இஸ்ரேல் -பாலஸ்தீனம் போர் முடிவுக்கு வரட்டும்

By செய்திப்பிரிவு

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் தற்போது நடந்துவரும் மோதல்கள் பெரும் கவலையில் தள்ளுகின்றன. சென்ற வாரம் ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து காஸாவில் இருக்கும் ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் 9 பேர் கொல்லப்பட்டனர். அதையடுத்து காஸா மீது இஸ்ரேல் தொடர்ச்சியாகக் குண்டுகளை வீசிவருகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட ஏறத்தாழ 200 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஜெருசலேமிலும் காஸாவிலும் பீடித்திருக்கும் இந்தப் பிரச்சினைக்கு இஸ்ரேல்தான் பொறுப்பாளி. இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் யூதக் குடியேற்றங்களை இஸ்ரேல் அதிகரித்துக்கொண்டிருந்ததால் அங்கிருக்கும் பாலஸ்தீனர்களிடையே ஏற்கெனவே கசப்புணர்வும் பதற்றமும் காணப்பட்டது. மேலும், கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேல் வன்முறையைப் பிரயோகித்ததும், ஷேக் ஜாரா பகுதியில் உள்ள பாலஸ்தீனக் குடும்பங்களை வெளியேற்றிவிட்டு அங்கே யூதக் குடும்பங்களைக் குடியேற்ற முயன்றதும் மோதல்களுக்குக் காரணமாயின. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியினரின் எதிர்ப்புணர்வைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஹமாஸ் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. ஹமாஸ் இயக்கத்தின் கட்டமைப்பை அழித்தொழித்துவிடுவதாக உறுதிபூண்ட இஸ்ரேல், பதிலுக்குக் கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தியது.

ஹமாஸ் இயக்கத்தினர் நிகழ்த்தும் தாக்குதல்களை சாக்காகக் கொண்டே இஸ்ரேலானது பாலஸ்தீனம் மீது கொடூரமான தாக்குதல் நிகழ்த்துகிறது என்பதை ஹமாஸ் இயக்கத்தினர் உணர வேண்டும். தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் எனும் அணுகுமுறையானது பலவீனமான தரப்பையே மேலும் பாதிப்புக்குள்ளாக்கக்கூடும் என்பதை விவரிக்க வேண்டியது இல்லை. இதற்கிடையே இஸ்ரேலில் சில இடங்களில் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்ட இஸ்ரேலியர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையில் கலவரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதையடுத்து இஸ்ரேலின் சில பகுதிகளில் நெருக்கடிநிலையை அந்நாட்டின் அதிபர் ரூவன் ரிவ்லின் அறிவித்திருக்கிறார். 2000-க்குப் பிறகு மிக மோசமான சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை இஸ்ரேல் எதிர்கொண்டிருக்கிறது. அதன் விளைவுதான், காஸாவை இஸ்ரேல் தகர்த்துக்கொண்டிருப்பது; முந்தைய தாக்குதல்களில் சிக்கிச் சீரழிந்திருக்கும் காஸாவில் கடுமையான உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கு இஸ்ரேலுக்கு இருக்கும் உரிமைக்கு அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் ஆதரவு அளித்திருக்கின்றன. அதே நேரத்தில், இதையே காஸாவின் குடிமக்கள் மீது கண்மூடித்தனமாக வெடிகுண்டுகள் வீசுவதற்கான உரிமையாக இஸ்ரேல் முன்னிறுத்த முடியாது. இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியாக இருக்கும் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் பலவும் இரண்டு தரப்புகளுக்கும் அழுத்தம் கொடுத்து சண்டை நிறுத்தம் ஏற்பட வழிவகுக்க வேண்டும். குறிப்பாக, இஸ்ரேலின் ஆதிக்கப் போக்குக்கு முடிவுகட்ட வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் மேலும் பல உயிர்கள் பலியாகும் சூழலில் சர்வதேச நாடுகள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கலாகாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

28 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்