சாலைகள் சீரமைப்பில் சமூகக் கண்காணிப்பு

By செய்திப்பிரிவு

பெருமழையின்போது சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் நீர் தேங்குவதற்கும் வீடுகளுக்குள் தண்ணீர் நுழைவதற்கும் சாலைகளின் உயரம் தொடர்ந்து அதிகரித்ததும் ஒரு காரணம். பிரதான சாலைகள் மட்டுமின்றிக் குடியிருப்புப் பகுதிகளின் உட்புறச் சாலைகளும் சீரமைக்கப்படும்போது, பழைய சாலை அகழ்ந்தெடுக்கப்படாமல் அதன் மீதே புதிய சாலை போடப்பட்டுவந்தது.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பழைய சாலைகளை அகழ்ந்தெடுத்த பிறகு, அதே மட்டத்திலேயே புதிய சாலைகள் போடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு இவ்விஷயத்தில் தொடர்ந்து சிறப்புக் கவனம் காட்டிவருகிறது. சாலை அமைக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து கடந்த ஆண்டு மே மாதத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு தலைமைச் செயலாளர் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.

இந்த ஆண்டு ஜனவரியில் தமிழ்நாடு முதல்வரே சென்னையின் சில இடங்களில் நடந்துவரும் சாலைப் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டார். அவருடைய உத்தரவின் பேரில், தலைமைச் செயலாளரும் மாநகராட்சி ஆணையரும் அடையாறு பகுதியில் நடந்துவந்த சாலைப் பணிகளை நள்ளிரவில் ஆய்வுசெய்தனர். முதல்வரும் தலைமைச் செயலாளரும் சாலைச் சீரமைப்புப் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டது தமிழ்நாடு முழுவதும் இது குறித்த ஒரு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில், கரோனா தடுப்புப் பணிக்காக மண்டலவாரியாக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகளிடம் சாலை சீரமைப்புப் பணிகளைக் கண்காணிப்பதும் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக, இரவு நேரங்களிலேயே பெரும்பாலும் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அதுவே, சாலைச் சீரமைப்பில் விதிமுறைகள் பின்பற்றப்படாமல் போவதற்கும் காரணமாக இருக்கின்றன. சமீபத்தில், கிழக்கு தாம்பரம் பகுதியில் நடைபெற்றுவரும் சாலைச் சீரமைப்புப் பணிகளை அப்பகுதியில் குடியிருப்பவர்களே ஒன்றிணைந்து சமூகத் தணிக்கை செய்துள்ளனர். விதிமுறை மீறல்களைச் சுட்டிக்காட்டி, பணிகளைப் பாதியில் நிறுத்தியும் உள்ளனர்.

குரோம்பேட்டை பகுதியில் அண்மையில் இத்தகைய புகார்கள் எழுந்ததையடுத்து தலைமைச் செயலாளரே நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்துள்ளார். சாலைச் சீரமைப்புப் பணிகளில் சமூகத்தின் கண்காணிப்பு என்பது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், மக்களிடமிருந்து புகார்கள் எழுகின்ற இடங்களிலெல்லாம் தலைமைச் செயலாளரே நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வுசெய்வது அவரது மற்ற பணிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடக்கூடிய அபாயத்தையும் கொண்டிருக்கிறது.

சாலைச் சீரமைப்புப் பணிகளின் கண்காணிப்பை உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொள்வதே முறையானதாக இருக்கமுடியும். மேலும், இரவு நேரங்களிலேயே பெரிதும் சாலைப் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் அப்பணிகளை நேரில் பார்வையிடும் வாய்ப்புகளும் இல்லாமலாகின்றன. சாலைப் பணிகள் நடக்கவுள்ள இடங்களையும் உத்தேசமான நாட்களையும் பற்றி முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்கும் கடமையும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு உண்டு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

விளையாட்டு

59 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்