இந்தியா - பூடான் நல்லுறவு என்றென்றும் தொடரட்டும் 

By செய்திப்பிரிவு

பூடானின் தலைநகர் திம்புவுக்கு இரண்டு நாள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி சென்றிருப்பது இந்தியா - பூடான் நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை உறுதிப்படுத்தும் விதத்தில் உள்ளது. 2018 டிசம்பரில் பூடான் பிரதமர் லொடாய் ட்ஷெரிங் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது இந்தியப் பிரதமரின் பயணம் அமைந்திருக்கிறது. 720 மெகாவாட் மாங்தேச்சு நீர் மின் நிலையத்தைத் திறந்துவைத்திருக்கிறார் மோடி. பூடானுக்குப் பெரிய அளவில் வருமானத்தைத் தரும் நீர் மின் நிலையத்தைக் கட்டமைப்பதிலும், அதில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை வாங்குவதிலும் பரஸ்பரம் பயன்பெறும் ஒரு நல்லுறவை, மோடி கூறுவதுபோல் முன்னுதாரணமாகத் திகழும் ஒரு உறவை, இரு நாடுகளுமே வளர்த்தெடுத்துள்ளன.

திறந்த எல்லைகள், நெருக்கமான, இணக்கமான உறவு, வெளியுறவுத் துறையில் பரஸ்பரம் கருத்தறிந்துகொள்ளுதல் போன்றவை இரு நாடுகளுக்கு இடையிலான உறவின் முக்கிய அம்சங்கள். ராணுவரீதியிலான பிரச்சினைகளில் இந்தியாவுக்கு பூடான் அளித்துவரும் சந்தேகத்துக்கு இடமில்லாத ஆதரவு, சர்வதேசக் களத்திலும் ஐநா அளவிலும் மிகவும் முக்கியமானது. அதேபோல், இந்தியா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை எதிர்ப்பதில் பூடானின் தலைமை சிறிதும் தயங்கியதில்லை. உதாரணத்துக்கு, 2003-ல் உல்ஃபா போராளிக் குழுவை விரட்டியதில் அந்த நாட்டின் முன்னாள் அரசரின் பங்கைக் குறிப்பிடலாம். கூடவே, டோக்லாம் பீடபூமியில் சீனத் துருப்புகள் நிறுத்தப்பட்ட விவகாரத்தில், இந்தியா அதை எதிர்த்தபோது பூடான் இந்தியாவுக்குத் துணைநின்றது.
பூடானுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவொன்றும் குறைகளே இல்லாதது என்று சொல்லிவிட முடியாது. இந்தியா தனது மின்சாரக் கொள்முதல் கொள்கையில் செய்த திடீர் மாற்றத்தாலும், அதிக விலைக் கொள்கையாலும் இரு நாடுகள் உறவில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டது. தேசிய மின் தொகுப்பில் இணைவதற்கு பூடானுக்கு இந்தியா அனுமதி மறுத்ததும் இந்தப் பின்னடைவுக்குக் காரணம். அந்தப் பிரச்சினைகள் எல்லாம் தற்போது சரிசெய்யப்பட்டுவருகின்றன.

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவுக் கட்டணம் விதிக்க நினைக்கும் பூடானின் உத்தேசத் திட்டம் இந்தியாவுக்கு உவப்பளிக்காமல் போகலாம். ஆரம்ப காலத்தில் பூடான் மாணவர்கள் இந்தியாவைத் தாண்டி வேறு எங்கும் படிக்கச் சென்றதில்லை. ஆனால், சமீப காலமாக ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் படிப்பதிலேயே அந்நாட்டு மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆகவே, இந்த உறவில் சீரமைக்க வேண்டிய விஷயங்கள் அதிகமாகிவிட்டன.

மிக முக்கியமாக, பூடானுடன் நட்பு பாராட்ட விரும்பும் சில சக்திகள் விஷயத்தில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பூடானுக்கு சீனாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் உயர்மட்டத்தினரின் வருகை நிகழ்ந்ததை நினைவில்கொள்ள வேண்டும். வணிகத்திலும் வெளியுறவுத் துறையில் யாருடன் யாரும் நண்பர்களாக ஆகிக்கொள்ளலாம் என்ற தற்போதைய நிலையில் இந்தியாவும் பூடானும் தங்கள் பரஸ்பர உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

51 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்