குடிநீர் வழங்கல் திட்டம்: சுகாதாரத்தை மட்டுமல்ல சமத்துவத்தையும் நிலைநாட்டும்!

By செய்திப்பிரிவு

2019 சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இதுவரை 5 கோடி வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் அளிக்கப்பட்டிருப்பது இந்தியாவின் பொது சுகாதாரக் கட்டமைப்பின் முக்கியமான முன்னகர்வு. மாநில அரசுகளுடன் இணைந்து 2024-க்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலமாகக் குடிநீர் வழங்குவதுதான் இந்தத் திட்டத்தின் இலக்கு. அடுத்த மூன்றாண்டுகளுக்குள் இந்த இலக்கு எட்டப்படாவிட்டாலும்கூட வெகுவிரைவில் அது சாத்தியமாகிவிடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

காந்தியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ஊரகக் குடிநீர் மற்றும் சுகாதாரக் குழுக்களுடன் காணொளியில் உரையாடும்போது ஜல் ஜீவன் திட்டத்தின் வாயிலாகப் பெண்களின் அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் பயனாகப் பெண்கள் குடிநீருக்காகக் குடங்களோடு வெகுதூரம் அலைய வேண்டிய நேரம் மிச்சப்படுத்தப்பட்டு, அந்நேரத்தில் அவர்கள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கவும் வருமானம் ஈட்டக்கூடிய வேலைகளைச் செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

குழாய்களின் வழியாக வீடுகளுக்கு நேரடியாகக் குடிநீர் வழங்குவது என்பது பெண்களின் பணிச் சுமையை மட்டும் குறைக்கவில்லை. ஊரகங்களில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக இன்னமும்கூட பொது நீர்நிலைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் விளிம்புநிலை மக்களுக்குச் சமத்துவத்துக்கான வாய்ப்புகளையும் அது வழங்குகிறது. இயற்கை வளங்களில் ஒன்றான நீராதாரங்களைப் பயன்படுத்தும் முறையானது இந்தியாவில் பிராந்தியங்களுக்கு ஏற்றபடி வேறுபடுகிறது. ஊரகப் பகுதிகளில் குடியிருப்புகள் ஒரே பகுதியில் அமைந்திருப்பதில்லை. ஒரு குடியிருப்பில் வசிப்பவர்கள் குடிநீருக்காக மற்ற குடியிருப்புகளுக்குச் செல்வது பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. இன்னமும்கூட பொதுக் கிணறு அல்லது கை பம்ப் வசதியில்லாத ஊரகப் பகுதிகளும் இருக்கவே செய்கின்றன. அத்தகைய பகுதிகளில் வசிக்கும் பட்டியலினத்தவர்கள் பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டுவருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை நிலை.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், ஊரகப் பகுதியில் உள்ள பட்டியலினத்தவர் வீடுகளில் 28% மட்டுமே வீட்டிலேயே குடிநீர் கிடைக்கப்பெறும் வசதி கொண்டவை என்பது தெரியவந்தது. அதிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பைப் பெற்றவை 19% மட்டுமே. சுத்தமான குடிநீர் வசதியானது உடல்நலப் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. ஆனால், அவ்வசதி அனைவருக்கும் பாரபட்சமின்றிக் கிடைக்க வேண்டும் என்றால், வீடுகளுக்கு நேரடி இணைப்பு அளிப்பதன் மூலமாக மட்டுமே சாத்தியம். அந்த வகையில், ஜல் ஜீவன் திட்டம் கிராமப்புறங்களில் சத்தமின்றி ஒரு மௌனப் புரட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், தவறான நீர்ப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் நீர்க் கசிவு மற்றும் அடைப்புகளை எளிதாகக் கண்டறிந்து, உடனடியாக அவற்றைச் சரிசெய்யவும் குடிநீர்க் குழாய்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுவருகின்றன. குடிநீருக்காக விதிக்கப்படும் கட்டணம், ஏழை எளியவர்களால் இயலக் கூடிய தொகையாக இருப்பதும் முக்கியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்