கேள்விக்குறியாக மாறும் வேளாண் துறை வேலைவாய்ப்பு

By செய்திப்பிரிவு

கடந்த ஆண்டு கரோனா காரணமாகக் கொண்டுவரப்பட்ட பொது முடக்கக் காலத்தில், நாட்டின் பொருளாதார நிலை முற்றிலும் வீழ்ந்துவிடாமல் வேளாண் துறைதான் தாங்கிப் பிடித்தது. ஆனால், இந்த ஆண்டு அதே போல் விவசாயத் துறையின் பங்களிப்பை எதிர்பார்க்க முடியாது. 2019, 2020 ஆண்டுகளைக் காட்டிலும் தென்மேற்குப் பருவமழையின் அளவு குறைந்திருப்பதுதான் அதற்குக் காரணம். ஜூன் தொடங்கி செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலகட்டத்தில், இதுவரையிலான மழைப்பொழிவு நாட்டின் வழக்கமான சராசரி அளவைக் காட்டிலும் 7.9% குறைவாக உள்ளது. நாட்டிலுள்ள பெரும்பாலான அணைக்கட்டுகளில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நீர் இருப்பு நிலையும் குறைவாகவே உள்ளது.

மத்திய அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் காலவாரியான உழைப்புச் சக்தி கணக்கெடுப்பின்படி, ஜூலை 2019-க்கும் ஜூன் 2020-க்கும் இடைப்பட்ட காலத்தில் வேளாண் துறை வேலைவாய்ப்புகள் முந்தைய ஆண்டின் அளவான 42.5%லிருந்து 45.6% ஆக அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் வேளாண் துறையின் பங்களிப்பு குறைந்துவந்த நிலையில், மீண்டும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியது ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்பமாக மதிப்பிடப்படுகிறது. கடந்த இரண்டு நிதியாண்டுகளிலும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியில் பின்னடைவைச் சந்தித்ததோடு முக்கியமான தொழிற்துறைகளில் வேலைவாய்ப்புகளும் பெருமளவில் குறைந்துவிட்டன. உற்பத்தித் தொழில் துறை, கட்டுமானத் துறை, சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்த நிலையில் அவற்றை நம்பி நகரங்களில் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கிராமங்களை நோக்கித் திரும்பினர். பெருந்திரளான உழைப்புச் சக்தி வேளாண் துறைக்கு மடைமாறியது. நல்லதொரு வாய்ப்பாகக் கடந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழையின் அளவும் திருப்திகரமாக அமைந்தது.

இந்தியாவில் வேளாண்மைத் தொழில் பருவமழைகளின் சூதாட்டக் களம் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, இந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழை போதுமானதாக அமையவில்லை. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் மதிப்பீடுகளின்படி, கடந்த மே - ஜூலை மாதங்களில் 12.4 கோடியாக இருந்த வேளாண் துறை வேலைவாய்ப்பு ஆகஸ்ட் மாதத்தில் 11.6 கோடியாகக் குறைந்துள்ளது. பருவ மழையளவு குறைந்ததே வேளாண் துறை வேலைவாய்ப்புகள் குறைந்ததற்கான காரணம் என்று கருதப்படுகிறது. இதன் பாதிப்புகள் இந்த நிதியாண்டு முழுவதிலும் தொடரக் கூடும். எனவே, உற்பத்தித் தொழில் துறை, கட்டுமானத் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதற்கான முயற்சிகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், வடகிழக்குப் பருவமழையையே விவசாயத்துக்குப் பெரிதும் நம்பியிருக்கிறது என்றாலும் பருவமழைகள் எல்லா ஆண்டுகளிலும் ஒரே அளவில் பொழிவதில்லை என்பதையும் சில சமயங்களில் எதிர்பாராத பெருமழைகள் இயற்கைப் பேரிடராக மாறி விவசாயத்தைப் பாதிக்கின்றன என்பதையும் கருத்தில் கொண்டே பொருளாதார மதிப்பீடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

22 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்