மழை வெள்ளம் கற்பிக்கும் பாடம்

By செய்திப்பிரிவு

முற்றிலும் ஸ்தம்பித்துக் கிடக்கிறது தமிழகத்தின் தலைநகரம். வடகிழக்குப் பருவ மழை சென்னையைப் புரட்டிப்போட்டுவிட்டது. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியதால், மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இத்தகவலால் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். நகரின் பல பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துவிட்ட நிலையில், உதவிக்காகக் காத்திருக்கிறார்கள் மக்கள்.

மழையால் பாதிக்கப்படாத இடங்களே சென்னையில் இல்லை எனலாம். பல பகுதிகளில் 10 அடிக்கும் மேல் தண்ணீர் நிற்கிறது. 4 நாட்களாகப் பல பகுதிகளில் மின் இணைப்பு இல்லை. யாரும் யாருடனும் தொடர்புகொள்ள முடியாத நிலை. அவசர உதவிக்குக்கூட யாரிடமும் உதவிகோர முடியாத நிலை.

மழை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை. ஒரு லிட்டர் பால் ரூ. 100-க்கும் அதிகமாக விலை வைத்து விற்கப்படுகிறது. பல ஏ.டி.எம்.கள் மூடிக் கிடக்கின்றன. திறந்திருக்கும் ஏ.டி.எம்.கள் முன்னால் நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கிறார்கள். அதேபோல், பல அலுவலகங்களில் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுவதால் எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் நிரப்பவும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருக்கின்றன. அதேபோல் உணவு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பவர்களையும் பார்க்க முடிந்தது.

சென்னை விமான நிலையம் மழை வெள்ளத்தில் மிதக்கிறது. விமானங்கள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன. வெளியூர்களுக்குச் செல்லும் பல பேருந்துகள் இயங்கவில்லை. ஆட்டோக்களில் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்திக் கேட்கின்றனர். சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப் பூண்டி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் ஆகிய முக்கிய வழித்தடங்களில் புறநகர் மின்சார ரயில்கள் ஓடவில்லை. சென்னை சென்ட்ரலில் இருந்தும் எழும்பூரிலிருந்தும் அனைத்து எக்ஸ்பிரஸ் மெயில் ரயில்களின் சேவையும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால், சென்னை மழை வெள்ளத்திலிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்று நினைத்தவர்களும் வேறு வழியின்றி மினி லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் ஏறி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

மழை, வெள்ளம் காரணமாக கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகமும் மாநகரப் போக்குவரத்துக் கழகமும் முழு அளவில் செயல்பட முடியவில்லை. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான சாலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எல்லா ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியும் குடியிருப்புப் பகுதிகளில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை. மழைநீரும் சாக்கடை நீரும் கலந்து மிகப்பெரிய சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், மாநில அரசு ஆகியவற்றுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. ராணுவத்தின் முப்படைகளும் தேசியப் பேரிடர் மேலாண்மை முகமையும் களத்தில் இறங்கியும் மக்களின் துயர்கள் தொடர்கின்றன. கர்ப்பிணிகளும் முதியவர்களும் முதல் மாடியிலும் இரண்டாவது மாடியிலும் சிக்கிக்கொண்டு தொலைக்காட்சிகள் மூலமாக வேண்டுகோள் விடுத்தும் உதவி சென்றடைய முடியாத நிலையில் மீட்பு, நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.

பல ஆண்டு உழைப்பிலும் சேமிப்பிலும் கட்டிய வீடுகள், வாங்கிய பொருட்கள், வாகனங்கள் தங்கள் கண் முன்னே கடும் சேதத்துக்கு உட்பட்டிருப்பதைத் தாங்க முடியாமல் கதறுபவர்களின் குரல்களைக் கேட்க முடிகிறது. சென்னையில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்களிலிருந்து, பிளாட்ஃபாரங்களில் வசிக்கும் மக்கள் வரை லட்சக்கணக்கானோர் தங்கள் உடைமைகளை இழந்து தவிப்பதைப் பார்க்க முடிகிறது. மழை வெள்ளத்தால் ரூ. 15,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தொழில் கூட்டமைப்பான அசோசேம் மதிப்பிட்டிருக்கிறது. ஆனால், மழை தொடர்வதால் இன்னும் எத்தனை கோடி இழப்பு ஏற்படுமோ தெரியவில்லை.

காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என்று அதிகாரிகளும் அரசுப் பணியாளர்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், மீட்புப் பணிகளும், உணவுப் பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட பணிகளும் இன்னும் பல இடங்களைச் சென்றடையவில்லை. தமிழக அரசுத் தரப்பிலிருந்து தீர்க்கமான நடவடிக்கைகள் எதையும் பார்க்க முடியவில்லை. இதுபோன்ற பேரிடர் காலத்தில் மக்களிடம் அச்சம் பரவாமல் இருக்க வேண்டுமானால், தகவல் தொடர்பு சாதனங்கள் முழுவீச்சில் இயங்க வேண்டியது அவசியம். இத்தனை நாட்கள் மின் இணைப்பு இல்லாமல், என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் மக்கள். பல இடங்களில் நிவாரணப் பணிகள் நடக்கவே இல்லை என்று புகார்கள் வந்திருக்கின்றன. தன்னார்வலர்கள் பலரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நகர்மயமாதல், திட்டமிடப்படாத வளர்ச்சி போன்றவை இந்தப் பேரழிவின் பின்னணியில் இருப்பதை அசோசேம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு தவறுகளைத் திருத்திக்கொண்டு, பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் அதிலிருந்து மீண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

4 hours ago

மேலும்