இப்படிக்கு இவர்கள்: ஜனநாயகத்தின் அர்த்தம்தான் என்ன?

By செய்திப்பிரிவு

ஆர்.கே. நகர் தொகுதி எத்தனையோ தேர்தல்களைச் சந்தித்தும் எந்த முன்னேற்றமும் இன்றி நசிந்துகொண்டிருக்கிறது. மாநகரத்தின் குப்பைக் கிடங்குபோலவே காட்சியளிக்கிறது. மீனவ சமூகத்தின் அல்லல்கள் எத்தனையோ... தொகுதி மேம்பாட்டுக்கு அரசு நிதியைச் செலவழிக்கும் நேர்மை அற்றவர்கள், தனிப்பட்ட வாக்காளர்களுக்குப் பணத்தை ஏதோ ‘பகடி’ கொடுத்து இடத்தை வாங்கிப் போடுவது மாதிரி, ஐந்தாண்டுகளுக்கு விலை பேசத் துணிவது எத்தனை அராஜகமானது!

இனிமேல் உங்கள் பக்கம் எட்டிப்பார்க்க மாட்டேன், அதுக்குத்தான் இந்தக் காசு என்றுதானே அதற்குப் பொருளாகிறது? அடுத்தவர்கள் காசு கொடுத்ததாகச் சொல்லிக்கொண்டே, தாங்களும் கைவரிசையைக் காட்டிக்கொண்டே கூச்சமின்றிப் புகார் எழுப்பவும் செய்கின்றனர். இன்னொருபக்கம் காசை அள்ளி அள்ளி இறைத்தவர்கள், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டதை ஜனநாயகப் படுகொலை என்று வருணிக்கின்றனர். ஜனநாயகம் என்றால் உண்மையில் என்ன என்று புதிய விளக்கம் வெளியிடப்பட்டால் அப்பாவி மக்கள் பிழைத்துப்போவார்கள்!

- எஸ்.வி.வேணுகோபாலன், சென்னை.



துயரங்களுக்கு மருந்து

ஏப்ரல் - 9 அன்று வெளியான ‘என் எழுத்தும் எண்ணமும்’ என்ற கோவை ஞானியின் கட்டுரை படித்தேன். ஞானியின் பார்வையை அடிப்படையில் மாற்றி அமைத்தது அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம் என்று கூறியிருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அதற்கு முன்பிருந்த கல்வி நிலையங்களின் நிலைப்பாட்டிலிருந்து மாறி தமிழ், தமிழிசை, தத்துவம், சமயக் கொள்கை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அங்கு பயின்ற ஞானி உயர்ஞானம் பெற்றிருக்கிறார். மாற்றிச் சிந்தித்து மறைந்திருக்கும் பொருளைக் காட்டியுள்ளார். எடுத்துக்காட்டாக, மதம் அபின் என்ற மார்க்ஸ் கருத்துக்கு அது போதைப் பொருள் என்பதற்காக அல்ல, அது துயரங்களுக்கு மாற்றாக, மருந்தாக இருப்பதை அந்த வாசகத்தில் அறிய முடிகிறது என்று ஞானி கூறிய கருத்து மிக மிகச் சரியானது.

- சி.செல்வராஜ், புலிவலம்.



சீர்படுத்த வேண்டியவர்களே சீரழித்திருக்கிறார்கள்!

சுகாதாரத் துறை அமைச்சர் வீட்டில் நடந்த வருமான வரித் துறை சோதனையும், அதில் சிக்கிய ஆவணங்களும் தமிழகத்துக்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருகாலத்தில் ஊழல், கடைநிலை ஊழியர்களிடம் அதிகளவில் மலிந்திருப்பதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது வறுமை. வருமானம் போதாமையால் கையூட்டு பெற்றார்கள். அப்போது ஊழலைத் தடுப்பதற்காக நிர்வாகத்தினரால், ‘லஞ்சலாவண்யங்கள் குறித்த புகார்களை அலுவலக / நிறுவனத் தலைவரிடம் நேரிலோ / எழுத்து மூலமாகவோ தெரிவிக்கலாம்’ என்ற அறிவிப்புப் பலகை, அரசு அலுவலகத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், தற்போது நிலைமை தலைகீழ். முதலமைச்சர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள், துணைவேந்தர்கள், அரசு உயரதிகாரிகள் என்று பட்டியல் நீள்கிறது. சீர்்படுத்த வேண்டியவர்களே சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள். தலைமையே லஞ்சலாவண்யத்தில் திளைத்திருந்தால் இடைநிலை, கடைநிலை ஊழியர்களை யார்தான் கட்டுப்படுத்துவது?

- பாபு டீ தாமஸ், மின்னஞ்சல் வழியாக..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

33 mins ago

வாழ்வியல்

24 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

59 mins ago

சினிமா

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்