இப்படிக்கு இவர்கள்: மக்களின் குரல் கேட்கிறதா?

By செய்திப்பிரிவு

ஏப்ரல் 19-ல் வெளியான, ‘மீண்டும் ஒரு பஞ்சத்தை எதிர்கொள்ளப்போகிறோமா?’ கட்டுரை 1876-77-ம் ஆண்டு நிலவிய பஞ்சத்தைப் பற்றியும் அதற்கு அப்போதைய ஆங்கிலேய அரசு என்ன செய்தது என்ற வரலாற்றையும் நினைவூட்டியது. அதேநிலைதான் இன்றும். தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கிராமங்களில் ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் பல கிலோமீட்டர் நடந்து செல்கின்றனர். நகரங்களில் சொட்டுச் சொட்டாக வடியும் குழாயில் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். ஆனால், அரசு முன்னெச்சரிக்கையாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிமைக்காகப் போராடிய மக்கள், இன்று தங்களது வாழ்வாதாரத்துக்காகப் போராட யோசித்துக்கொண்டிருக்கின்றனர்.

விவசாயிகளின் பிரச்சினையும் கண்டுகொள்ளப்படவில்லை. மக்கள் தங்களால் நிறைவேற்றிக்கொள்ள முடியாத தங்களது தேவைகளையும் தாங்களே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றால் எப்படி? எல்லாவற்றையும் போராடித்தான் பெற வேண்டுமென்றால் அரசு எதற்கு.. ஆட்சியாளர்கள் எதற்கு?

- சு.சந்திரகலா, சிவகங்கை.



தீர்வு இருக்கவே செய்கிறது!

ஏப்ரல்18-ல் வெளியான, ‘காஷ்மீர் இடைத் தேர்தல் காட்டும் நிதர்சனம்’ தலையங்கம், அங்கு வெறும் 7% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது. கட்சி அரசியல்களைத் தாண்டி, அங்கு வாழும் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் நடத்தப்படவில்லையோ என்றும் தோன்றுகிறது. ஒன்று, பிரிவினைவாதிகளை அதிகாரபூர்வமாகப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அரசியலில் அவர்களையும் உள்ளடக்கிய அனைத்துக் கட்சிகள், அமைப்புகள், தேசிய அரசை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். அல்லது, மூன்றாவது நாட்டின் சமரசத்தை, எந்த மனச் சஞ்சலமுமின்றி ஏற்க, மத்திய - மாநில அரசுகள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், இதுபோன்று குறைவான வாக்குப்பதிவு நடைபெறும் சம்பிரதாயச் சடங்காக, தேர்தல் திருவிழாவை நடத்திக்கொண்டு சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

- முருகன் கோவிந்தசாமி, புதுச்சேரி.



எது மக்கள் நல அரசு?

ஏப்ரல் 13 அன்று வெளியான ‘காவல் துறைக்கு மனித உரிமைகளைச் சொல்லிக்கொடுங்கள்!’ தலையங்கமும் ‘கன்னத்தில் அடி வாங்கியது ஈஸ்வரி மட்டும்தானா?’ என்ற சஞ்சீவிகுமாரின் கட்டுரையும், தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும் சவுக்கடி கொடுக்கும் வகையில் இருந்தன. மதுக் கடை களைக் குடியிருப்புப் பகுதி களில் திறக்கும் விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதத்துடன் நடந்துகொள்வது தவறான போக்கு. மதுக் கடைகள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளியிருந் தாலும் குடிகாரர்கள் அங்கு போய்க் குடிப்பார்கள். தமிழக அரசு இனிமேலாவது மக்கள் நல அரசாகச் செயல்பட வேண்டும்.

- எம்.ஆர்.சண்முகம், மொடச்சூர்.



வருமுன் காப்போம்

முன்பெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு பற்றிய பேச்சு எழுந்தாலே, சம்பந்தப்பட்ட அமைச்சரை ஒப்புக்காவது பதவியிலிருந்து நீக்குவார்கள், அல்லது அவரே பதவி விலகுவார். இப்போதோ வருமான வரித் துறை சோதனை, வழக்குப் பதிவு, கைது நடவடிக்கை வரை சென்றாலும் அமைச்சர்களோ, அதிகாரிகளோ பதவி விலகத் தயாரில்லை. தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் விவகாரத்தைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரமும் மாநில எல்லை தாண்டி பேசப்படுகிறது. அரசியல் பிரளயமே ஏற்பட்டாலும் பதவி விலகவோ, விலக்கவோ யாரும் தயாரில்லை. மக்களுக்கு மறதி அதிகம் என்பதைத் தவறாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள். வருமுன் காப்பதே சிறந்தது என்பது, நோய்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் பொருந்தும் என்பதை அமைச்சர்களும் அதிகாரிகளும் உணர்வார்களா?

- செ.செல்வசங்கர், சீர்காழி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

வணிகம்

17 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

58 mins ago

வாழ்வியல்

49 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்