வர்த்தக ஒப்பந்தம்: ஒருசார்பாக எப்போதும் இருக்க முடியாது

By செய்திப்பிரிவு

ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிகுந்த நட்புணர்வுடன் கலந்துகொண்டாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சு சுமுகமான உடன்பாட்டுக்கு வழிவகுக்கவில்லை. இதற்குக் காரணம், மிகப் பெரிய வல்லரசான அமெரிக்கா இந்தியச் சந்தையைத் தனக்கு முழுதாகத் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தியதும், தனக்குத் தேவைப்படும் பொருட்களின் விலையைக் குறைத்துத் தருமாறு கூறியதும்தான்.

தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த பொருட்கள் மீது 20% வரியை இந்தியா விதித்ததை விலக்குமாறும், அமெரிக்காவில் தயாராகும் செல்போன்கள், ஈதர்நெட் சுவிட்சுகள் மீதான தீர்வைகளை விலக்கவோ குறைக்கவோ வேண்டும் என்றும் கோருகிறது அமெரிக்கா. மருத்துவத் துறை, பால் பண்ணை மற்றும் வேளாண் பொருட்களுக்கும் இந்தியச் சந்தையைத் திறந்துவிட வேண்டும் என்று அமெரிக்கத் தரப்பு வலியுறுத்தியது. ‘பொது விருப்பப் பட்டியல்படி’ ஜிபிஎஸ் இந்தியப் பண்டங்களுக்கு முன்னர் அளித்த வர்த்தக முன்னுரிமைச் சலுகைகளை மீண்டும் திருப்பியளிக்க வேண்டும் என்று இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் அறிவுசார் சொத்துரிமை, மின்-வணிகம், ‘எச்1பி’ விசா போன்றவையும் பேசி உடன்பாடு காணப்பட வேண்டியிருக்கிறது.

இரு தரப்பும் நடத்திய பேச்சுகளில் கருத்து வேற்றுமைகள் குறைக்கப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார். இந்தியா இறங்கிவந்து விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தாலும், முழுத் திருப்தி கிடைக்கும் வகையில் ஒப்புக்கொண்டால்தான் உடன்பாடு என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. சீனாவுடன் அமெரிக்கா நடத்திவரும் வர்த்தகப் பேச்சுகளிலும் இப்படித்தான் முடிவு இல்லாத முட்டுக்கட்டை நிலை நீடிக்கிறது. சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த தடைகள் மற்றும் மிக அதிகமான வரி விதிப்புகளுக்குப் பதில் சொல்லும் விதமாக அமெரிக்காவுக்கு மிகவும் தேவைப்படும் பொருட்கள் மீது வரியை உயர்த்தி அதைத் திண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எனவேதான், இந்தியாவுடனான உடன்பாட்டையாவது விரைந்து முடிக்க அமெரிக்கா கடந்த வாரங்களில் தீவிரமாகப் பேசியது. ஆனால், தன்னுடைய நிலையிலிருந்து சற்றும் இறங்கிவர அது சம்மதிக்கவில்லை என்பதால் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்துவருகிறது. உற்பத்தி, வேலைவாய்ப்பு, நுகர்வு என்று அனைத்துமே சரிந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கப் பண்டங்களுக்குச் சலுகைகள் காட்டப்பட்டால் அது இந்தியப் பொருளாதாரத்தை மேலும் பாதித்துவிடும். அரசியல்ரீதியாகவும் அது இந்திய அரசுக்குச் சாதகமாக இருக்காது. இரு தரப்பு வர்த்தக உடன்பாடுகள் எப்போதுமே சிக்கலானவை. தனது வலிமை காரணமாக ஒரு நாடு இன்னொன்றை அச்சுறுத்திப் பணியவைக்க முயன்றால், அது இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தமாக இருக்காது. இரு நாடுகளுமே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்பட்டால்தான் ஒப்பந்தம் ஏற்படும். இப்போதைக்கு மிகச் சிறிய அளவில்கூட ஒப்பந்தம் ஏற்படுவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

19 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்