மாணவருக்கு ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் என்பதை 400 மாணவருக்கு ஒருவர் என்று மாற்றினார்கள். ஆனால், ஆயிரம் மாணவர் உள்ள பள்ளியிலும் விளையாட்டாசிரியர் இல்லை என்பதே எதார்த்தம்.

ஆனாலும், சில வீரர்கள் உருவாகின்றார்கள் என்றால் அது அவர்களது தனிப்பட்ட முயற்சியே. அவர்களுக்குப் பயிற்சியாளர் கிடைப்பது அரிதிலும் அரிது.

விளையாட்டுச் சங்கங்களோ அரசோ எந்த உதவியும் செய்வதில்லை. விளையாட்டுப் பள்ளிகளின் செயல்பாடும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இவற்றையெல்லாம் சரி செய்தால்தான் மிகச் சிறந்த வீரர்களை உருவாக்க இயலும் என்பது எனது நம்பிக்கை.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

*

கட்டாயக் கழிப்பறை

கர்நாடகத்தில் ஒரு மாணவியின் கல்வியைத் தொடர கழிப்பறை கட்டித்தந்திருக்கிற அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள். தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பை வீடுகளில் கட்டாயமாக்கியது போலவே, கட்டாயக் கழிப்பறைச் சட்டம் கொண்டுவரலாம்.

இடமில்லாதவர்களைப் பொதுக் கழிப்பிடப் பயன்பாட்டுக்கு பழக்கப்படுத்துவதால் அடுத்த தலை முறையாவது தயங்கித் தயங்கி இரவுவரை காத்திருந்து திறந்த வெளிக்குச் செல்லும்நிலை மாறும்.

- கூத்தப்பாடி மா.கோவிந்தசாமி, தருமபுரி.

*

கலைச் சுதந்திரம்

'ஜோக்கரில் சினிமா வரையறையைப் பின்பற்றவில்லை' என்ற இயக்குநர் ராஜுமுருகன் பேட்டியை வாசித்தேன். சினிமா மட்டுமல்ல வரையறையை ஏற்படுத்திக்கொண்டு எந்த படைப்பாளியும் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. அப்படி இருந்தால் அது உண்மையான தாக்கத்தை உண்டாக்காது.

நியாயத்தை வலியுறுத்தும் வகையில் படம் எடுப்பேன் என்று நம்பிக்கைத் தெளிவுடன் பயணிக்கும் இளம் இயக்குனரின் முயற்சிகள் நல்ல பலனைத் தர வேண்டும் என வாழ்த்தி வரவேற்போம்.

- ஜீவா, 'தி இந்து' இணையதளம் வழியாக…

*

அரவணைப்பு நம் பொறுப்பல்லவா?

மருத்துவமனை மல்டி ஸ்பெஷா லிட்டியாக இருந்தால், வயதாகி உயிர் போகும் நிலையில் இருப்போ ரையும் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையை உடைத்தெறிகிறது 'வலியே மருந்தாகும்போது...' கட்டுரை.

நான் எனது சிறு அழகு தேவதையை இழந்த நிகழ்வும், அதற்காக நான் தேர்ந்தெடுத்த மருத்துவமும், எனது மடியிலேயே மரணம் நிகழ்ந்த அந்த இரவும் நினைவுக்கு வந்து கண்ணீரை வரவழைக்கிறது.

நம் அன்புக்குரியவர்களின் இறுதி சிகிச்சையின்போது, விலகி நின்று ஐசியூ வட்ட வடிவக் கண்ணாடியில் தூரமாக நின்று வேடிக்கை பார்க்கும் நிலையில் நம்மை வைப்பது நியாயமா? அவர்களைப் பராமரிக்க, அரவணைப்போடு ஆறுதலாகப் பேச வேண்டாமா?

- ஏ.மன்சூர் அகமது, மின்னஞ்சல் வழியாக…

*



யார் பெரியவர்?



நடுநிலையில் நின்று எழுதப்பட்ட 'போதும் அமளி!'- தலையங்கம் அருமை. ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் அலங்கரித்த சபை அது. ஜனநாயகமான, நாகரிகமான விவாதங்கள் நடந்த அந்தச் சபையில், 'நீ பெரியவன், நான் பெரியவன்' என்ற பெருமை எல்லாம் தேவையில்லை. ஜனநாயக நாட்டில் மக்களே பெரியவர்கள். அவர்கள் போட்ட ஓட்டுதான் இன்று மக்கள் பிரதிநிதிகளாக சட்டசபையில் கம்பீரமாக அமர வைத்திருக்கிறது. அதை இரு தரப்பும் உணர வேண்டும்.



- கேசவ் பல்ராம். பூங்காநகர், திருவள்ளூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

13 mins ago

தமிழகம்

59 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்