இந்தியாவின் கோரிக்கையை ஏற்குமா இலங்கை?

By செய்திப்பிரிவு

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு அந்நாட்டு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். அதே நேரத்தில், இதனால் ஏதும் பலன் இருக்குமா என்பது சந்தேகமே. செப்டம்பர் 26 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான மெய்நிகர் மாநாட்டில் இரண்டு நாடுகளும் சேர்ந்து ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன. ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, அமைதி, மரியாதை போன்றவற்றை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இலங்கை அரசமைப்பின் 13-வது சட்டத் திருத்தத்தைச் செய்வதன் மூலமாக சமரச நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்வதிலும் இந்தியா விருப்பம் கொண்டுள்ளதை அந்த அறிக்கை கூறுகிறது. தமிழர்கள் உள்ளிட்ட எல்லா இனச் சிறுபான்மையினரின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ப இலங்கை நடந்துகொள்ளும் என்று ராஜபக்ச கூறியிருக்கிறார். எனினும், தேர்தலில் இலங்கை மக்கள் அளித்துள்ள தீர்ப்பின்படி இந்த சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உணர்த்துவதுபோல் அவரது பேச்சு இருந்தது.

ராஜபக்சவின் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் 1987-ல் செய்துகொண்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையின்படி மாகாணங்களுக்கு அதிகாரப் பரவல் வழங்கும் இலங்கை அரசமைப்பின் 13-வது சட்டத் திருத்தம் பற்றிய குறிப்பே இல்லை. இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தன் கட்சி நினைத்தபடி சட்டத்திருத்தம் செய்துகொள்ளும் அளவுக்கு ராஜபக்சவிடம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்கிறது. ஆனால், தமிழர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அதிகாரப் பகிர்வு அளிக்கும் முன்னெடுப்புக்கும், மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் இலங்கை அதிபருமான கோத்தபய ராஜபக்சவின் முன்னுரிமைகளுக்கும் இடையே பெரிய இடைவெளி காணப்படுகிறது. 13-வது சட்டத் திருத்தம் இருக்கட்டும், இலங்கையோ மாகாண கவுன்சில் அமைப்பையே ஒழித்துக்கட்டும் நிலையில் இருக்கிறது.

இலங்கையுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவின் போக்கை சீனாவின் செல்வாக்கு தற்போது நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது. சீனாவின் பக்கம் இலங்கை அதிகமாகச் சாய்ந்துவிடாதவாறு இந்தியா பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. 2005-06-ல் இலங்கையில் போர் மறுபடியும் தொடங்கியபோது இலங்கை அரசுக்கு இந்தியா ஆதரவு கொடுத்ததுடன் வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் பிரிப்பதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது. இனரீதியிலான சமரசம் குறித்து இலங்கை கடந்த காலத்தில் அளித்த வாக்குறுதிகளைப் பற்றி உலகம் கண்டுகொள்ளாத தற்போதைய காலத்தில் இலங்கை அரசிடம் வைக்கும் கோரிக்கைகள் எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்று சொல்ல முடியாது. பெரும்பான்மை சிங்களர்களின் ஆதரவு பெற்று ஆட்சியமைத்திருக்கும் ராஜபக்சக்கள் அவர்களைப் பகைத்துக்கொள்ளும்படியாக எந்தக் காரியத்திலும் ஈடுபட மாட்டார்கள். செலாவணிப் பரிமாற்றம், கடனைப் பிறகு செலுத்துவது போன்றவை குறித்து இலங்கை விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியா இன்னமும் முடிவெடுக்கவில்லை. அதிபரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்திய சட்டத்தை ராஜபக்ச அரசு திருத்தியமைக்கப்போகும் சூழலில் இலங்கையில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை இந்தியா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்