தனியார் மருத்துவமனைகளும் அரசு கண்காணிப்பில் இருக்கட்டும்

By செய்திப்பிரிவு

தனியார் மருத்துவமனைகளின் கரோனா சிகிச்சைக் கட்டணங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தெரிவித்துள்ள அதிருப்தியானது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படுகிறதா, அரசு அறிவுறுத்தியபடி தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகளில் பாதி கரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துமாறு தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. சிகிச்சைக் கட்டணங்கள் மட்டுமின்றி, உயிர் காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதையும் தமிழக அரசு தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது உடனடி அவசியம்.

தமிழக அரசு ஜூன் 2020-ல் அறிவித்ததன்படி, தனியார் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சம் ரூ.15,000 வரையில் மட்டுமே கட்டணம் விதிக்கப்பட வேண்டும். அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் நாளொன்றுக்கு அதிகபட்சக் கட்டணம் ரூ.7,500. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் நடைமுறையில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கும் இந்த வரைமுறைக்கும் சம்பந்தமே இல்லை. மேலும், சென்னைக்கு வெளியே உள்ள பல நகரங்களில் லேசான பாதிப்புகளுடன் வருபவர்களை உள்நோயாளிகளாகச் சேர்த்துப் பல ஆயிரங்களைக் கறப்பதும், நோய்த் தீவிரம் அதிகமானோரை அரசு மருத்துவமனைகள் பக்கம் தள்ளிவிடுவதுமான ஒரு வழக்கமும் உருவாகிவருகிறது. இத்தகு சூழலில், ‘முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை அளிக்கப்படும்’ என்ற தமிழக அரசு நல்லெண்ணத்தின் அடிப்படையிலான இந்த அறிவிப்பு தனியார் மருத்துவமனைகளின் வேட்டைக்கான துருப்புச்சீட்டு ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்குத் தனியார் மருத்துவமனைகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பதுடன் சுகாதாரத் துறையின் மூலம் அவற்றின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டும்.

உயிர் காக்கும் மருந்துகள் விநியோகமும் விலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால், உயிர் காக்கும் மருந்துகளைக் கூடிய விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டுசேர்க்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட வேண்டும். கள்ளச் சந்தையில் ரெம்டெசிவர் மருந்துகள் விற்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய ஐந்து மையங்களில் ரெம்டெசிவர் மருந்துகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மக்களின் அலைக்கழிப்பை நிச்சயம் குறைக்கக்கூடும்.

மேலதிகம் ஒரு முக்கியமான விஷயம், தீவிர சிகிச்சை தேவைப்படுவர்கள் நீங்கலான 95% கரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சையில் சித்தா முதல் அக்குபஞ்சர் வரையிலான சகல மாற்று மருத்துவமுறைகளையும் முயல முழு உத்வேகம் அளிக்க வேண்டும். இப்படி ஒரு முயற்சி அனுமதிக்கப்படும்போது நோயாளிகளை அணுகுவது தொடர்பில் பொதுவான சில வரையறைகளையும் வகுத்திட வேண்டும். கரோனா தொடர்பில் நாம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள எந்த இடத்திலிருந்தும் நமக்கு ஒரு பிடி கிடைக்கலாம்; அதற்கான வாய்ப்புகளைக் கதவடைத்துவிடக் கூடாது. அதே சமயம், எல்லாவற்றையும் அரசு கண்காணித்திடவும் வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

33 mins ago

வணிகம்

48 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்